September 20, 2021

மோடி பேஸ்புக் மார்க்-குடன் நடத்தும் கலந்துரையாடலில் பங்கேற்க உங்களுக்கும் ஒரு வாய்ப்பு

நம்ம பிரதமர் நரேந்திர மோடி இம்மாதம் 27-ம் தேதி கலிஃபோர்னியாவில் உள்ள பேஸ்புக் நிறுவனத்தின் தலைமையகம் சென்று பார்வையிடுகிறார். அப்போது, கேள்வி – பதில் கலந்துரையாடலிலும் அவர் கலந்துகொள்ளவுள்ளதாக, பேஸ்புக் தலைமை செயல் அதிகாரி மார்க் ஸக்கர் பெர்க் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார்.
modi mark sep 13
இது தொடர்பாக மார்க் தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்த பதிவில், “இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இம்மாத இறுதியில் ஃபேஸ்புக் தலைமையகத்துக்கு வருகை தந்து, டவுன்ஹால் கேள்வி – பதில் நிகழ்ச்சியில் பங்கேற்பது மிகுந்த உற்சாகத்தைத் தருகிறது” என்று குறிப்பிட்டுள்ளார். இதையொட்டி, தங்கள் இருவரிடமும் கேட்க விரும்பும் கேள்விகளை அனுப்புமாறு பேஸ்புக் பயனாளிகளிடம் மார்க் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த நிகழ்ச்சி பிரதமர் நரேந்திர மோடியின் சமூக வலைதள பக்கங்களில் நேரலையாக ஒளிபரப்பாகும்.

கடந்த ஆண்டு மோடியை சந்தித்ததை நினைவுகூர்ந்த மார்க், “அவரை இங்கே பேஸ்புக் தலைமையகத்துக்கு வரவேற்பதை கவுரமாகக் கருதுகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து, மார்க் ஸக்கர்பெர்க்கின் அழைப்பை ஏற்றது குறித்து பிரதமர் நரேந்திர மோடி நெகிழ்ச்சியுடன் ட்விட்டரில் தகவல் பகிர்ந்துள்ளார். “இம்மாதம் 27-ம் தேதி இந்திய நேரப்படி இரவு 10 மணிக்கு டவுன்ஹால் கேள்வி – பதில் பகுதியில் கலந்துகொள்வதற்காக, பேஸ்புக் தலைமையகத்துக்கு எனக்கு அழைப்பு விடுத்த மார்க் ஸக்கர் பெர்க்குக்கு நன்றி” என்று மோடி குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பிரதமர் தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிடும்போது, “பல விரிவான தளங்களை உள்ளடக்கிய இந்த கலைந்துரையாடல் நிச்சயம் மறக்க முடியாததாக இருக்கும். உங்களது (இணையவாசிகள்) பங்களிப்பு இல்லாமல் இது முழுமையடையாது. உங்கள் கேள்விகளை பேஸ்புக்கில் பகிருங்கள். நரேந்திர மோடி மொபைல் ஆப்-(https://play.google.com/store/apps/details?id=com.narendramodiapp&hl=en)பிலும் கேள்விகளை அனுப்பலாம்” என்று மோடி கூறியுள்ளார்.