September 21, 2021

மேற்குத் தொடர்ச்சி மலைக்கு அழிவா?

மேற்குத்தொடர்ச்சி மலைகள் இமயத்தைவிட காலத்தினால் மூத்தது. இந்த மலைத்தொடரில் 126 ஆறுகள், பல சிற்றாறுகள், 29 பெரிய நீர்வீழ்ச்சிகள், சுணைகள், 50க்கும் அதிகமான அணைக்கட்டுகள் மற்றும் கொடைக்கானல், உதகை, மூனார், நீலகிரி போன்றபல மலைவாசஸ்தலங்கள், பசுமை நிறைந்த காடுகளை கொண்டடங்கியது.தமிழ் பிறந்த தொட்டிலாக தென்கோடியில் அகஸ்தியர் வாழ்ந்த பொதிகை மலையிலிருந்து வரும் தென்றலுக்கு இணையாக எதுவுமில்லை. மாமதுரைப் பாண்டியன் அவையில் நீதிகேட்டு இறுதியில் கற்புக்கரசி கண்ணகி சென்றது மேற்குத்தொடர்ச்சி மலைப்பள்ளத்தாக்கில் அமைந்துள்ள கம்பம் பகுதிக்கே!
mergu malai 1
யுனெஸ்கோ நிறுவனத்தால் உலகின் பாரம்பரியம் மிக்க சின்னமாக 2011ம் ஆண்டு மேற்குத் தொடர்ச்சி மலை அறிவிக்கப்பட்டது. இம்மலைத்தொடரில் எத்தனையோ அற்புதங்கள், மனத்திற்கேற்ற ரம்யமான அமைதி, புதிய உலகம், அரியகாட்சிகள் , கானுயிரிகள், நிறைந்து மனத்துயரத்தைப் போக்கும் மாமருந்துதான் இம்மலைத் தொடர்.

குஜராத் மாநிலம் துவங்கி மகராஷ்ட்ரம், கோவா, கர்நாடகம், கேரளம், தமிழகம் குமரிமுனை வரை 1200 கீ.மீ மேலாக தொடர் சங்கிலி போல நீண்டு தென்னிந்தியாவின் பாதுகாப்பு அரணாக விளங்குகின்றது மேற்குத் தொடர்ச்சி மலைகள். அரபிக்கடலிலிருந்து வரும் காற்றைத் தடுத்து தீபகற்ப இந்தியாவிற்கு மழைப் பொழிவைத் தருகின்றது.இம் மலைத் தொடரில் 7402 பூக்கும் தாவரங்களும், 1814 பூக்காத தாவரங்களும், அருமருந்தாக அமைந்த பல மூலிகைச் செடிகளும் -மரங்கொடிகளும், 6000வகையான பூச்சிகளும், 10 வகையான காட்டுத் தேனீக்களும், 508வகை பறவை இனங்களும், 179 இருவாழ் உயிரினங்களும், 290 வகையான அரியமீன்களும், அதிக அளவில் யானைகளையும் கொண்ட பகுதியாக இருக்கின்றது.

14 தேசியப்பூங்காக்கள், 44 வன உயிரின சரணாலயங்கள், 11 புலிகள் காப்பகங்கள் மட்டுமல்லாமல், புலி, சிறுத்தை, வரையாடு போன்ற 139 வகை பாலூட்டி உயிரினங்கள் இந்த மலைக்காடுகளில் வாழ்கின்றன. பலவகையான நீர்வளம், வனவளம், கனிம வளம் ஆகியவற்றோடு 35 சிகரங்களைக் கொண்ட இந்த மலைத்தொடர் 150மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் ஆப்ரிக்க – மடகாஸ்கர் நிலப்பரப்போடு இணைந்த மலைத்தொடராக இருந்து பிரிந்தது என்று ஆய்வுகள் சொல்கின்றன.

80மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட எரிமலை சீற்றத்தினால், இப்போதுள்ள மேற்குத் தொடர்ச்சி மலை அமைந்தது என்று மற்றொரு ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.கோதாவரி, கிருஷ்ணா, காவிரி, தாமிரபரணி போன்ற பல ஆறுகளின் நதிமூலம் மேற்குத் தொடர்ச்சி மலைகள் தான்.

மணிமுத்தாறு, தென்பெண்ணை, வைகை, பெரியாறு, போன்ற ஆறுகளின் நீர்வரத்தும் இங்கிருந்துதான். எண்ணற்ற பழங்குடிமக்கள் இம்மலைத்தொடர்களில் வாழ்கின்றனர். அவர்களின் கலாச்சாரமும், வாழ்க்கைமுறையும், தனித்துவம் மிகுந்த தாய்மொழியும் அலாதியானது.

