September 17, 2021

மேகி நூடுல்ஸ் உள்ளிட்ட கலப்பட உணவுப் பற்றிய கொஞ்சம் டீப் ரிப்போர்ட்!

நெஸ்லே தயாரிப்பான மேகி நூடுல்ஸின் மீது எழுந்துள்ள புகார் நாடெங்கும் சர்ச்சையைக் கிளப்பியுள்ள நிலையில், நம் சந்தைகளில் வாங்கும் உணவுப் பொருட்கள் அனைத்துமே பாதுகாப்பானதுதானா என்று பலரும் யோசிக்க அரம்பித்து விட்டார்கள். நம் உணவில் அன்றாடம் பயன்படுத்தும் காய்கறிகள் மற்றும் பழங்கள் நமக்கு தேவையான சத்துக்களை கொண்டுள்ளன. ஆனால், அவைகளும் பல வகையான நச்சுப்பொருட்கள் மற்றும் ரசாயனங்களால் பாதிக்கப் படுவதால், காய்கனிகளிலும் ஆபத்து மறைந்துள்ளது என்பது இப்போதுதான் பலருக்கு நினைவுக்கு வருகின்றது.
edit food jun 6
செயற்கையான முறையில் காய்கறிகள் மற்றும் பழங்களை பழுக்க வைப்பதற்கு கால்சியம் கார்பைட் , எதிபான் மற்றும் ஆக்ஸிடோஸின் பயன்படுத்தப்படுகிறது. உணவு பாதுகாப்பு சட்டத்தின் படி செயற்கை முறையில் பழங்களை பழுக்க வைப்பதற்கு கால்சியம் கார்பைட் உபயோகிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. இந்த கால்சியம் கார்பைட், கேன்ஸர் உருவாக காரணமாகிறது. எதிபான், ஒரு பூச்சிக்கொல்லி மருந்து ஆக்ஸிடோஸின் ஒரு ஹார்மோன், பழத்தை, செயற்கையாக பழுக்க வைக்க இவை மூன்றும் உபயோகப்படுத்தப்படுகின்றன.

பழங்களில் பூச்சிக்கொல்லி மருந்துகள்: பூச்சிக்கொல்லி மருந்துகள், உலோகங்கள், இயற்கையான நச்சு பொருட்கள் மற்றும் பலவகையான நச்சுகள் (அஃப்லோடாக்ஸின் படுலின், ஆக்ரோடரக்ஸின்) போன்றவை காய்களிகள் மற்றும் பழங்களில் கலக்கின்றன. அளவுக்கு அதிகமான பூச்சிக்கொல்லி மருந்துகளின் உபயோகமும், பூச்சிகளால் பாதிக்கப்பட்ட விதைகள், தண்ணீர், மண், உரங்களில் உள்ள உலோகங்களுமே அதற்கு காரணம்.

அத்துடன் பால் கெட்டுப்போகாமல் இருக்க சிலரால் யூரியா, சோடியம் கார்போனேட், சோடியம் ஹைடிராக்ஸைட், பார்மால்டிஹைட், ஹைடிரோஜன் பெராக்ஸைட் ஆகியவை சேர்க்கப்படுவதால் குடலில் அரிப்பு ஏற்பட்டு பாதிப்பு உண்டாகும். உணவு வண்ணங்கள் , நறுமணங்கள், பதனப் பொருட்கள், ஆன்ட்டி ஆக்ஸிடன்ட்ஸ் போன்றவை அதிக அளவில் சேர்க்கப்பட்டாலும் அல்லது அவை அனுமதிக்கப்படாதவையாக இருந்தாலும் உடல் நலம் பாதிப்படையும். உணவில் அனுமதிக்கப்படாத வண்ணங்களான மெடானில் எல்லோ, ரோடமின் – பி.ஆரமின், ஆரஞ்சு 2, மாலசைட் கிரீன் ஆகியவை கல்லீரல் , சிறுநீரகம், எலும்பு, நுரையீரல் ஆகியவற்றை தாக்கி குறைப்பிரசவம், மலட்டுத்தன்மை போன்றவற்றை ஏற்படுத்தலாம்.

அது போலவே சமைத்த/சமைக்காத உணவுகளை குளிர்பதனப் பெட்டியில் அருகருகே வைக்கக்கூடாது. குறிப்பாக உணவு 70 டிகிரி செல்சியஸ் வரை சூடாக்க வேண்டும். அது போலவே உறைத்து வைக்க வேண்டியவற்றை (எளிதில் கெட்டுப் போகக் கூடியவை) குளிர் பதனப் பெட்டியின் ஃப்ரீசர் பாக்ஸில் வைக்க வேண்டும் இவற்றில் வைக்கப்படும் மாமிச உணவுகளை மெல்லிய பாலீதீன் உறைகளால் மூடிவைக்க வேண்டும். இதிலிருந்து கசியும் நீர் மற்றப் பொருட்களைப் பாதிக்கும். இவற்றை ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டு, குளிர்ந்த நீரில் தொடர்ந்தும் வைத்திருக்கலாம்.

