September 17, 2021

”மொசக்குட்டி” ஷுட்டிங் ஸ்பாட் திரில்லிங்!

ஒளிப்பதிவாளர் ஜீவன் டைரக்ட் செய்து வரும் படம் மொசக்குட்டி. கூத்துப்பட்டறை மாணவர் வீரா ஹீரோ, சாட்டை மகிமா ஹீரோயின். பசுபதி, செண்ட்ராயன் உள்பட பலர் நடிக்கும் இப்படம் பற்றி இயக்குநரிடம் கேட்ட போது,:மொசக்குட்டி இயக்குநர் ஜீவன் கூறியதாவது ……
அறிமுக நாயகன் வீரா,பசுபதி,மதுமிதா, சிசர் மனோகர் மற்றும் இருபது பள்ளிக்குழந்தைகள் சம்மந்தப்பட்ட ஜீப் ஆக்ஸிடெண்ட் காட்சி ஒன்றை கேரளா முணாரில் பத்து நாட்கள் படமாக்கினோம். அதன் பிறகு சொர்னூரில் 15 நாட்கள் ஷெட்யூல் இருந்தது அதற்காக மொத்த யூனிட்டும் சொர்னூர் வந்து சேர்ந்தோம். அந்த பதினைந்து நாட்களில் பத்து நாட்களுக்கு தினமும் மூன்று யானைகள் தேவைப்பட்டது, தயாரிப்பாளரும் மூன்று யானைகள் வரவழைத்தார். கதைப்படி அந்த யானைகள் பசுபதிக்கு சொந்தமானது, யானைகளோடு அவர் நெருங்கி பழக வேண்டும் என்பதற்காக ஏராளமான வாழைப்பழத்தார் வரவழைக்கப்பட்டு பசுபதி கையாலேயே யானைக்கு கொடுத்தார்.


படப்பிடிப்பும் நல்லபடியாக போய்க்கொண்டிருந்தது.நான்காவது நாள் இரண்டு யானை மட்டும் வந்திருந்தது, கன்டினியூட்டி இருப்பதால் கண்டிப்பாக மூன்று யானைகளும் வந்தால்தான் எடுக்க முடியும் என்று சொல்லிவிட்டேன்.. தயாரிப்பாளர் லோக்கல் மேனேஜரைக் கூப்பிட்டு என்ன சொன்னார் என்று தெரியவில்லை, அடுத்த ஒருமணி நேரத்தில் மற்றொரு யானையும் ஸ்பாட்டுக்கு வந்தது படப்பிடிப்பை ஆரம்பித்தோம்.பசுபதி, எம்.எஸ்.பாஸ்கர் காம்பிநேஷனில் மூன்று யானைகளையும் வைத்து நான் ஷாட் எடுத்துக்கொண்டிருந்தேன். மூன்று யானைப்பாகன்களும் ஒரு ஓரமாக நின்று, மூன்றாவதாக வந்த யானையை பார்ப்பது பசுபதியை பார்ப்பது, எங்களை பார்ப்பது இப்படியே மாறி மாறி..திகிலோடு பார்த்து மலையாளத்தில் ஏதோ ரகசியமாக பேசிக்கொண்டிருந்தார்கள். எனது இணை இயக்குநர் காவியரசனுக்கு கொஞ்சம் மலையாளம் தெரியும்,

யானைப்பாகன்கள் பேசிக்கொண்டிருந்ததை கவனித்து விட்டு என்னிடம் வந்து சொன்னார், எனக்கு நெஞ்சு பகீரென்றது … மூன்றாவதாக வந்த யானை மதம் பிடித்த யானையாம்.. அதற்கு முந்தய இரண்டு மாதங்களாக சிகிச்சை கொடுத்து கொண்டிருக்கிறார்களாம். சரியாகிவிட்டது என்று நினைத்து முதல் மூன்று நாட்கள் கொண்டுவந்துவிட்டார்கள் .. ஆனால் முற்றிலும் குணமாகவில்லை, நாங்களும் அது தெரியாமல் முன்று நாட்கள் அந்த யானையை வைத்து படப்பிடிப்பு நடத்தியிருக்கிறோம்.

பசுபதி என்னிடம் வந்து, என்ன ரகசியமா பேசுறீங்க.. என்று கேட்டார். நான் விஷயத்தை சொன்னேன்.. மனுஷன் ஆடிப் போய்விட்டார், அவரிடம் சொல்லி விட்டு திரும்பிப் பார்த்தேன் என் உதவியாளர்கள் உட்பட யாருமே ஸ்பாட்டில் இல்லை. அதன்பிறகு அன்று பேக்கப் செய்துவிட்டோம். அடுத்த நாள் ஏர்ணாகுளத்தில் இருந்து இன்னொரு யானை வரவழைத்து மீதி ஷெட்யூலையும் முடித்துவிட்டு திரும்பினோம்.. அதை இப்ப நினைத்தாலும் படபடப்பாக இருக்கிறது.”என்றார்