October 24, 2021

மோடி மந்திரிசபை நாளை விஸ்தரிப்பு புதிய மந்திரிகள் யார், யார்?

பிரதமர் நரேந்திர மோடி தனது மந்திரிசபையை விஸ்தரிப்பு செய்வதுடன், மாற்றியும் அமைக்கிறார். இது தொடர்பாக அவர் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை நேற்று முன்தினம் சந்தித்து பேசினார்.ஜனாதிபதி மாளிகையின் தர்பார் மண்டபத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 1 மணிக்கு நடக்கிற விழாவில் புதிய மந்திரிகள் பதவி ஏற்றுக்கொள்கிறார்கள். புதிய மந்திரிகளுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பதவிப்பிரமாணமும், ரகசியக்காப்பு பிரமாணமும் செய்துவைக்கிறார்.
modi nov 8
புதிய மந்திரிகள் பட்டியலில் கோவா மாநில முதல்–மந்திரி மனோகர் பாரிக்கர் இடம் பெறுகிறார். கேபினட் மந்திரியாக பதவி ஏற்க உள்ள அவர், இன்று (சனிக்கிழமை) கோவா முதல்–மந்திரி பதவியை ராஜினாமா செய்கிறார். அங்கு புதிய முதல்–மந்திரியாக மாநில சுகாதார மந்திரி லட்சுமி காந்த் பர்சேகர் தேர்வு செய்யப்படக்கூடும் என தகவல்கள் கூறுகின்றன. மனோகர் பாரிக்கருக்கு முக்கிய இலாகாவான ராணுவ இலாகா ஒதுக்கப்படும் என தகவல்கள் கூறுகின்றன.

தனிப்பொறுப்புடன் கூடிய ராஜாங்க மந்திரிகளாக உள்ள பாரதீய ஜனதா மூத்த தலைவர்கள் மராட்டியத்தின் பிரகாஷ் ஜவடேகர், தமிழ்நாட்டின் நிர்மலா சீதாராமன் ஆகியோர் கேபினட் மந்திரிகளாக பதவி உயர்வு பெறலாம். எனவே அப்படிப்பட்ட பட்சத்தில் அவர்கள் மீண்டும் பதவி ஏற்பார்கள்.

மந்திரி பதவிக்கு பாரதீய ஜனதாவில் இருந்து புதுமுகங்கள் பலரது பெயர்களும் அடிபடுகின்றன.அந்த வகையில், பஞ்சாப் மாநிலம், ஹோஷியார்பூர் தொகுதி எம்.பி. விஜய் சம்ப்லா, பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவரான முக்தர் அப்பாஸ் நக்வி, முன்னாள் மத்திய மந்திரி யஷ்வந்த் சின்காவின் மகன் ஜெயந்த் சின்கா, அரியானாவை சேர்ந்த ஜாட் இனத்தலைவர் பிரேந்தர் சிங், ராஜஸ்தானின் கர்னல் சோனாராம் சவுத்ரி, கஜேந்திர சிங் ஷெகாவத், மராட்டியத்தின் ஹன்ஸ்ராஜ் ஆஹிர் ஆகியோர் பெயர்கள் வலம் வருகின்றன.

மந்திரிசபை விஸ்தரிப்பில், பாரதீய ஜனதா கூட்டணி கட்சிகளுக்கும் பிரதமர் மோடி வாய்ப்பு வழங்கக்கூடும்.தெலுங்குதேசம் கட்சியை பொறுத்தமட்டில் மறைந்த எர்ரன் நாயுடு மகன் ராம் மோகன் நாயுடு அல்லது ஒய்.எஸ்.சவுத்ரிக்கு மந்திரி பதவி கிடைக்கலாம்.சிவசேனா டெல்லி மேல்–சபை எம்.பி. அனில் தேசாய்க்கு மந்திரி பதவி கிடைக்கலாம். ஆனால் மராட்டிய மந்திரிசபையில் சிவசேனா இடம் பெறுவது தொடர்பாக அந்த கட்சி, பாரதீய ஜனதாவுடன் நடத்தி வருகிற பேச்சு வார்த்தையின் முடிவை பொறுத்தே இது அமையும்.மத்திய திட்டக்குழுவுக்கு பதிலாக புதிதாக ஏற்படுத்தப்போகிற அமைப்புக்கு சிவசேனாவின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான சுரேஷ் பிரபு, கேபினட் மந்திரி அந்தஸ்தில் நியமிக்கப்படலாம் என தகவல்கள் கூறுகின்றன.