October 25, 2021

மூன்றாவது அணியின் ஆறாவது அவதாரம்!இழு தள்ளு (3) by கதிர்

வைகுண்ட ஏகாதசி இரவில் பக்தர்கள் கண் விழித்து விரதம் இருப்பார்கள். அவர்களுக்கு வசதியாக டீவி சேனல்களில் பக்திப்படங்கள் ஒளிபரப்பாகும். அந்த மாதிரி தேர்தல் வரும்போது தூசி தட்டி திரையிடப்படும் படத்தின் பெயர் மூன்றாவது அணி. எந்த புண்ணியவான் சூட்டிய பெயரோ, தெரியவில்லை. இப்போது அதை உச்சரிக்கவே கூச்சப்படுகிறார்கள், சம்பந்தப்பட்டவர்கள். இடதுசாரி தோழர்கள் ‘மாற்று அணி’ என்று அழுத்திச் சொல்கிறார்கள்.
third-front-kathir feb 8
‘காங்கிரஸ் ஊழல் கட்சி. பிஜேபி மதவாத கட்சி. ஆகவே இரண்டு கட்சிகளோடும் உறவு வேண்டாம் என்று ஒதுங்குகிறோம்’ என்று அலட்டிக் கொள்ளாமல் அறிவிக்கிறார்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் தலைவர்கள்.

‘ஆமாம், ஒதுங்குகிறோம்’ என்று பல்லவியின் அடுத்த வரியை தொடர்பவர்கள் யாரெல்லாம் பாருங்கள்.

சமாஜ்வாடி கட்சியின் முலாயம் சிங் யாதவ், ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவர் நிதிஷ் குமார், பிஜு ஜனதா தளம் நவீன் பட்நாயக், மத சார்பற்ற ஜனதா தளத்தின் குமாரசாமி தேவகவுடா, ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியின் ஜகன் மோகன் ரெட்டி… தேர்தல் அறிவிப்பு வெளியாகும் நேரத்தில் வரிசை இன்னும் பெரிதாகி இருக்கும்.

இந்த தலைவர்கள் தங்களுக்குள் பேச்சு வார்த்தை தொடங்கவில்லை. அதற்குள் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளின் தேசிய செயலாளர்களையும் வரவழைத்து பேசி கூட்டணியை அறிவித்து, அனைவரின் பார்வையையும் சென்னைப் பக்கமாக திருப்பியிருக்கிறார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா.

’இந்த அணி ஜெயித்தால் பிரதமர் ஆகப்போவது யார் என்பதை தேர்தலுக்கு பிறகு பார்த்துக் கொள்ளலாம்’ என்று அவர் கூறியிருப்பது தேர்ந்த காய் நகர்த்தல்.

மூன்றாவது அணியில் இடம் பெற்றுள்ளவர்கள் பலரும் மாநில முதல்வராக இருப்பவர்கள். அல்லது இருந்தவர்கள். பிரதமர் நாற்காலியில் அமர மாட்டேன் என அவர்களில் எவரும் சபதம் ஏற்றிருக்கவில்லை. இடதுசாரிகள் இருப்பதால் இந்த அணியில் சேர முடியாத மேற்கு வங்க முதல்வர் மம்தாவுக்குக்கூட அந்த சிந்தனை உண்டு.

தேர்தலுக்கு முன்பே பிரதமர் பெயரை தீர்மானிப்பது பொருத்தமற்றது மட்டுமல்ல, கூட்டணியை அது பலவீனமாக்கிவிடும் என்று ஜெயலலிதா உணர்ந்திருக்கிறார். ‘பல்லக்கில் அமரப் போவது அவர்; தோளில் தூக்கி சுமக்கப் போவது நானா?’ என்று மற்ற தலைவர்களின் மனசாட்சி கேட்கத்தானே செய்யும்?

அது மட்டுமல்ல. ‘பிரதமர் யார் என்பதை எந்த கட்சியும் இந்த நேரத்தில் தீர்மானிப்பது அர்த்தமற்றது’ என ஜெயலலிதா கூறியிருப்பது பிஜேபி தலைவர்களின் நம்பிக்கைக்கு வைக்கப்பட்ட வேட்டு.

