September 18, 2021

மேலும் பல மருந்து,மாத்திரைகள் மத்திய அரசின் விலை கட்டுப்பாட்டுக்குள் வந்தன!

சர்வதேச மருந்து சந்தையில் இந்தியா முதலிடத்தில் இருந்தாலும், போன எட்டாண்டுகளில் உள் நாட்டு மருந்து சந்தையில் விலை உயர்வு என்பது கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையொட்டி நடந்த ஒரு வழக்கில் மக்களுக்கு குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் கடந்த ஆண்டு உத்தரவிட்டது.இதையடுத்து, மத்திய அரசு குறைந்த விலையில் விற்பனை செய்ய வேண்டிய பட்டியலில் 348 மருந்துகளை கொண்டுவந்த போதிலும், அதில் பல அத்யாவசிய,முக்கிய மருந்துகள் இல்லை என்று குற்றம் சாட்டு எழுந்தது.இதன் விளைவாக, ஒரே வகை மூலப்பொருள் கொண்ட மருந்துகளை எத்தனை நிறுவனங்கள் தயாரித்தாலும், அவை அனைத்தும் பொதுவானதொரு உச்சபட்ச விலையில்தான் விற்கப்பட வேண்டும் என மத்திய அரசு அறிவித்தது.
medicine dec 12
இது தொடர்பான விலையை நிர்ணயம் செய்து கண்காணிக்க தேசிய மருந்து விலை நிர்ணய குழுமம் என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த குழுமத்தின் பரிந்துரையின் பேரில் ஏற்கனவே சுமார் 450 வகை மருந்துப் பொருட்களுக்கு விலை கட்டுப்பாடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், வலி நிவாரணி, நோய் எதிர்ப்பு சக்தி மிக்க மருந்துகள், புற்று நோய் சிகிச்சை மற்றும் தோல் நோய் சிகிச்சை ஆகியவற்றுக்காக பயன்படுத்தப்படுபவை உள்ளிட்ட மேலும் 52 மருந்து வகைகள் மத்திய அரசின் விலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது.

’பாரஸெட்டமால், க்ளுகோஸ், அமாக்ஸிசில்லின், டையஸெபாம், கோடிஐன் பாஸ்பேட், சிப்ரோஃப்ளாக்ஸாசின், லோஸார்டன் மற்றும் டைக்ளோஃபெனாக்’ போன்றவை இந்த புதிய பட்டியலில் இடம் பெற்றுள்ள சில முக்கிய மருந்துகளாகும்.தற்போதைய இந்திய நாட்டில்…

4.1 கோடி மக்கள் சர்க்கரை நோயாலும்,

6 கோடி பேர் ரத்த அழுத்த நோயினாலும்,

5.7 கோடி பேர் இருதய நோயினாலும்

22 லட்சம் பேர் காச நோயினாலும்,

11 லட்சம் பேர் புற்றுநோயாலும்,

22 லட்சம் பேர் எயிட்ஸ் நோயினாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கொஞ்சம் ஆறுதல் அளிக்கும் விஷமிது என்று தெரிகிறது