குற்றாலம், அகஸ்தியர், சுருளி, வெள்ளிநீர்வீழ்ச்சி, சுஞ்சனா சுட்டே, சோகக், சாலக்குடி, கல்கட்டி, உஞ்சள்ளி, பாணதீர்த்தம் சத்தோடு, சிவசமுத்திரம் நீர்வீழ்ச்சி என இங்கு நீர்வீழ்ச்சிகள் ஏராளம். ஊட்டி ஏரி, கொடைக்கானல் ஏரி, பேரிஜம் ஏரி, பூக்காடு ஏரி, தேவிக்குளம் ஏரி, லிட்சினி யானை ஏரி, உள்ளிட்ட சுற்றுலாப்பயணிகளை மகிழ்விக்கும் செயற்கை ஏரிகளும் இங்கு அமைந்துள்ளன.

அத்தனை இயற்கை வளங்களும் அமைந்த மலைகளின் வளத்தைப் படிப்படியாக, சில சுயநலவாதிகள் அழிக்க ஆரம்பித்தனர். பேராசை சக்திகளால் இந்த பசுமை நிறைந்த மலைகள் மொட்டையடிக்கப்பட்டு வருகின்றது.மரங்களை வெட்டி வனத்தின் பசுமையை அழித்தார்கள். குவாரிகள் என்ற பெயரில் மலையை துண்டாடினார்கள். ராட்சத குழாய்க்களைக் கொண்டு சுவைநீரையும் திருடத் துவங்கினார்கள். பண்ணைவீடுகள், தங்கும் விடுதிகள் என வணிக ரீதியில் மேற்குத் தொடர்ச்சி மலையையே கபளீகரம் செய்து வருகின்றனர்.

மனிதர்கள் காடுகளை நோக்கிப் புறப்பட்டதும், காடுகளிலுள்ள விலங்குகள் நாட்டை நோக்கிப் புறப்படத் துவங்கின. இவர்கள் செய்த சுயநல கூத்துக்களால், புவி வெப்பமயமாகி பருவமழை பொய்த்து , ஓசோன் படலத்தில் வாயு விரிவடைந்தது என இயற்கையில் பல மாறுதல்கள் ஏற்பட்டன. கேளிக்கைகும் , மதுஅருந்துவதற்கும் காடுக்குள் சென்று காட்டை நாசப்படுத்துவதும் வாடிக்கையாகிவிட்டது. புற்காடுகளை அழித்து மனைகளாக மாற்றியதின் விளைவு உதகை மலைப்பகுதியே நிலச்சரிவுக்குள்ளாகியது மறக்கமுடியுமா என்ன?.

ஊட்டி, நீலகிரி, மூணாறு, மேகமலை, கொடைக்கானல் போன்ற மலைநகரங்களில் மாஸ்டர் ப்ளான் மற்றும் வனச்சட்டங்களை மீறி பண்ணைவீடுகளும், தேயிலை எஸ்டேட்டுகளும் பெருகிவிட்டதால், மலையின் அமைப்புக்கே ஆட்டம் கொடுக்குமோ என்ற அச்சம் நமக்கு ஏற்பட்டுள்ளது.வைகையாற்றின் கரையில் அமைந்துள்ள வருசநாடு பகுதியில் சில பேராசைக்காரர்களால் கஞ்சா பயிரிடுவதும், வனவிலங்குகளை வேட்டையாடுவதும் நடக்கிறது. இங்குதான் நக்சலைட்டுகள் நடமாட்டம் இருப்பதாக தற்போது ரோந்துப்பணிகள் நடைபெற்றன.

