September 25, 2021

மூளைக்குள் ‘ஸ்பீடாமீட்டர்’!- ஜெர்மன் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

நாம் 10 விழுக்காடு மூளையைத் தான் பயன் படுத்துகிறோம். 100 விழுக்காடு பயன் படுத்தினால், அறிவியலாளர் அய்ன்ஸ்டீன் போல் இருப்போம் என்று அடிக்கடி கூறுவதைக் கேட்டிருக்கிறோம். ஆனால், அந்தத் தகவல் சரியல்ல. உண்மையில் நமது உடலில் நூறு விழுக்காடு வேலை செய்யும் உறுப்பு மூளைதான்.சுவை, மணம், தொடு உணர்வு, சிந்தித்தல், பேசுதல் என நம் மூளை ஓயாது எந்நேரமும் வேலை செய்துகொண்டே இருக்கிறது.
brain speedameter
அப்பேர் பட்ட மூளை பற்றிய சில தகவல்கள்…

வளர்ந்த மனிதனின் மூளை எடை 1.5 கிலோகிராம்.

ஒவ்வொரு நொடியும் நமது மூளைக்குள் 1 லட்சம் அமில மாற்றங்கள் நமக்குத் தெரியாமலே நடக்கின்றன.

நமது மூளையில் உள்ள ரத்த நாளங்களை விரித்து நீட்டினால், 1 லட்சத்து 60 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்துக்கு அவை நீளுமாம்.

மூளையில் 2 வயதில் தான் மிக அதிக செல்கள் அமைகின்றன. பிறகு அவை குறைய ஆரம்பித்து விடுகின்றன.

வாழ்க்கையில் மூளை, குவாட்ரிலியன்… அதாவது, 10 கோடியே கோடி தகவல்களை தனித்தனியாக தனக்குள் தக்க வைத்துக் கொள்கிறது!

18 வயதில் மனிதனின் மூளை வளர்வதை நிறுத்திக் கொள்கிறது.

நம் மூளை செயல்படும்போது 10 முதல் 23 வாட்ஸ் அளவுக்கு மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது.

மனித உடலில் உள்ள ரத்தத்திலும் ஆக்சிஜனிலும் 20 விழுக்காடை மூளைதான் பயன்படுத்துகிறது.

மனித மூளை மணிக்கு 431 கி.மீ வேகத்தில் செயல்படக் கூடியது.

வலியை அறியும்போது ஆணின் மூளை வேறு மாதிரியும் பெண்ணின் மூளை வேறு மாதிரியும் செயல்படுவதாக அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

பெண்களுக்கான சிறப்பு ஹார்மோனாக அறியப்படும் ஈஸ்ட்ரொஜன் நினைவுத் திறனை வளர்க்கக் கூடியது என்று கண்டறியப்பட்டுள்ளது. அதனால்தான் பெண்கள் அதிக நினைவாற்றலோடு இருக்கிறார்களாம்.

இந்நிலையில் மனிதர்களின் மூளையில், வேகத்தை கணக்கிடும், ‘ஸ்பீடாமீட்டர்’ போன்று, நரம்பு செல்கள் செயல்படுகின்றன என்பதை ஜெர்மன் விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.பான் பல்கலைக்கழக பேராசிரியர் ஸ்டீபன் ரெமி தலைமையிலான குழு, தகவல்களை சேமித்து வைக்கும் (ஸ்பைட்டியல் மெமரி) திறனை ஆய்வு செய்ததில், இத்தகவல் தெரிய வந்துள்ளது. இதன் மூலம், பர்கின்சன் நோய்க்கான காரணத்தை எளிதில் புரிந்து கொள்ள முடியுமாம்.

மூளையில், தகவல்களை சேமித்து வைக்கும் பகுதி, ‘ஹிப்போகேம்பஸ்’ எனப்படுகிறது. இதில், வேகம் குறித்த தகவலும் சேமிக்கப்படுகிறது. எவ்வளவு வேகமாக நடக்கிறோமோ, அவ்வளவு வேகத்தில், இந்த நரம்பு செல்கள் இயங்குகின்றன. அதிகப்படியான செயல்பாடுகளின் விகிதங்களை மூளை நுட்பமாக செய்கிறது.இதுகுறித்த சோதனை, எலிகளில் பரிசோதிக்கப்பட்டது. எலிகளின் நரம்பு மண்டலத்தை ஆய்வு செய்தபோது, அதன் நினைவாற்றல், வேகத்துடன் இணைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. என்று ஸ்டீபன் ரெமி கூறியுள்ளார்.