October 18, 2021

மோடி மீது காப்பிரைட் புகார் சொல்லும் போட்டோகிராபர்!

இணைய தளங்களில் பயன்படுத்தப்படும் போட்டோக்கள் குறித்த சர்ச்சை எப்போதும் ஓய்வது இல்லை. சில மாதங்களுக்கு முன்னர் குரங்கு ஒன்று தன்னை செல்பியாக படம் எடுக்க, அந்தப் படம் பல இடங்களுக்குச் சுற்றி கடைசியாக விக்கிபீடியாவுக்குச் சென்றது. விக்கிபீடியா குரங்கு செல்பியை பொது பயன்பாட்டுக்கு வெளியிட்டது. இதற்கு அந்தக் கேமராவின் உரிமையாளரான அமெரிக்கர், குரங்கு எடுத்த செல்பிக்கு நான்தான் உரிமையாளர் என்று விக்கிபீடியா மீது வழக்கு போட்டார். இதனால், போட்டோகிராபர்கள் இடையே பரபரப்பு ஏற்பட்டது. இந்த வரிசையில் பிரதமர் மோடியையும் வம்புக்கு இழுத்துள்ளார் இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பகுதியைச் சேர்ந்த போட்டோ கிராபரான பிமல்நேபாள்.
copy pm
சர்வதேச புகழ் பெற்ற நேஷனல் ஜியோகிராபிக் சேனல் மற்றும் ஹார்வார்டு மீடியா உட்பட பல நிறுவனங்களுக்கு பிமல்நேபாள் போட்டோகிராபராக உள்ளார். இந்நிலையில், தான் எடுத்த புகைப்படத்தை இந்திய பிரதமர் மோடி, சிறிது உல்டா செய்து, தனது முகநூல் பக்கத்தில் தீபாவளி வாழ்த்துக்கு பயன்படுத்திக் கொண்டார் என்றும், இதன் மூலம் தனது காப்பி ரைட் உரிமையை அவர் மதிக்கவில்லை என்றும் பிரதமர் மோடி மீது பிமல்நேபாள் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து பிமல் நேபாள் தனது முகநூல் பக்கத்தில் ”இந்திய பிரதமர் மோடி தீபாவளி வாழ்த்து தெரிவிப்பதற்காக என் படத்தை பயன்படுத்தியுள்ளார். ஆனால், அந்தப் படத்தை முழுமையாக பயன்படுத்தாமல், சிறிது மாற்றம் செய்து, அதில் தீபாவளி வாழ்த்துக்களை பதிவு செய்து, தன் முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். உண்மையில், இந்தப் படத்தை கடந்த ஆண்டு நான் என் வீட்டில், என் மகள் உதவியுடன் கிளிக் செய்தேன். தீபாவளி நாளில் என் வீட்டினுள் உள்ள அறையில் மகள் அபீனா வரிசையாக தீபம் ஏற்ற, நான் அதை போட்டோவாக பதிவு செய்தேன்.

இதன் பின்னர் இந்தப் போட்டோக்களை நான் கூகுளில் பதிவேற்றம் செய்தேன். இப்படிப்பட்ட என் படத்தை, எனது அனுமதியின்றி இந்திய பிரதமர் மோடி தன் முகநூல் பக்கத்தில் பயன்படுத்தியுள்ளார். இதன் மூலம் காப்பிரைட் உரிமையை அவர் மீறியுள்ளார். ஆனாலும், மோடி பக்கத்தில் என் படம் பயன்படுத்தப்பட்டது மூலம் நான் உலகப் பிரசித்திப் பெற்ற போட்டோகிராபராக மாறிவிட்டேன்” என்று கூறியுள்ளார்.

பிமல் நேபாளின் இந்தக் கருத்துக்கு பலர் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவரது முகநூல் பக்கத்தில், ”கூகுளில் பதிவேற்றப்பட்டது உங்கள் படம் என்று நிச்சயம் மோடிக்கு தெரியாது. அந்தப் படத்தை அவர் தேர்வு செய்து, சிறிது மாற்றம் செய்து, தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் உங்கள் பெயர் குறிப்பிட வேண்டிய எந்த ஒரு அவசியமும் இல்லை” என்று சிலரும்,

”இந்த விஷயத்தை பெரிது படுத்த வேண்டாம். காப்பி ரைட் சட்டத்தை தெரிந்து கொண்டு, அதற்கு விண்ணப்பிக்க வேண்டும். எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகள் நடக்காமல் தடுக்கலாம். எப்படி இருந்தாலும், மோடியால் நீங்கள் பிரபலம் ஆகிவிட்டீர்கள்”என்று சிலர் ஆதரவுமாக கருத்து பதிவு செய்துள்ளனர்.

நன்றி :http://jannalmedia.com/dpages.php?id=2009