October 22, 2021

மைக்ரோசாப்ட் இயங்குதளங்களில் கடைசி பதிப்பு விண்டோஸ் 10 -தான்!

பத்தாண்டுகளுக்கு முன்னால், அனைத்து டிஜிட்டல் சாதனங்களிலும், பெரும்பாலும் டெஸ்க்டாப் மற்றும் லேப்டாப் கம்ப்யூட்டர்களில், 90% விண்டோஸ் இயக்கமே இயங்கியது. அதன் பின்னர் வந்த ஸ்மார்ட் போன், டேப்ளட் ஆகிய டிஜிட்டல் சாதனங்களில், ஐ.ஓ.எஸ். மற்றும் ஆண்ட்ராய்ட் இயங்கியதால், டிஜிட்டல் சாதனங்களில் விண்டோஸ் இயக்கத்திற்கான பங்கு 15% ஆகக் குறைந்தது. இதனைச் சரி செய்து உயர்த்தும் பணியில், விண்டோஸ் 10 உருவாக்ப்பட்டுள்ளது.
Windows10
ஏற்கனவே வெளியான தொழில் நுட்ப பிரிவினருக்கான முன்னோட்ட பதிப்பில், மைக்ரோசாப்ட் விண்டோஸ் 8 சிஸ்டத்தில் ஏற்படுத்திய தவறுகள் அனைத்தையும் சரி செய்தது. தற்போதைய, நுகர்வோருக்கான சோதனைத் தொகுப்பில், ஆச்சரியப்படத்தக்க வகையில் பல புதிய வசதிகளை நுகர்வோருக்குத் தந்துள்ளது. தொழில் நுட்ப பிரிவினருக்கான முன்னோட்ட பதிப்பினைப் பல லட்சம் பேர் சோதனை செய்து தங்கள் பின்னூட்டங்களைத் தந்தனர். இவர்களை முறைப்படுத்துவதற்காகவே, ‘விண்டோஸ் இன்சைடர் திட்டம்’ (“insiders”)என்ற ஒன்றை மைக்ரோசாப்ட் சென்ற ஆண்டில் தொடங்கி, இன்னும் இயக்கிக் கொண்டுள்ளது.

மேலும் பலரும் எதிர்பார்த்துக் கேட்டுக் கொண்டது போல, விண்டோஸ் 10 பதிப்பு, விண்டோஸ் 7 மற்றும் அடுத்து வந்த ஆப்பரேட்டிங் சிஸ்டங்களைப் பயன்படுத்துவோருக்கு இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றை இயக்கும் அனைத்து கம்ப்யூட்டர்களையும், விண்டோஸ் 10 சிஸ்டத்திற்கு அப்கிரேட் செய்து விடலாம்.

இதனிடையே மைக்ரோசாப்ட்டின் இயங்குதளத்தில்(OS) விண்டோஸ் 10 தான் கடைசி என்ற அறிவிப்பு, டெக்(Technology) உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்படி என்றால் இனி மைக்ரோசாப்ட் இயங்குதளங்களை உருவாக்காதா? என்ற பலரின் கேள்விக்கு மைக்ரோசாப்ட் நிறுவனம் பதிலளித்துள்ளது.

சமீபத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ‘இக்னைட்’ (Ignite) தொழில் நுட்ப மாநாடு சிகாகோவில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் உயர் அதிகாரி ஜெர்ரி நிக்சன், “தற்போது நாங்கள் விண்டோஸ் 10-ஐ வெளியிடுகிறோம். இதுதான் மைக்ரோசாப்ட் இயங்குதளங்களில் கடைசி பதிப்பு(last version). இதற்கடுத்து எந்த இயங்குதளமும் வெளிவராது. இதனால், விண்டோஸ் 10-க்காக நாங்கள் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம்” என்று தெரிவித்தார்.

இதனால் மைக்ரோசாப்ட் இனி இயங்குதளங்களையே வெளியிடாதா? என்று மாநாட்டுக்கு வந்திருந்த தொழில் நுட்ப வல்லுநர்கள் பரபரக்க ”கடந்த வருடம் விண்டோஸ் 8.1-ஐ வெளியிடும் போது விண்டோஸ் 10-க்கான வேலையை ரகசியமாக செய்து வந்தோம். தற்போது விண்டோஸ் 10 க்கு அடுத்து புதுப்புது பதிப்புகளை வெளியிடாமல் விண்டோஸ் 10 இயங்குதளத்தையே தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்றபடி அப்டேட் செய்ய இருக்கிறோம்” என்று கூறி அனைவரையும் கூல் செய்துள்ளார் ஜெர்ரி நிக்சன்.