March 31, 2023

மு.க.ஸ்டாலின் – வயது எழுபது மட்டும்!!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில் , “மரத்தை நாம் வளர்த்தால் மரம் நம்மை வளர்க்கும்!” என்றார் கலைஞர். அவரது சொற்படி இந்த ஆண்டும் மரக்கன்று ஒன்றை நட்டுவைத்தேன். என் அன்புக் கட்டளையை ஏற்றுப் புத்தகங்களைப் பிறந்தநாள் பரிசாகக் கொண்டுவந்த உடன்பிறப்புகளுக்கு மஞ்சள்பையுடன் மரக்கன்றுகளை நன்றியாக வழங்கினேன். அவற்றை நட்டு, பராமரித்து வளர்ப்பீர் நாளை நலமாக!” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

தி.மு.க. தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 70-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இன்று காலை தனது குடும்பத்தினர் முன்னிலையில், வீட்டில் கேக் வெட்டி மனைவி மற்றும் குழந்தைகளுக்கு ஊட்டினார். அவருக்கு மனைவி துர்கா ஸ்டாலின், மகன் உதயநிதி, மகள் செந்தாமரை, மருமகன் சபரீசன் மற்றும் மூத்த சகோதரி செல்வி, சகோதரர் மு.க.தமிழரசு, கனிமொழி எம்.பி. மற்றும் குடும்பத்தினரும் வந்திருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.

தொடர்ந்து, மெரினா சென்ற முதலமைச்சர், அங்கு அண்ணா, கருணாநிதி நினைவிடங்களுக்கு சென்று மரியாதை செலுத்தினார். தொடர்ந்து வேப்பேரி சென்று பெரியார் நினைவிடத்தில் மரியாதை செய்தார். அவருக்கு கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் உற்சாகமாக வரவேற்றனர்.

இதையடுத்து, காலை 10மணி அளவில், தொண்டர்களை சந்திப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயம் சென்றார். அங்கு அவரை மூத்த அமைச்சர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள், கட்சி பிரமுகர்கள் வரவேற்றனர். தொடர்ந்து, அங்குள்ள கலைஞர் அரங்க வளாகத்தில் மரக்கன்று நட்டு தண்ணீர் ஊற்றினார்.

அதைத்தொடர்ந்து, கலைஞர் அரங்கினுள் சென்று கட்சி நிர்வாகிகளை சந்தித்து வாழ்த்து பெற்றார். அவருக்கு அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள் வாழ்த்து சொல்வதற்காக திரளாக நிற்பதை பார்த்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை பார்த்து கை அசைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

அதையடுத்து, தொண்டர்களை சந்திப்பதற்காக மேடைக்கு சென்றார். அப்போது மேடையில் சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் நே.சிற்றரசு ‘கேக்’ கொண்டு வந்து வைத்தார். அமைச்சர்கள், தொண்டர்கள் முன்னிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அந்த ‘கேக்’கை வெட்டினார்.

அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, பொன்முடி, எ.வ.வேலு, ஐ.பெரியசாமி, சேகர்பாபு, டி.ஆர்.பாலு எம்.பி., ஆ.ராசா மற்றும் மூத்த அமைச்சர்கள் பலர் மேடையில் நின்று வாழ்த்து சொல்ல வந்த கட்சி தொண்டர்களை ஒழுங்குப்படுத்தி அனுப்பிய வண்ணம் இருந்தனர்.

தொடர்ந்து, தலைமைக் கழக நிர்வாகிகளான அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன், தலைமை நிலைய செயலாளர்கள் பூச்சி முருகன், துறைமுகம் காஜா ஆகியோர் சால்வை அணிவித்து மரக்கன்று புத்தகங்கள் வழங்கி னார்கள்.

பின்னர் அங்கு திரண்டிருந்த அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் வரிசையாக வந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தனர். அமைச்சர் தா.மோ.அன்பரசன் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, பல்லாவரம் எம்.எல்.ஏ. இ.கருணாநிதி, முன்னாள் தூத்துக்குடி எம்.பி. எஸ்.ஆர்.ஜெயதுரை, விருகம்பாக்கம் எம்.எல்.ஏ. ஏ.எம்.வி.பிரபாகரராஜா, தி.நகர் எம்.எல்.ஏ. ஜெ.கருணாநிதி, படப்பை மனோகரன் ஆகியோரும் புத்தகங்கள் வழங்கி வாழ்த்து கூறினார்கள்.

பின்னர், ஒவ்வொரு மாவட்ட வாரியாக கட்சி நிர்வாகிகள், தொண்டர்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து பெற்றார். முதலமைச் சருக்கு வாழ்த்து சொல்ல வந்த கட்சி நிர்வாகிகள் புத்தகங்கள் சால்வை, பொன்னாடை, பழங்கள், மரக்கன்றுகள், ரூபாய் நோட்டு மாலைகள் போன்ற பல்வேறு வகையான பரிசு பொருட்களை வழங்கினார்கள்.

நரிக்குறவ பெண்கள் 30பேர் தயாளு அம்மாள் போட்டோவுடன் வந்திருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து சொல்ல ஒவ்வொரு மாவட்டங்களில் இருந்தும் கட்சி நிர்வாகிகள் வரும் போது அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் அவர்களுடன் சேர்ந்து வந்து முதலமைச்சரிடம் வாழ்த்து பெற்றார்கள்.

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த கட்சி பிரமுகர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஒட்டகம் பரிசளித்து வாழ்த்து கூறினார்.

பிறந்த நாள் வாழ்த்து கூற வந்த கட்சி நிர்வாகிகள் பலர் மரக்கன்று வழங்கியதால் அவற்றை வாழ்த்துபெறும் கட்சி பிரமுகர்களுக்கு முதலமைச்சர் பரிசாக வழங்கினார்.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து சொல்ல ஏராளமானோர் அறிவாலயம் வந்ததால் கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டது. தொண்டர்கள் பார்ப்பதற்கு வசதியாக அங்கு எல்.இ.டி. ஸ்கிரீன் வசதிகளும் செய்யப்பட்டு இருந்தது.

இதன் பின்னர் இன்று வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில் , “மரத்தை நாம் வளர்த்தால் மரம் நம்மை வளர்க்கும்!”என்றார் கலைஞர். அவரது சொற்படி இந்த ஆண்டும் மரக்கன்று ஒன்றை நட்டுவைத்தேன். என் அன்புக் கட்டளையை ஏற்றுப் புத்தகங்களைப் பிறந்தநாள் பரிசாகக் கொண்டுவந்த உடன்பிறப்புகளுக்கு மஞ்சள்பையுடன் மரக்கன்றுகளை நன்றியாக வழங்கினேன். அவற்றை நட்டு, பராமரித்து வளர்ப்பீர் நாளை நலமாக!” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார். அத்துடன் இந்த  நிலையில், அவரது பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் அவரது சார்பில் தனித்தனியாக  நன்றி தெரிவித்து டிவிட் பதிவிட்டுள்ளார். அதில், ஆங்கிலத்தில் வாழ்த்து சொன்னவர்களுக்கு Thank you for your kind wishes என்றும், தமிழில் வாழ்த்து சொன்னவர்களுக்கு வாழ்த்துக்கு நன்றி என்றும்  குறிப்பிட்டுள்ளார்.