இம்மலைத்தொடரில் பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக, ஆனைக்கல் காடுகள் • அன்சி தேசிய பூங்கா • ஆரளம் காடுகள் • அகத்தியமலை உயிர்கோள காப்பகம் • அகத்தியவனம் உயிரியல் பூஙகா • பந்திப்பூர் தேசிய பூங்கா • பன்னார்கட்டா தேசிய பூங்கா • பத்திரா காட்டுயிர் உய்விடம் • பிம்காட் காட்டுயிர் உய்விடம் • பிரம்மகிரு காட்டுயிர் உய்விடம் • சன்டோலி தேசிய பூங்கா • சின்னார் காட்டுயிர் உய்விடம் • தான்டலி தேசிய பூங்கா • இரவிகுளம் தேசிய பூங்கா • கிராஸ்ஹில்ஸ் தேசிய பூங்கா • இந்திராகாந்தி தேசிய பூங்கா • இந்திராகாந்தி காட்டுயிர் உய்விடம் •களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் • கரியான் சோலை தேசிய பூங்கா • கர்நாலா பறவைகள் உய்விடம் • கோய்னா காட்டுயிர் உய்விடம் • குதிரைமுக் தேசிய பூங்கா • முதுமலை தேசிய பூங்கா • முதுமலை தேசிய பூங்கா • முதுமலை புலிகள் காப்பகம் • முக்கூர்த்தி தேசிய பூங்கா • நாகரகொளை தேசிய பூங்கா • புது அமரம்பலம் காடுகள் • நெய்யார் காட்டுயிர் உய்விடம் • நிலகிரி உயிர்கோள காப்பகம் • பழனிமலைகள் தேசிய பூங்கா • பரம்பிக்குளம் காட்டுயிர் உய்விடம் • பெப்பாரா காட்டுயிர் உய்விடம் • பெரியார் தேசிய பூங்கா • புசுபகிரி காட்டுயிர் உய்விடம் • ரத்தனகிரி காட்டுயிர் உய்விடம் • செந்துரிணி காட்டுயிர் உய்விடம் • அமைதிப் பள்ளத்தாக்கு தேசிய பூங்கா • சோமேசுவரா காட்டுயிர் உய்விடம் • திருவில்லிப்புத்தூர் காட்டுயிர் உய்விடம் • தலைகாவிரி காட்டுயிர் உய்விடம் • வயநாடு காட்டுயிர் உய்விடம் ஆகிய இடங்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.
mergu malai 2
“வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்
மந்தி சிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்
கானவர்கள் விழிஎறிந்து வானவரை அழைப்பார்
கமனசித்தர் வந்துவந்து காயசித்தி விளைப்பார்
தேனருவித் திரையெழும்பி வானின்வழி ஒழுகும்
செங்கதிரோன் பரிக்காலும் தேர்க்காலும் வழுகும்
கூனலிளம் பிறைமுடித்த வேணிஅலங் காரர்
குற்றாலத்திரிகூட மலைஎங்கள் மலையே… ” திரிகூட ராசப்பக் கவிராயர் பாடின குற்றாலக்குறவஞ்சி இம்மலையில் நீராடுதுறையாக அமைந்திருக்கும் குற்றாலத்தின் இயற்கை எழிலைப் பாடுகிறது.

இயற்கையோடு இயைந்து விவசாயம் செய்து அதனை இயற்கைக்கே படைத்துக் களித்த முன்னோர்களை புறநானூற்றுப் பாடலொன்று பாடுகின்றது. பிட்டங் கொற்றன் என்ற குறுநிலமன்ன்னைப் பற்றி முல்லை நிலத்தில் பாடப்பட்டிருக்கும் பாடலின் எளிய உரை அந்தக் காலக்கட்டத்தின் பழங்குடிமக்களின் வாழ்வை நம் கண்முன்னே கொண்டுவருகின்றது.

”அருவியார்க்கும் கழைபயில் நனந்தலைக்
கறிவளரடுக்கத்து மலர்ந்த காந்தட்
கொழுங்கிழங்கு மிளிரக் கிண்டிக் கிளையோடு
கடுங்கட் கேழல் உழுத பூழி
நன்னாள் வருபத நோக்கிக் குறவர்
உழா அது வித்திய பரூஉக் குரற் சிறுதினை
முந்து விளை யாணர்” – புறநானூறு : 168”’

அருவி ஒலித்துப்பாயும் மூங்கில் வளர்ந்த அகன்ற இடத்தையுடைய மிளகுக் கொடி வளரும் மலைச்சாரலில் காந்தள் மலர்கள் மலர்ந்து இவ்விடத்தில் மனத்தைப் பரப்பிக் கொண்டிருக்கின்றன. அந்த காந்தள் மலர்களின் கொழுந்த கிழங்குகளைக் கிளறித் தின்னுவதற்காக காட்டுப் பன்றிகளின் கூட்டம் அங்கு வருகின்றன. தங்களின் கூரிய கொம்புகளால் (பற்கள்) நிலத்தைக் குத்தி,கிளறி,நொண்டி காந்தள் மலர்களின் கிழங்குகளை வெளிய எடுத்து தின்று விட்டு செல்கின்றன.