‘மூன்றாவது அணியின் பிரதமர் வேட்பாளரை இப்போது அறிவித்தால் அங்கே குழப்பம் ஏற்படும் என்பது நியாயமான கவலை. அதற்காக எந்தக் கட்சி அறிவித்தாலும் தவறு என்று எங்களை ஏன் விமர்சிக்க வேண்டும்?’ என ஆதங்கப்பட்டார் அக்கட்சியின் தமிழக தலைவர் ஒருவர்.

பிரதானமான அரசியல் உத்திகளில் இரண்டு வகை உண்டு. சுய பலவீனத்தை ஒரு பலமாக மாற்றிக் காட்டுவது ஒன்று. எதிரியின் பலத்தையே பலவீனமாக சித்தரிப்பது இன்னொன்று.

‘பிஜேபி ஆட்சி அமைத்தால் மோடிதான் பிரதமர் என அறிவித்து விட்டோம். காங்கிரஸ் ஜெயித்தால் ராகுல்தான் பிரதமர் என அறிவிக்க அந்தக் கட்சி தயாரா?’ என்று பிஜேபி தலைவர்கள் நாடெங்கும் மேடைகளில் சவால் விடுகின்றனர். காங்கிரஸ் அதை ஏற்கவில்லை. எனவே, பிரதமர் வேட்பாளரை அறிவிக்க காங்கிரசுக்கு தெம்பு இல்லை, திராணி இல்லை, தோல்வி பயம் வந்துவிட்டது என்று கைதட்டி கேலி செய்கின்றனர்.

‘பயமா உங்களுக்கு?’ என்ற கேள்வி டீவி பேட்டியில் நேரடியாகவே ராகுல் முன் வைக்கப்பட்டது.

‘நமது தேர்தல் அமைப்பில் எம்.பி.க்களைத்தான் மக்கள் தேர்ந்து எடுப்பார்கள். எம்.பி.க்கள்தான் பிரதமரை தேர்ந்து எடுப்பார்கள். ஒருவேளை காங்கிரஸ் எம்.பி.க்கள் என்னை தேர்ந்து எடுத்தால் பிரதமர் பதவியை ஏற்பதில் எனக்கு தயக்கமில்லை’ என்று ராகுல் பதில் சொன்னார்.

எதார்த்தமான பதில். அரசியல் சாசனம் என்ன சொல்கிறதோ, ஜனநாயக நடைமுறை என்னவோ அதை ராகுல் எதிரொலித்தார். இந்த உண்மையை ஹைலைட் செய்ய காங்கிரஸ் தவறிவிட்டது. பிஜேபியின் சவாலை எதிர்கொள்ள கிடைத்த நல்ல வாய்ப்பை நழுவ விட்டது.

ஜெயலலிதா விடவில்லை. சரியான நேரத்தில் பொருத்தமான வகையில் பயன்படுத்திக் கொண்டார்.

இந்த நாட்டில் நடப்பது நாடாளுமன்ற ஜனநாயகம். உச்சபட்ச அதிகாரம்கொண்ட அமைப்பு நாடாளுமன்றம். நாட்டை ஆளப்போவது யார் என்பதை முடிவு செய்யும் அதிகாரம் அந்த அமைப்புக்கு மட்டுமே சொந்தமானது. அதன் உறுப்பினர்கள் என்ற அடிப்படையில் அதிகமானவர்கள் யாரை கை காட்டுகிறார்களோ, அந்த நபர் பிரதமர் நாற்காலியில் அமர அனுமதி பெறுகிறார்.

அதிபர் ஆட்சி முறை அமலில் உள்ள நாடுகளில்தான் மக்களே நேரடியாக அதிபரை தேர்வு செய்கின்றனர். அதற்கு உதாரணம் அமெரிக்கா. எனவேதான் அங்கே நாடாளுமன்றத்தின் முடிவையே ரத்து செய்யக்கூடிய வீட்டோ அதிகாரத்தை அதிபருக்கு வழங்குகிறது அந்நாட்டு அரசியல் சட்டம்.

அமெரிக்க பாணியில் மோடியை முன்னிறுத்தியிருக்கிறது பிஜேபி. ’பிரதமர் வேட்பாளர்’ என்ற வார்த்தையே நமக்கு பழக்கமில்லாதது. தவிரவும், கூட்டணி ஆட்சிமுறை நடைமுறைக்கு வந்த பிறகு தனியொரு கட்சி அந்த பதவிக்கு சொந்தம் கொண்டாடுவது முரண்பாடான விஷயம்.

