September 24, 2021

மைனர் குற்றவாளிகள் அதிகரிப்பு!- மேலவையில் மேனகா காந்தி தகவல்

“16-18 வயது கொண்ட மைனர்கள் மேற்கொள்ளும் குற்ற சதவீதம் ஆனது, அனைத்து வயதினராலும் மேற்கொள்ளப்படும் மொத்த குற்ற செயல்களை காட்டிலும் அதிகரித்துள்ளது. அதாவது, கடந்த 2002ம் ஆண்டில் 48.7 சதவீதமாக இருந்த குற்ற சதவீதம் 2013ம் ஆண்டில் 66.3 சதவீதமாக அதிகரித்துள்ளது என்றும் பெண்களின் நன்மதிப்பை குலைக்கும் நோக்கில் இளைஞர்கள் வன்முறையில் ஈடுபடும் குற்றங்கள் கடந்த 2013ம் ஆண்டில் அதற்கு முந்தைய 2012ம் ஆண்டை காட்டிலும் 132 சதவீதம் அதிகரித்துள்ளது””எனவும் பார்லிமெண்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
juvalin india
மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை மந்திரி மேனகா சஞ்சய் காந்தி தேசிய குற்ற பதிவுகள் துறையின் தகவல்களை அடிப்படையாக கொண்டு மேலவையில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கடந்த 2012ம் ஆண்டுடன் ஒப்பிடும்பொழுது, 2013ம் ஆண்டில் பெண்களுக்கு எதிராக அவர்களது நன்மதிப்பை குலைக்கும் செயலில் இளைஞர்கள் ஈடுபடுவது தொடர்பான குற்றங்கள் 132 சதவீதம் அதிகரித்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

16-18 வயது கொண்டவர்கள் மேற்கொள்ளும் குற்ற சதவீதம் ஆனது, அனைத்து வயதினராலும் மேற்கொள்ளப்படும் மொத்த குற்ற செயல்களை காட்டிலும் அதிகரித்துள்ளது. அதாவது, கடந்த 2002ம் ஆண்டில் 48.7 சதவீதமாக இருந்த குற்ற சதவீதம் 2013ம் ஆண்டில் 66.3 சதவீதமாக அதிகரித்துள்ளது.

வன்முறையால் பாதிக்கப்படும் பெண்களுக்கு உதவி மற்றும் ஆதரவு அளிக்கும் விதமாக, நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் சேர்த்து 660 இடங்களில் பல கட்டங்களில், ஒன் ஸ்டாப் சென்டர் என்ற திட்டத்தை செயல்படுத்த தனது அமைச்சகம் கருத்தில் கொண்டுள்ளது என்று மற்றொரு கேள்விக்கு பதிலளித்து பேசுகையில் அவர் கூறியுள்ளார்.

மருத்துவ உதவி மற்றும் காவல் துறை உதவி, சட்டபூர்வ ஆலோசனை வழங்கும் மேலாண்மை திட்டம், உளவியல்-சமுதாய ஆலோசனை மற்றும் அவசியப்பட்டால் தற்காலிக புகலிடம் வழங்குதல் ஆகிய வசதிகளை வழங்கும் நோக்கத்தை மையங்கள் கொண்டிருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.