September 20, 2021

மோடிக்கும், யசோதா பென்னுக்கும் நடந்தது பால்ய திருமணம்! – சகோதரர் விளக்கம்

”அப்போது இருந்த சமூக வழக்கத்தின்படி மிகவும் சிறிய வயதிலேயே நரேந்திர மோடிக்கும், யசோதா பென்னுக்கும் திருமணம் செய்து வைத்துவிட்டனர்.தங்களின் சமூகக் கடமையை நிறைவேற்ற வேண்டும் என்ற நோக்கில் எங்களின் பெற்றோர் இவ்வாறு செய்துவிட்டனர். அன்றைய சமூக நடைமுறையையொட்டி சம்பிரதாயத்திற்காக இந்த திருமணம் நடைபெற்றது.ஆனால், அதில் விருப்பமில்லாத மோடி, இந்த உலகையே தனது குடும்பமாக வரித்துக்கொண்டு வீட்டை விட்டுச் சென்று விட்டார். அதற்கு பின்பு, குடும்பத்தினருடன் அவர் தொடர்பு எதையும் வைத்துக் கொள்ளவில்லை” என்று மோடியின் சகோதரர் சோமாபாய் விளக்கம் அளித்துள்ளார்.
Modi_with wife
இது தொடர்பாக மோடியின் சகோதரர் சோமாபாயின் அறிக்கையை அனைத்து ஊடகங் களுக்கும் பாரதிய ஜனதா கட்சி அனுப்பிவைத்தது.அதில்“எங்களின் பெற்றோர் போதிய கல்வியறிவு இல்லாதவர்கள். நாங்கள் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.அப்போது இருந்த சமூக வழக்கத்தின்படி மிகவும் சிறிய வயதிலேயே நரேந்திர மோடிக்கும், யசோதா பென்னுக்கும் திருமணம் செய்து வைத்துவிட்டனர்.தங்களின் சமூகக் கடமையை நிறைவேற்ற வேண்டும் என்ற நோக்கில் எங்களின் பெற்றோர் இவ்வாறு செய்துவிட்டனர். அன்றைய சமூக நடைமுறையையொட்டி சம்பிரதாயத்திற்காக இந்த திருமணம் நடைபெற்றது.

ஆனால், அதில் விருப்பமில்லாத மோடி, இந்த உலகையே தனது குடும்பமாக வரித்துக்கொண்டு வீட்டை விட்டுச் சென்று விட்டார். அதற்கு பின்பு, குடும்பத்தினருடன் அவர் தொடர்பு எதையும் வைத்துக் கொள்ளவில்லை. தேசத்திற்கு சேவை செய்வதே அவரின் ஒரே விருப்பம்.

மோடி சென்ற பின், யசோதாபென் தனது தந்தையின் வீட்டில் வசித்து வருகிறார். ஆசிரியையாக பணிபுரிந்து, பின்னர் ஓய்வு பெற்றுவிட்டார். 45 ஆண்டுகளுக்கு முன்பு வைதீகமான குடும்பம் ஒன்றில் நடந்த திருமணம் என்ற பின்னணியில் இந்த விவகாரத்தை அணுக வேண்டும்.இந்த பழைய சம்பவத்தின் அடிப்படையில் நரேந்திர மோடியின் இப்போதைய சமூக அந்தஸ்தை எடை போடக் கூடாது.எங்கள் பெற்றோருக்கு பிறந்த ஆறு குழந்தைகளில் நரேந்திர மோடி வித்தியாசமான வர். நாட்டுக்கு சேவை செய்வதில் அவர் தீவிரமாக இருந்தார். புத்தர், சுவாமி விவேகானந்தர் ஆகியோரின் உபதேசங்களில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார்” என்றார்.

மோடியின் மற்றொரு சகோதரர் பிரகலாத் கூறுகையில், “தனக்கு திருமணமாகவில்லை என்று மோடி ஒருபோதும் கூறியதில்லை. சில காரணங்களுக்காக தனது திருமணம் பற்றிய தகவலை இதற்கு முன்பு நடைபெற்ற தேர்தல்களின்போது தாக்கல் செய்த வேட்புமனுக்களில் அவர் குறிப்பிடாமல் இருந்துள்ளார். இச்செயலை வேண்டுமென்றே செய்தாரா, இல்லையா என்பதெல்லாம் அவரின் சொந்த விஷயம்” என்றார்.

இதனிடையே னியார் டெலிவிஷனுக்கு பேட்டி அளித்த யசோதா பென்னின் தம்பி கமலேஷ் மோடி, தனது அக்காள் யசோதா பென், கணவர் நரேந்திரமோடி மீது மிகுந்த மதிப்பும், மரியாதையும் வைத்திருப்பதாகவும், அவர் பிரதமர் ஆவதை பார்க்க ஆவலோடு காத்து இருப்பதாகவும், அதுவரை அரிசி சாதம் சாப்பிடுவது இல்லை என்றும், காலணிகள் அணிவது இல்லை என்றும் உறுதி பூண்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.

தனது கணவரை பற்றி பத்திரிகைகளில் வரும் செய்திகளை யசோதா பென் படித்து அறிவதாகவும் கமலேஷ் மோடி கூறினார். 1965-ம் ஆண்டு நரேந்திரமோடியுடன் யசோதா பென்னுக்கு திருமணம் நடந்ததாகவும் கமலேஷ் மோடி தெரிவித்தார். குஜராத்தின் வடபகுதியில் உள்ள பிரம்மன்வதா என்ற நகரில் யசோதா பென் தற்போது வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்க்து.