September 27, 2021

”முள்ளு முனையிலே மூணு குளம் வெட்டினேன், அதிலே இரண்டு குளம் பாழ்; ஒன்றில் தண்ணியே வரல! – கருணாநிதி

”போன 2006 முதல் 2011 வரை இருந்த எங்கள் திமுக ஆட்சியில் தமிழகத்தின் தொழில் வளர்ச்சியில் ஓர் அமைதிப் புரட்சி ஏற்பட்டது.. ஆனால் அ தி மு க நடத்திய இந்த முதலீட்டாளர் மாநாடு முள்ளு முனையிலே மூணு குளம் வெட்டினேன், அதிலே இரண்டு குளம் பாழ்; ஒன்றில் தண்ணியே வரல” என்ற பழமொழிதான் மீண்டும் ஞாபகத்திற்கு வருகிறது ” என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
karuna double
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ”கடந்த ஓராண்டில் பிரதமர் நரேந்திர மோடி 26 நாடுகளுக்கு பயணம் செய்தார். அதன் மூலம் ரூ. 1 லட்சத்து 89 ஆயிரம் கோடி நேரடி முதலீடுகள் வந்துள்ளதாக மத்திய அரசின் தொழில் கொள்கை மற்றும் மேம்பாட்டுத் துறையின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், தமிழக அரசு 2 நாள்கள் நடத்திய உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் ரூ. 2 லட்சத்து 40 ஆயிரம் கோடி முதலீடுகள் கிடைத்துள்ளதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கான வழிமுறைகள் எளிமையாக்கப்பட்டு ஒரே மாதத்தில் அனுமதி கிடைத்து விடும் என்றும் அவர் அறிவித்திருக்கிறார். ஆனால், முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்ற அரியலூர் மாவட்டத் தைச் சேர்ந்த தொழிலதிபர் தனஞ்செயன், ‘‘கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தொழில் தொடங்க மாவட்ட ஆட்சியர், அதிகாரிகளிடம் ஆவணங்களைக் கொடுத்தேன். இதுவரை அனுமதி கிடைக்கவில்லை’’ என அமைச்சருடன் வாக்கு வாதம் செய்திருக்கிறார். தென் மாவட்டங்களில் தொழில் தொடங்க சிறப்பு சலுகைகள் வழங்கப்படும் என்றும் முதல்வர் ஜெயலலிதா பேசியிருக்கிறார்.

ஆக.. இந்த முதலீட்டாளர் மாநாடு முள்ளு முனையிலே மூணு குளம் வெட்டினேன், அதிலே இரண்டு குளம் பாழ்; ஒன்றில் தண்ணியே வரல” என்ற பழமொழிதான் மீண்டும் ஞாபகத்திற்கு வருகிறது. நடைபெற்ற மாநாட்டில் அமெ ரிக்காவின் சன் எடிசன் நிறுவனம் 12 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய முன் வந்திருப்பதையும், அதானி நிறுவனம் 15 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்வோம் என்று அறிவித்திருப்பதையும் பெரிதாகக் குறிப்பிட்டுள் ளார்கள். ஆனால் இந்த இரண்டு நிறுவனங்களும் முதலீடு செய்யும் அதே துறையில் 15 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய முன் வந்தோம். தட்டில் கோடிகளை வைத்து தமிழகத்திற்கு மின்சாரம் தர வந்த எங்களை எட்டி உதைத்து துரத்தி யடித்தது ஜெயலலிதாவின் அரசு என்று அந்த மாநாட்டில் பங்கேற்ற சீன கம்பெனியின் பிரதிநிதி ஒருவர் கூறியதாக “நக்கீரன்” இன்று எழுதியுள்ளது. இந்த இதழின் செய்தியாளர் அதிகாரிகளிடம் போடப்பட்டுள்ள ஒப்பந்தங்கள் பற்றி விசாரித்த போது, “கடந்த நான்கரை ஆண்டுகளில் 60 ஆயிரத்து 620 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் போடப் பட்ட நிலையில், 43 ஆயிரம் கோடி ரூபாய்க்கான முதலீடுகளை மட்டுமே பெற முடிந்தது. இப்போது 2 லட்சத்து 42 ஆயிரம் கோடி ரூபாய்க்கான முதலீடுகள் என்று சொல்லப் பட்டுள்ள அறிவிப்பு சட்டமன்றத்தில் முதல் வர் படிக்கும் 110 அறிக்கையைப் போல ஆகி விடுமோ?” என்று கூறியதாக செய்தி வந்துள்ளது.

தென் மாவட்டங்களில் தொழில் தொடங்குவது குறித்து ஆராய்வதற்காக கடந்த திமுக ஆட்சியில் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ரத்தினவேல் பாண்டியன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் முயற்சியில் நாங்குநேரியில் மிகப்பெரிய சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால் பின்னர் வந்த ஆட்சியில் இந்தத் திட்டத்தை நிறைவேற்று வதற்கான எந்த ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை.கடந்த திமுக ஆட்சியில் தொழில் வளர்ச்சிக்கு உதவ ‘சிறப்பு தொழில் முனைப்புக் குழு’ அமைக்கப்பட்டது. 2009-10-ம் ஆண்டில் தொழில் துறை மானியக் கோரிக்கை தயாரிப்பதற்கு முன்பாக குறு,சிறு, நடுத்தர தொழில் முனைவோர்களுடன் அன்றைய துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசித்தார்.வாகன உற் பத்தி தொழிற்சாலைகளுக்கு நிலங்கள், சாலைகள், மின்சாரம் வழங்குவதில் மற்ற இந்திய மாநிலங்களைவிட தமிழகம் சிறப்பாக செயல்படுவதாக ‘வால் ஸ்ட்ரீட் ஜேர்னல்’ கடந்த 2010 ஜூலை 8 இதழில் பாராட்டியது.

2006-ல் திமுக ஆட்சி அமைந்த பிறகு 5 ஆண்டுகளில் ரூ. 5 லட்சத்து 73 ஆயிரத்து 765 கோடியே 94 லட்சம் முதலீடுகள் அதிகரித்து 2010 டிசம்பரில் ரூ. 7 லட்சத்து 65 ஆயிரத்து 557 கோடியே 92 லட்சம் என நான்கு மடங்கு முதலீடுகள் அதிகரித்தது. இதன் மூலம் தமிழக தொழில் வளர்ச்சியில் ஓர் அமைதிப் புரட்சி ஏற்பட்டது” என கருணாநிதி தெரிவித்துள்ளார்.