September 18, 2021

மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம்: ஜெயலலிதா தொடங்கிவைத்தார்

சென்னை கோயம்பேட்டில் 800 மீட்டரில் சோதனை ஓட்டப்பாதை அமைக்கப்பட்டு அதில் மெட்ரோ ரயில் இன்று சோதனை ஓட்டம் நடத்தப்பட்டுள்ளது. இதற்காக மெட்ரோ ரயில் பணிமனை மற்றும் முனையத்தில் தனியாக மேடை அமைக்கப்பட்டிருந்தது. மெட்ரோ ரயிலின் சோதனை ஓட்டத்தை முதலமைச்சர் ஜெயலலிதா, கோயம்பேட்டில் இன்று பகல் 2 மணிக்கு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
nov 6 - metro rail
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக ரூ.14 ஆயிரத்து 600 கோடி செலவில், மெட்ரோ ரெயில் திட்டம் 45.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு 2 வழித்தடங்களில் அமைக்கப்பட்டு வருகின்றன.

வண்ணாரப்பேட்டை- சென்னை விமான நிலையம் இடையே 23.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு முதல் வழித்தடமும், சென்டிரல்-பரங்கிமலை இடையே 22 கிலோ மீட்டர் தொலைவிற்கு 2-வது வழித்தடமும் அமைக்கப்படுகிறது. இந்த வழித்தடம் சுரங்கப்பாதை, பறக்கும் பாதை மற்றும் கூவம் ஆற்றிற்கு முன்பும் வழித்தடங்கள் அமைக்கப்பட்டு வருகிறது.

இந்த வழித்தடத்தில் இயக்குவதற்காக பிரேசில் நாட்டில் உள்ள “அல்ஸ்டாம்” நிறுவனத்திடம் 9 ரெயில்களை தயாரித்து அனுப்ப ஒப்பந்தம் போடப்பட்டு, 4 பெட்டிகளுடன் கூடிய முதல் ரெயில் கடந்த மே மாதம் கப்பல் மூலம் சென்னைக்கு வந்துள்ளது. மீதம் உள்ள 8 ரெயில்களும் தயாரிக்கும் பணியில் அந்நிறுவனம் முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறது.

சென்னைக்கு கொண்டுவரப்பட்ட ரெயிலை சோதனை ஓட்டம் நடத்தி கருத்து தெரிவிக்கும்படி பிரேசில் நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது. அதன்படி கோயம்பேட்டில் 800 மீட்டரில் சோதனை ஓட்டப்பாதை அமைக்கப்பட்டு அதில் மெட்ரோ ரெயில் இன்று சோதனை ஓட்டம் நடத்த தயார் நிலையில் நிறுத்தப்பட்டு உள்ளது.

இதற்காக மெட்ரோ ரெயில் கட்டுப்பாட்டு அறையிலிருந்து பெறப்படும் தகவல்களை பெற்று அதன்படி ரெயில் நிலையங்களில் நிற்பது, மீண்டும் புறப்படுவது, மின்சார பொருட்கள் திட்டமிட்டப்படி இயங்குகிறதா? ரெயில் பக்கவாட்டு ஜன்னல், கதவுகள் செயல்பாடுகள் மற்றும் பாதுகாப்பு சாதனங்கள் செயல்படும் வீதம் உட்பட அனைத்து செயல்பாடுகளும் நேற்று சோதனையிடப்பட்டது.

சோதனை ஓட்டம் மூலம் பெறப்படும் தகவல்களை பிரேசில் நிறுவனத்துடன் பகிர்ந்து கொள்ளவும் மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர். ரெயிலில் மாற்றம் செய்ய வேண்டும் என்றாலும் கருத்து தெரிவிக்கப்பட்டு, அதன்படி வரவிருக்கும் ரெயில்களிலும் அந்த மாற்றங்கள் செய்யப்பட உள்ளது.

இந்த ரெயிலை முதல்-அமைச்சர் ஜெயலலிதா இன்று கொடியசைத்து சோதனை ஓட்டத்தை தொடங்கி வைத்தார். இதற்காக கோயம்பேட்டில் உள்ள பணிமனை மற்றும் முனையத்தில் தனியாக மேடை அமைக்கப்பட்டு இருந்தது. தொடக்க விழா நடந்த இடத்தில் எளிமையான முறையில் சாமியானா பந்தல் போடப்பட்டு இருந்தது. அங்கு வந்த முதல்– அமைச்சர் ஜெயலலிதாவை மெட்ரோல் ரெயில் திட்ட அதிகாரிகள் வரவேற்றனர். மெட்ரோ ரெயில் இயங்கும் முறை மற்றும் நவீன வசதிகள் குறித்து அதிகாரிகள் விளக்கி கூறினார்கள்.

முதல் – அமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்ததும் 4 பெட்டிகளுடன் கூடிய மெட்ரோ ரெயில் ஓடத் தொடங்கியது. பணிமனையில் அமைக்கப்பட்டு இருந்த 800 மீ.தூர தண்ட வாளத்தில் ஓடி நின்றதைக் கண்டு அனைவரும் கைதட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர் .
nov 6 - jaya metro
இந்த சோதனை ஓட்டத்தை தொடர்ந்து 2014-ம் ஆண்டு மத்தியில் கோயம்பேட்டில் இருந்து சி.எம்.பி.டி., அரும்பாக்கம், வடபழனி, அசோக்நகர், ஈக்காட்டுதாங்கல், ஆலந்தூர் வரை 7 ரெயில் நிலையங்களை இணைக்கும் வகையில் பயணிகள் சேவை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.