முலாயம், ஜெயலலிதா, நிதிஷ், மம்தா, ஜகன், நவீன் போன்றவர்கள் அவரவர் மாநிலங்களில் கொத்துக் கொத்தாக தொகுதிகளை அள்ளக்கூடிய செல்வாக்கு படைத்தவர்கள். ’ஒன்றாக சேர்ந்து வெற்றிக்காக உழைப்போம்’ என்ற கோஷத்துக்கும், ’நாமெல்லாம் சேர்ந்து அவரை பிரதமராக்க பாடுபடுவோம்’ என்ற கோஷத்துக்கும் வித்தியாசம் உண்டு. தலைவர்கள் காட்டிக் கொள்ளாமல் தவிர்த்தாலும், தொண்டர்கள் ஜீரணிக்க மாட்டார்கள். நமது தலைவருக்கும் பிரதமர் ஆகக்கூடிய சான்ஸ் இருக்கிறது என்று நம்பினால்தானே அவர்களால் முழுமனதோடு வேலை செய்ய முடியும்?

ஒவ்வொரு அரிசியிலும் அதை உண்ண வேண்டியவன் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது என்று விதியை நம்பும் மக்கள் நிறைந்த நாடு இது. யாரும் வாழ்க்கையில் எந்த நிலையையும் எட்ட முடியும் என்று அதிர்ஷ்டத்தை அடையாளம் காட்டுபவர்களும் இங்கே அதிகம். மோடியை போல முன்கூட்டியே அறிவிக்கப்பட்டு இருந்தால் சந்திரசேகர், குஜரால், தேவகவுடா, நரசிம்மராவ் போன்றவர்கள் நாட்டின் உயரமான நாற்காலியில் உட்கார்ந்திருக்க முடியாது.

கருத்தொற்றுமை என்ற பெயரால் மேலிடத்தின் முடிவை பார்வையாளர்கள் மூலமாக திணிப்பது நிர்வாக தந்திரம். அதனை காங்கிரஸ் நடைமுறைக்கு கொண்டு வருவதற்கு முன்னால் நாடாளுமன்ற அல்லது சட்டமன்ற பெரும்பான்மைக் கட்சியின் முதல் கூட்டம் அமர்க்களமாக நடப்பதுண்டு. பொது தேர்தலுக்கு அடுத்த தேர்தல் அது. பிரதமராக முதல்வராக விரும்புபவர்கள் விண்ணப்பம் செய்தோ பெயர் முன்மொழியப்பட்டோ களத்தில் குதிப்பார்கள். போட்டி நடக்கும். அதிக எம்.பி அல்லது எம்.எல்.ஏ ஆதரவை பெற்றவர் பெயர் அறிவிக்கப்படும். அவரை எதிர்த்து போட்டியிட்டவர்கள் முதல் மாலை அணிவித்து கைகுலுக்குவார்கள். மக்கள் பிரதிநிதித்துவம் என்ற சித்தாந்தம் முழுமை அடைவது அந்த தருணத்தில்தான்.

திட்டமிட்டு நடந்ததா, தற்செயலா என்று தெரியாது. ஜெயலலிதா வீசியிருக்கும் அஸ்திரம் ஒன்றுக்கு மேற்பட்ட கவசங்களை துளைக்கப் போகிறது. ஜனநாயகத்துக்கு நல்லதுதான்.

அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர பகைவனும் கிடையாது என்பதை வெளிச்சமிட்டு காட்டுகிறது மூன்றாவது அணி. அதில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு கட்சியும் காங்கிரஸ் அல்லது பிஜேபியுடன் ஏதோ ஒரு காலகட்டத்தில் கைகோர்த்து நின்றதுதான். கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆளுக்கொரு திசையில் நின்று மாற்றி மாற்றி காங்கிரசுக்கு கை கொடுத்தது இதிகாசக் கதையல்ல.

இந்த பின்னணியில், இந்த கட்சிகளின் தேர்தலுக்கு பிந்தைய நிலைப்பாடு எப்படி இருக்கும் என்பதை கணிக்க இயலாது. இப்போதைக்கு, வெயிட்டிங் லிஸ்டில் இருந்தவர்கள் ஆர்.ஏ.சி.க்கு முன்னேறி இருக்கிறார்கள்.

(கதிர் Inkகுமுதம் ரிப்போர்ட்டர் 13.02.2014 / கதிர்)