இப்பொழுது அந்த நிலம் பார்ப்பதற்கு ஏர் கொண்டு உழுந்த வயல்க்காட்டைப் போன்று காட்சியளிக்கின்றது.இதைப் பார்த்த அந்த மலைவாழ் மக்கள் நிலத்தின் மேலிருந்த காந்தள் தழைகளை எடுத்து வீசி விட்டு அதன் மீது தினையை விதைக்கின்றார்கள். விதைத்த தினைக்கதிர்கள் செழித்து வளர்ந்து அறுவடைக்குத் அணியமாகின்றன.

தினைக் கதிர்களை அறுவடை செய்ய அந்த மலைவாழ் மக்கள் ஒரு நல்ல நாளுக்காகக் காத்திருந்து அறுவடை செய்ய முதல் விளைச்சலை கடவுளுக்குப் படைப்பது அவர்களின் மரபு. சந்தனக் கட்டைகளால் அடுப்பில் தீ மூட்டி அதன் மீது காட்டு ஆமாக்களிடமிருந்து (மாடு) நுரை தளும்ப கறக்கப்பட்ட புதிய பால் உற்றப் பட்ட பானையை வைக்கின்றார்கள். பால் நன்றாக கொதித்ததும் அதில் தினையை போட்டு பொங்கல் சமைத்து கடவுளுக்குப் படைக்கின்றனர். என்ன இனிமை பாருங்கள்.

இத்தகைய மேற்குத் தொடர்ச்சி மலைகள் போலல்லாமல், கிழக்குத் தொடர்ச்சி மலைகள் தனித்தனியாக துண்டிக்கப்பட்ட அமைப்பினை உடையது. அதிலும் பசுமையைச் சூரையாடியே விட்டார்கள். திண்டுக்கல் அருகே கிழக்குத் தொடர்ச்சி மலையின் அங்கமாக இருக்கும் சிறுமலைக்காட்டின் ஒரு பகுதி முற்றிலும் அழிக்கப் பட்டுவிட்டது. கொல்லிமலைக்கும் ஜவ்வாது மலைக்கும் அதே நிலைமை.

மேற்குத் தொடர்ச்சி மலையினைக் கண்காணிக்க உரிய கருவிகளும், போதுமான அளவு அலுவலர்களும் இல்லை என்பது பெரிய குறை. பல்வேறு வெளிநாட்டு கும்பல்களோடு சேர்ந்து இந்தப் பகுதியில் வேட்டையாடி விலங்கினங்களுடைய தோல் மற்றும் உடல்கூறுகளை அயல்நாடுகளுக்குக் கடத்துகின்ற நிலையும் உள்ளது.

இந்த அவலங்களை எல்லாம் தீர்க்க வேண்டுமென்று சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் தொடர்ந்து குரல் கொடுத்தாலும், வணிக நோக்க ஆதிக்கச் சக்திகள் அரசாங்கத்தின் உதவிகளைப் பெற்று காட்டுக்குள் புகுந்து தங்களுக்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவு காட்டைச் சுரண்டுகின்றார்கள்.

இதற்காகவே, மாதவ காட்கில் தலைமையிலும், கஸ்தூரி ரங்கன் தலைமையிலும் மேற்குத் தொடர்ச்சி மலையின் பாதுகாப்பை ஆராய குழுக்கள் அமைக்கப்பட்டன.
இந்த குழுக்களின் பரிந்துரைகளை நிறைவேற்றக்கூடாது என்று கேரளா போன்ற பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. ஏனெனில் அவர்களால் மரங்களை வெட்டமுடியாது, குவாரி நடத்த முடியாது, உல்லாச விடுதிகள் கட்ட முடியாது, தங்களுக்கு பணம் கொழிக்காது என்ற சுயநலத்தில் இந்த அறிக்கைகளை நிறைவேற்ற விடாமல் நெருக்கடி கொடுத்தனர்.

அதற்கேற்றார்போல், டெல்லி ஆட்சியிலுள்ள பாதுஷாக்களும் மாதவகாட்கில், கஸ்தூரி ரங்கன் அறிக்கைகளைக் கிடப்பில் போட்டுவிட்டார்கள். பத்துபேர் கொண்ட கஸ்தூரி ரங்கன் குழுவின் அறிக்கை, கடந்த 2013 ஏப்ரல் 15 நாள் மத்திய அரசிடம் கையளிக்கப்பட்டது.மேற்குத்தொடர்ச்சி மலையின் 37சதவீத வனப்பகுதி சுற்றுச்சூழல் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. சட்டவிரோத ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, கட்டிடங்கள் கட்டுவது, குவாரிகள்,

அணைகள், மின் உற்பத்தி திட்டங்கள், தொழிற்சாலைகள், அணுமின் நிலையங்கள் அமைக்கத்தடை விதிக்கப்பட வேண்டும்.

