September 20, 2021

மோடி காய்ச்சல்! ஆதாயம் யாருக்கு?

மோடியை பிரதமர் வேட்பாளர் என்று பாரதிய ஜனதா அறிவித்ததிலேயே ஓர் உளவியல் உள்நோக்கம் உண்டு. ஊடகங்கள் திரும்பத் திரும்ப ‘பிரதமர் வேட்பாளர், பிரதமர் வேட்பாளர்’ என்று சொல்லும்போது அது பார்வையாளரின் மனதில் ஓர் உள் அழுத்தத்தை உருவாக்குகிறது. அது வாக்குச் சாவடியிலும் எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள். அவ்விதம் அது எதிரொலிக்கிறதோ இல்லையோ… பங்குச் சந்தையில் ஏற்கெனவே எதிரொலிக்கத் துவங்கிவிட்டது.
edit - modi wave
அடானி குழுமம் என்பது நரேந்திரமோடியின் டியரஸ்ட் கம்பெனி என்பதை அனைவரும் அறிவார்கள். முந்த்ரா துறைமுகம் மற்று ம் முந்த்ரா சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்க சதுர அடி ஒரு ரூபாய்க்கு இந்த நிறுவனத்திற்கு மோடி அரசு நிலத்தை விற்றதும், அதை வாங்கி அவர்கள் சதுர அடி 100 ரூபாய்க்கு விற்று லாபம் பார்த்ததும் அனைவரும் அறிந்ததுதான். இந்நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். உடனே பங்குச் சந்தையில் அடானி குழும நிறுவன பங்குகளின் விலை சரசரவென ஏறத் தொடங்கியது. மோடி காய்ச்சல் உச்சத்தில் இருக்கும் நேரம் இது என்பதாலும், தேர்தல் நெருங்கிக் கொண்டிருப்பதாலும் இந்த ஏறுமுகம் தொடர்கிறது.

கடந்த வாரம் வெள்ளிக்கிழமையுடன் (7.03.2014) முடிவடைந்த பங்குச் சந்தையின் நிலவரப்படி, அடானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் பங்கு விலை 124% அதிகரித்து, தனது 52 வார உச்ச விலையான 301 ரூபாயைத் தொட்டது. அடானி போர்ட் செஸ் (Adani Port SEZ) நிறுவன பங்கின் விலை 48% அதிகரித்து, அதன் 52 வார உச்சமான 185 ரூபாயைத் தொட்டது. அடானி பவர் நிறுவன பங்கின் விலை 18 சதவிகிதம் அதிகரித்து 39.55 ரூபாயாக அதிகரித்துள்ளது. இந்த ஆண்டில் அதிகம் லாபம் ஈட்டிய 100 நிறுவனங்களை எக்கனாமிக் டைம்ஸ் பட்டியலிட்டுள்ளது. அதில் அடானி குழுமத்தின் மூன்று நிறுவனங்கள் இடம் பிடித்துள்ளன.

மேலும், மோடி பிரதமராக வந்தால் தங்களது பொருளாதார சூறையாடலை விருப்பம் போல நிகழ்த்தலாம் என்ற நம்பிக்கையில், கடந்த பிப்ரவரி மாத மத்தியில் இருந்து கடந்த வாரம் வரை வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் (Foreign institutional investors – FIIs) 9,600 கோடி ரூபாயை இந்தியப் பங்குச் சந்தையில் கொட்டியுள்ளனர். இந்த வெளிநாட்டு முதலீட்டாளர்களின் விருப்பத்திற்குரிய முதலீட்டு நிறுவனமாகவும் அடானி குழும நிறுவனங்களே உள்ளன. உதாரணமாக Adani Enterprise நிறுவனத்தின் 20% பங்குகளும், Adani Port SEZ நிறுவனத்தின் 17% பங்குகளும் , Adani Power நிறுவனத்தின் 6.5% பங்குகளும் FIIs வசம் உள்ளது. “அடுத்து அமையப்போகும் அரசின் கொள்கை முடிவுகளில் ஏதேனும் மாற்றம் நிகழ்ந்தால் அதனால் அதிகம் லாபம் ஈட்டப்போவது அடானி குழும நிறுவனங்களாகவே இருக்கும்” என்கிறார் ரெலிகர் கேப்பிடல் மார்க்கெட் நிறுவன இயக்குநரான தீர்த்தங்கர் பட்நாயக்.

அடானி முதலாளி கௌதம் அடானி வழங்கியுள்ள விமானத்தில்தான், நரேந்திர மோடி நாடு முழுக்கப் பறக்கிறார். கர்நாடகாவுக்குப் பிரசாரத்திற்கு வந்தபோது Challenger 605 என்ற அடானி விமானத்தில்தான் வந்திறங்கினார். அந்தப் புகைப்படத்தை கர்நாடக மாநில பா.ஜ.க. தலைவர் பிரஹ்லால் ஜோஸியே அவரது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுளார்.

‘மோடிக்கு நெருக்கம் என்று சொல்லப்படும் ஒரு தனியார் நிறுவன விமானத்தில் இப்படி வெளிப்படையாக வந்து இறங்குகிறோமே’ என்ற கூச்சம் மோடிக்கு்ம் இல்லை; அந்தப் புகைப்படத்தை வெளியிட்ட பிரஹ்லாலுக்கும் இல்லை. மூடு மந்திரங்கள் எதுவும் தேவைப்படாமல் பச்சையாக வெளிப்படுத்தும் இடத்துக்கு இவர்கள் வந்து சேர்ந்துவிட்டனர். அமெரிக்கத் தூதர் நான்ஸி பாவெல் சமீபத்தில் மோடியை சந்தித்தது நினைவிருக்கலாம். அன்று மோடியை சந்தித்தப் பிறகு ஒரு பார்ட்டியில் கலந்துகொண்டார் நான்ஸி. அந்த பார்ட்டியை ஏற்பாடு செய்தவர் கௌதம் அடானி.

மோடி மோடி வந்தால் யாருக்கு ஆதாயம் என்ற கேள்விக்கு மிகவும் வெளிப்படையாக பதில் தருகின்றன இந்த செய்திகள். பாரதிய ஜனதா என்ற கட்சியை வெறுமனே இந்துத்துவ சிமிழுக்குள் மட்டும் அடைத்துப் பார்ப்பது, அதன் பிரமாண்டத்தை சுருக்கிப் பார்ப்பதாகிவிடும். மன்மோகன் தயங்கி தயங்கி அமல்படுத்திய தனியார்மய, தாராளமய கொள்கைகளை இன்னும் முழுவேகத்தில் தேசம் முழுமைக்கும் விரிவுப்படுத்தவே மோடியை சந்தைப்படுத்துகின்றனர். முதலாளித்துவத்தின் இதுவரையிலான லாபவெறிக்கு மன்மோகன் பயன்பட்டார். இப்போது இந்த நாடு, ஒட்டக் கறக்கப்பட்ட பசுமாடு. இதற்கு மேலும் இதில் இருந்து பால் கறக்கவும், சுரக்க வில்லையெனில் அதன் மடியை அறுக்கவும் ஓர் ஈவிரக்கமற்ற பாசிஸ்ட் தேவை. அதற்கு மோடியை விட பொருத்தமான நபர் யார்?

மேலும்: http://articles.economictimes.indiatimes.com/2014-03-08/news/48029146_1_adani-enterprise-adani-group-adani-power http://www.truthofgujarat.com/official-airlines-narendra-modi-adani-airlines/

http://www.truthofgujarat.com/official-airlines-narendra-modi-adani-airlines/

நன்றி : பாரதி தம்பி @http://bharathithambi.com/?p=359