October 21, 2021

மு க ஸ்டாலினுக்கு அன்புமணி இராமதாசு எழுதிய கடுதாசி நம்பர் டூ!

அன்புள்ள நண்பர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம்… நலம், நலம் வாழ வாழ்த்துக்கள்! தமிழ்நாட்டை சீரழித்ததில் அ.தி.மு.க.வுக்கு மட்டுமல்ல, தி.மு.க.வுக்கும் பங்கு இருக்கிறது என்று கூறி தங்களுக்கு நேற்று முன்நாள் நான் கடிதம் எழுதியிருந்தேன். அந்தக் கடிதத்தில் நான் எழுப்பிய வினாக்களுக்கு நீங்கள் பதில் சொல்லியிருந்தாலோ, தவறுகளை ஒப்புக்கொண்டு திருத்திக் கொள்வதாக அறிவித்திருந்தாலோ அது நாகரீகமான அரசியலுக்கு வழி கோலியிருந்திருக்கும். ஆனால், ‘தளபதி’ என்று அழைக்கப்பட்டாலும் சட்டப்பேரவையில் எப்படி நீங்கள் பதுங்கிக் கொண்டு, மற்ற உறுப்பினர்களை பாய வைப்பீர்களோ… அதேபோல் இப்போதும் எனது கடிதத்திற்கு என்னால் தோற்கடிக்கப்பட்ட ஒருவர் மூலம் தரக்குறைவாக பதில் அளிக்க வைத்திருக்கிறீர்கள். ஒருவேளை அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள உண்மைக்கு மாறான அவதூறுகளை எழுத உங்களுக்கு கூசியதால் கூட அவ்வாறு செய்திருக்கலாம். ஆனால், நான் உங்களைப் போன்றவன் அல்ல. அநாகரீக, லாவணி அரசியல் நடத்துபவனும் அல்ல. அதனால் தான் நானே மீண்டும் உங்களுக்கு கடிதம் எழுதியிருக்கிறேன்.
stalin vs anbu may 6
முந்தைய கடிதத்தில் பல்வேறு கேள்விகளை நான் தங்களுக்கு எழுப்பியிருந்தேன். அவை அனைத்தும் உண்மைகள்; இவற்றை மறுக்க முடியாது என்பதால் தான் அவற்றை விட்டு விட்டு தமிழகத்தின் நலனுக்கு தொடர்பில்லாதவை பற்றி ஆள் வைத்து மிகவும் தரக்குறைவான வார்த்தைகளால் அறிக்கை வெளியிட்டிருக்கிறீர்கள். எதிர்க்கட்சியினரின் கேள்விகளுக்கு நாகரீகமான முறையில் எப்படி பதில் கூறுவது என்பதை டாக்டர் கலைஞரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

இருப்பினும் இதை நான் எதிர்பார்த்தேன். தொடர்ந்து இத்தகைய நாகரீகமற்ற அரசியலை செய்து வரும் உங்களிடம் இதைத் தவிர வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது. உங்கள் குறைகளை யார் சுட்டிக்காட்டினாலும் அவர்களை நாகரீகமற்ற முறையில் விமர்சிப்பது உங்களுக்கு பழகிப்போன ஒன்று. ஆனால், தரம் தாழ்ந்து விமர்சிப்பது எங்கள் வழக்கம் அல்ல. நாகரீகமான, வளர்ச்சி அரசியல் (Decent and Development Politics) தான் எங்களின் கொள்கை. அப்படித்தான் நான் வளர்க்கப்பட்டிருக்கிறேன். எனவே, உங்கள் தரப்புக்கு நாகரீகமாக பதில் தருவது தான் எனது இந்த கடிதத்தின் நோக்கம்.

அ.தி.மு.க.வுடனும், தி.மு.க.வுடனும் பாட்டாளி மக்கள் கட்சி கூட்டணி வைத்ததாக தி.மு.க. குற்றஞ்சாற்றியிருக்கிறது. இது உண்மை தான். இதைக் கண்டுபிடிப்பதற்காக நீங்கள் ஒரு குழு அமைத்து ஆராய்ச்சி செய்திருக்கத் தேவையில்லை. உங்களுடனும், அ.தி.மு.க.வுடனும் கூட்டணி அமைத்தது தான் நாங்கள் செய்த மிகப்பெரியத் தவறு ; இந்தத் தவறை ஒருபோதும் மீண்டும் செய்ய மாட்டோம். இதற்காக வருத்தம் தெரிவித்தது மட்டுமின்றி மன்னிப்பும் கேட்டுக் கொண்டிருக்கிறோம். ஒரு கட்சி தவறை ஒப்புக்கொள்வது சாதாரணமான விஷயமல்ல. அதுமட்டுமின்றி, 2006 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் 96 இடங்களில் மட்டும் வெற்றி பெற்று ஆட்சியமைக்க பெரும்பான்மை இல்லாமல் தடுமாறிக்கொண்டிருந்த தி.மு.க.வை ஆட்சியில் அமர்த்தி உங்கள் தலைவரை முதல்வராகவும், உங்களை துணை முதலமைச்சராகவும் அமர வைத்தது நாங்கள் செய்த இன்னொரு தவறு ஆகும். இந்த தவறுகளுக்கு பரிகாரம் தேடுவதற்காகவே தமிழகத்தில் அ.தி.மு.க., தி.மு.க. அல்லாத அரசை அமைக்க வேண்டும் என்று முடிவெடுத்து மக்கள் பணியாற்றி வருகிறோம்.