20,000 சதுர கி.மீ காட்டைச் சுற்றி கட்டுமானங்களே இருக்கக் கூடாது. 50,000ஹெக்டேருக்கு மேல் வீடுகள் அமையக்கூடாது. புதிதாக எந்த நிலத்திற்கும் பட்டா வழங்கக் கூடாது. வனநிலங்களை வேறுபணிகளுக்கு பயன்படுத்தக்கூடாது.

அமைதிப் பள்ளத்தாக்கு, வருசநாடு போன்ற பல வனப்பகுதிகள் மிகவும் எச்சரிக்கையாகவும், கடுமையாகவும் பாதுகாக்கப்பட வேண்டும் என்று கஸ்தூரி ரங்கன் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

கஸ்தூரி ரங்கன் அறிக்கையை விட, மாதவ காட்கில் அறிக்கையின் பரிந்துரைகள் இன்னும் கடுமையானவை.வளர்ச்சி, பேராசை, சுயநலம் என்ற நோக்கத்திற்காக இயற்கையின் அருட்கொடையான வளங்களை ஒருபோதும் அழிக்கக்கூடாது என்று மாதவ காட்கில் தன்னுடைய அறிக்கையில் தெளிவாக்கியுள்ளார்.

கர்நாடகமும் கேரளாவும் அரசுப்பணியில் விலக்குக் கோரும் பகுதிகளை தயார்ப்படுத்தி வருகிறது. மகாராஷ்ட்டிர மாநிலமும் இதே நிலைப்பாட்டைக் கொண்டு வருகிறது. கேரள மாநிலம் மூவர் குழுவை அமைத்து அம்மாநில கிராமங்கள் தோறும் கஸ்தூரி ரங்கன் அறிக்கைக்கு எதிராக கருத்துக் கேட்புக் கூட்டங்களும் நடத்தின.

ஆனால் தமிழ்நாடு இதைக் குறித்து எந்தவித கருத்தையும் தெரிவிக்கவில்லை.
தமிழக நீராதாரங்கள் அனைத்தும் மேற்குத் தொடர்ச்சி மலையிலே உள்ளது. அந்த நீராதாரங்களைப் பாதுகாக்கவேண்டுமென்ற கஸ்தூரி ரங்கன் அறிக்கையை ஆதரிக்கத் தமிழ்நாடு தவறிவிட்டது. இதுவரை மத்திய அரசு கேட்டு எந்தக் கருத்தையும் தமிழகம் தெரிவிக்காமல் உள்ளது கவலையைத் தருகின்றது.

மேற்குத் தொடர்ச்சி மலையின் மொத்தம் 1,60,000 சதுரகிலோமீட்டர் பரப்பளவில், தமிழகம் 28,200ச.கிலோமீட்டர் பரப்பளவைப் பெற்றுள்ளது. கேரளாவோ 28,100 சதுர கிலோமீட்டரும், கோவா 1,075 சதுர கிலோமீட்டரையும், மகாராஷ்ட்டிரா 58,400சதுர கிலோமீட்டரையும், கர்நாடகா 43,300சதுர கிலோமீட்டரையும் பெற்றுள்ளதாக இக்கருத்துகள் சொல்லும் போது தமிழகம் மட்டும் வாய்மூடி மௌனியாகவே இருக்கின்றது.

இந்த இரண்டு அறிக்கைகளும் கையில் வாங்கியபின்பு மத்திய அரசு ம் இவற்றை நடைமுறைப் படுத்தவில்லை. இந்த இரண்டு குழுக்களையும் மத்திய அரசுதானே அமைத்து அறிக்கை தரச்சொன்னது? அதே மத்தியஅரசு அறிக்கைகளின் பரிந்துரைகளை, பரிசீலித்து நிறைவேற்றுவது தானே நியாயமும் நேர்மையும். அதைக் கிடப்பில் போட அவசியம் என்ன?இந்த கேள்விகளின் முடிச்சுகளை அவிழ்க்க வேண்டியது மத்திய அரசின் கடமை தானே!.

கலாச்சாரத்திலும் ஒன்றோடு ஒன்று இணைந்த மேற்குத் தொடர்ச்சி மலைக்கு அழிவுநேர்கிறது என்பதை யாராலும் நினைத்துப் பார்க்க முடியாது. மனித ஜீவனோடும், இந்த சமுதாயத்தோடும் அங்கமாகத்தான் மேற்குத் தொடர்ச்சி மலை இருக்கின்றது. இயற்கையை காப்போம் வாரீர்..

-கே. எஸ். இராதாகிருஷ்ணன்.