மீந்து போன உணவை இரண்டு மணி நேரத்திற்கும் அதிகமாக, வைத்திருக்கக் கூடாது. குளிர்ந்த உபயோகப் படுத்த வேண்டிய உணவை (உம்) ஐஸ்க்ரீம் குளிர்பதனப் பெட்டியின் அறையிலும், சூடான உணவை ஓவன்களில் வைத்தும் அதன் உஷ்ணத்தைப் பாதுகாக்கவும், ஒரு உணவுப் பொருளின் தரத்தைப் பற்றி ஐயம் ஏற்பட்டாலே, அதனை வெளியே எறிந்துவிட வேண்டும். வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு ஆகியவை ஏற்பட மாசுபட்ட உணவு காரணமாகிறது. ஆனால் கெட்டுப் போன உணவில் உள்ள பாக்டீரியா நமது உடலில் நுழைந்து பாதிப்பை ஏற்படுத்தும். நாம் உண்டபின் பல மணி நேரங்கள் அல்லது சில நாட்கள் கழித்துக்கூட, பாதிப்பு ஏற்படலாம். இந்தச் சமயத்தில் அவை பல்கிப் பெருகி விஷத் தன்மையை இரத்தத்தில் கலக்கச் செய்யும் ஒரு சில பாக்டீரியாக்கள் திசுக்களை நேரடியாகத் தாக்கும். ஒவ்வொரு நோய்க்கும் அறிகுறிகள் வேறுபட்டாலும் வயிற்றுப்போக்கு, வயிற்றுவலி, குமட்டல் போன்ற ஒரே மாதிரியான அறிகுறிகள் தோன்றும்.

இந்நிலையில் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய அமைப்புச் சார்பில் எடுக்கப்பட்ட 2014-15 ஆம் ஆண்டுக்கான வருடாந்திர ஆய்வுக் கூட சோதனை முடிவின்படி பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட 42,290 மாதிரிகளில் 8,469 மாதிரிகள் தரமற்றவை, கலப்படம் செய்யப்பட்டவை, முறையான பிராண்ட் இல்லாதவை எனத் தெரியவந்துள்ளது.அதாவது தர ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட உணவு மாதிரிகளில் ஐந்தில் ஒரு பங்கு கலப்படமானவை என்பது தெரியவந்துள்ளது.
food face
சந்தைகளில் கலப்பட உணவுப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டாலும், அது தொடர்பான வழக்குகளில் குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டவை மிகக் குறைவே. 2014-15 காலகட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட தரமற்ற 8,469 மாதிரிகளில் 1,256 மாதிரிகளை தயாரித்த நிறுவனங்களே குற்றம் புரிந்தது உறுதி செய்யப்பட்டது. தவறு செய்த நிறுவனங்களிடம் இருந்து ரூ.6.9 கோடி அபராதத் தொகை பெறப்பட்டுள்ளன. மேலும் அந்த அறிக்கையில் 14 மாநிலங்களின் ஆய்வு முடிவுகள் மட்டுமே இடம் பெற்றுள்ளன.

உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம் 2006-ன் படி உணவுப் பொருட்கள் மக்கள் உட்கொள்வதற்கு உகந்ததாக இருப்பதை சம்பந்தப்பட்ட நிறுவனம் உறுதி செய்ய வேண்டும் என வரைமுறை வகுத்துள்ளது.

தற்போது கிடைத்துள்ள புள்ளிவிபரங்கள் அடிப்படையில் நாட்டிலேயே தமிழகம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் விற்கப்படும் உணவுப் பொருட்களில் அதிகமானவை இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய அமைப்பின் விதிமுறைகளை மீறி கலப்படம் நிறைந்தவையாக காணப்படுகின்றன. இருப்பினும் இம்மாநிலங்களில் இத்தகைய கலப்படங்களுக்கு எதிரான நடவடிக்கைகள் மிகக் குறைவே.

தமிழகத்தில் 1047 உணவுப் பொருட்களில் கலப்படம் இருப்பது கண்டறியப்பட்டது. ஆனால் இவற்றில் 203 உணவுப் பொருட்களை தயாரித்த நிறுவனங்களின் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.