தேர்தலில் போட்டியிட மாட்டோம் என்று கூறி விட்டு பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் நான் நாடாளுமன்ற உறுப்பினராகவும், மத்திய அமைச்சராகவும் பதவி வகித்தது எப்படி? என்பது உங்கள் கட்டளைப்படி என்னிடம் கேட்கப்பட்டுள்ள இன்னொரு கேள்வி. மக்களும், கட்சியினரும் விரும்பியதால் அந்தப் பதவிக்கு வந்தேன். ஆனால், ஸ்டாலின் அவர்களே…. மனசாட்சியைத் தொட்டு சொல்லுங்கள்… அப்பா முதலமைச்சர், மகன் துணை முதலமைச்சர், இன்னொரு மகன் மத்திய அமைச்சர், மகள் நாடாளுமன்ற உறுப்பினர், மருமகன் மத்திய அமைச்சர், பேரன் மத்திய அமைச்சர்…. இந்தியாவில் வேறு எந்தக் கட்சித் தலைமையாவது தொண்டர்கள் உழைப்பை இப்படி சுரண்டி பயனடைந்ததுண்டா?

நான் மாநிலங்களவை உறுப்பினராவதற்கும், மத்திய அமைச்சராவதற்கும் உதவி செய்தவர் கலைஞர் என்று தி.மு.க. கூறியிருக்கிறது. ஆனால், 2006 ஆம் ஆண்டில் பெரும்பான்மை இல்லாத தி.மு.க. தமிழகத்தில் ஆட்சி அமைக்க நிபந்தனையின்றி ஆதரவளிப்பதாக ஆளுனரிடம் முதன்முதலில் கடிதம் கொடுத்தது பா.ம.க. தான். அவ்வகையில் கலைஞரை முதல்வராகவும், உங்களை துணை முதல்வராகவும் ஆக்கியது பா.ம.க. தான்.

மத்திய அமைச்சராக இருந்த அன்புமணி இராமதாசு செய்த சாதனைகள் என்ன? என்று தி.மு.க. வினா எழுப்பியிருக்கிறது. சுகாதாரத் துறையில் நான் படைத்த சாதனைகளை பாராட்டி 4 சர்வதேச விருதுகள் வழங்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் 2 ஐ.நா.வின் சார்பு அமைப்பான உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குனரால் வழங்கப்பட்டவை ஆகும். மற்றொன்று உலகின் மிகப்பெரிய புகையிலை எதிர்ப்பு அமைப்பான அமெரிக்க புற்றுநோய் சங்கத்தால் வழங்கப்பட்ட லூதர் எல்.டெர்ரி விருது ஆகும். போலியோ நோயைக் கட்டுப்படுத்த நான் எடுத்த நடவடிக்கைகளுக்காக சர்வதேச ரோட்டரி சங்கத்தின் போலியோ சாம்பியன் விருது வழங்கப் பட்டது. இது கெண்டுக்கி கர்னல் போன்று பணம் கொடுத்து வாங்கப்பட்ட விருது அல்ல. எனக்கு முன் இந்த விருதை ஜார்ஜ் புஷ், பில் கிளிண்டன், பில் கேட்ஸ், டோனி பிளேர், கோஃபி அனான் ஆகியோர் தான் பெற்றுள்ளனர். இதுபோன்ற விருதுகளை நீங்கள் உட்பட தமிழகத்தைச் சேர்ந்த வேறு எந்த தலைவர்களாவது பெற்றிருக்கிறார்களா?

ஆனால், ரூ.1.76 லட்சம் கோடி 2ஜி ஊழல், பதவிக்காகவும் , ஊழலுக்காகவும் பேரம் பேசும் நீரா ராடியா ஒலிநாடா, நீதிபதி சர்க்காரியா ஆணையத்தின் விஞ்ஞான ஊழல் சான்றிதழ் ஆகியவையே தி.மு.க.வின் அடையாளங்கள். இதை உங்களால் மறுக்க முடியுமா?

தமிழகத்தைக் காப்பாற்ற வேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம். அதற்காக தமிழகத்தை 50 ஆண்டுகளாக ஆட்டிப் படைக்கும் தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரு கிரகணங்களையும் விரட்டியடிக்க வேண்டும் என்ற மக்களின் விருப்பத்தை நிறைவேற்றவே நாங்கள் போராடுகிறோம். அதற்காகத் தான் இரு கட்சிகளின் குறைகளையும் அம்பலப்படுத்துகிறோம். எங்களின் இந்தப் பணி தொடரும். தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளில் செய்யப்பட்டதாகக் கூறப்படும் வளர்ச்சிப் பணிகள் குறித்தும், தமிழக மக்கள் நலன் மற்றும் வளர்ச்சிக்காகவும், தமிழ் வளர்ச்சிக்காகவும், ஈழத் தமிழர் நலனுக்காகவும் தி.மு.க. எதையாவது செய்திருப்பதாக நீங்கள் கருதினால் அது குறித்தும் ஒரே மேடையில் விவாதிக்க நான் தயார்… நீங்கள் தயாரா?” என்று சவால் விட்டுள்ளார்