September 20, 2021

மோடியை பிடித்து எங்களிடம் கொடுத்தாலும் ரூ.100 கோடி பரிசு!- பாக். கட்சி பேச்சு

பாகிஸ்தானிலும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியிலும் ஜமாத்–இ–இஸ்லாமி கட்சி உள்ளது. பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் 4 எம்.பி.க்களை வைத்துள்ள இக்கட்சி மத ரீதியாகவும், தீவிரவாதிகளுக்கு ஆதரவாகவும் செயல்பட்டு வருகிறது. இக்கட்சியின் தலைவர் சிராஜ் அல்–ஹக் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ராவல்கோட்டில் நடந்த பேரணியில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது,”ஹிஸ்புல் முஜாகிதீன் தலைவர் சையது ஜலாகுதீன் போன்ற ஜிகாத் தலைவர்களை கைது செய்ய இந்தியா முயற்சி செய்து வருகிறது. அவர்களின் இந்த முயற்சிக்கு ஒரு போதும் வெற்றி கிடைக்காது. எங்கள் ஜிகாதிகளை உங்களால் பிடிக்க முடியாது. ஹிஸ்புல் முஜாகிதீன் தலைவர் சையது ஜலாகுதீனை பிடித்துக் கொடுப்பவர்களுக்கு மோடி அரசு ரூ.50 கோடி பரிசு தொகை அறிவித்து உள்ளது. நான் சொல்கிறேன். இது ஒரு போதும் நடக்காது. இந்திய பிரதமர் நரேந்திரமோடியை யார் பிடித்து எங்களிடம் கொடுத்தாலும் அவர்களுக்கு ரூ.100 கோடி பரிசை எங்கள் இயக்கம் வழங்கும்.
modi vs pak
காஷ்மீர் பிரச்சினை நீண்ட காலமாக இருந்து வரும் விவகாரம் ஆகும். இந்த பிரச்சினையில் இந்தியாவுக்கு உதவவோ, இந்தியாவுடன் நட்புறவு கொள்ளவோ பாகிஸ்தான் அரசியல்வாதிகள் விரும்பினால் அவர்கள் கண்டனத்திற்குள்ளாவார்கள். இவர்கள் நாட்டின் தேச துரோகியாக கருதப்படுவார்கள். இந்தியாவை விரும்பும் இவர்களுக்கு பாகிஸ்தானில் இடம் இல்லை. இந்துஸ்தானுடன் யார் நட்புக் கொள்ள விரும்புகிறார்களோ, அவர்கள் டெல்லி, மும்பைக்கு போகட்டும். அவர்களுக்கு இஸ்லாமாபாத்தில் இடம் இல்லை.

காஷ்மீரிலும் குஜராத்திலும் நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்படுவதற்கு மோடியே காரணமாகும். காஷ்மீரில் நடக்கும் கொடுமைகளை பார்த்து பாகிஸ்தான் அரசியல்வாதிகள் கண்டு கொள்ளாமல் இருந்து வருகின்றனர். காஷ்மீருக்கு விடுதலை தரும் பட்சத்தில்தான் பாகிஸ்தான் இந்தியாவுடன் நட்பு வைத்து கொள்ள வேண்டும். வர்த்தக மேம்பாட்டுக்காக இந்தியாவை நட்பு நாடு என்று பாகிஸ்தானின் அரசியல் கட்சியினர் சிலர் கூறுவது வெட்கக்கேடானது. காஷ்மீரை இந்தியாவிடம் இருந்து பிரித்த பிறகே நட்பு பற்றி பேச வேண்டும்” என்று அவர் பேசினார்.