September 18, 2021

முள்ளிவாய்க்கால் முற்றத்தை என் உயிர் உள்ளவரை காப்பேன்.- வை கோ சபதம்

“தனித் தமிழ் ஈழம் மலர வேண்டும். அதற்காக இந்த முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் எழுச்சி கொடுக்கும். இதனை யாரும் இடிக்கவோ, தகர்க்கவோ நினைத்தால் விடமாட்டோம். இங்கு உள்ள ஒவ்வொரு தமிழனும், தமிழ் உணர்வுகள் உள்ள இளைஞர்களும் பாதுகாப்பாக இருப்பார்கள்.இது ஒரு வீர வணக்கம் செலுத்தும் நினைவு தூண் போன்றது. இதை என் உயிர் உள்ளவரை காப்பாற்றுவேன். ” என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.
nov 9 - vaiko
இலங்கையில் நடந்த போரில் அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இறுதி கட்ட போரில் உயிரிழந்தவர்களின் நினைவாக தஞ்சை விளார் பைபாஸ் சாலை அருகில் உலக தமிழர் பேரமைப்பு சார்பில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அமைக்கப்பட்டு உள்ளது.இந்த முற்றம் திறக்கப்படுவதற்கு பல எதிர்ப்புகள் கிளம்பியது. இதையடுத்து மதுரை உயர் நீதிமன்றம் பிறப்பித்த ஆணைக்கிணங்க கடந்த (6–ந்தேதி) உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் திறந்து வைத்தார்.

இதையடுத்து இதன் திறப்பு விழா தொடர் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ம.நடராஜன் தலைமை வகித்தார்.நிகழ்ச்சி குழுத் தலைவர் அயனாபுரம் முருகேசன் வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளராக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டு பேசினார்.அப்போது அவர்,”கடந்த 2009–ம் ஆண்டு இலங்கையில் நடந்த இறுதி போரில் சுமார் 1 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஈழத் தமிழர்கள் கொடூர படுகொலை செய்யப்பட்டனர்.கொல்லப்பட்ட ஈழத் தமிழர்களை காப்பாற்ற முடியாமல் தமிழகத்தில் உள்ள தமிழர்கள் மட்டும் அல்லாமல் உலககெங்கும் பரவி இருக்கும் நம் தமிழ் இன மக்கள் வேதனைப்பட்டோம்.

உயிரிழந்த தமிழர்களின் நிகழ்வுகளை சித்தரிக்கும் வகையில் நினைவு முற்றத்தில் சிலைகள் அமைக்கப் பட்டுள்ளன. இவை வெறும் சிலைகள் அல்ல.ஈழத்தமிழர்கள் படுகொலையை கண்டித்து முத்துக்குமார் உள்ளிட்ட 20 பேர்கள் தீக்குளித்து இறந்தனர். அவர்களின் சிலைகளை நாம் பார்க்கும் போது நம் கண்களில் ரத்த கண்ணீர் வருகிறது. அங்கு தான் காமன்வெல்த் மாநாடு நடக்க இருக்கிறது. இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்த கூடாது. காமன்வெல்த் அமைப்பில் இருந்து இலங்கையை நீக்க வேண்டும். மீறி அங்கு மாநாடு நடந்தால் இந்தியாவில் இருந்து பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்க கூடாது.

இலங்கையில் இசைப் பிரியா கொடூரமான முறையில் கொல்லப்பட்ட சம்பவத்தை சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டு உள்ளது. அந்த கொடூர காட்சியை பார்க்கும் போது தொப்புள் கொடி உறவில் இருந்து தமிழ் உணர்வுகள் எழுகிறது. சிங்கள வெறியர்கள் பச்சிளம் குழந்தைகளையும், இளம் பெண்களையும், கர்ப்பிணி பெண்களையும் கொடூரமான முறையில் கொத்து, கொத்தாக குண்டுகளை போட்டு படுகொலை செய்துள்ளனர்.

அங்கு நடைபெறும் மாநாட்டில் இந்தியா பங்கேற்பதை தவிர்க்க வேண்டும். ஈழத்தில் உயிரிழந்தவர்களின் நினைவு காலம் காலத்திற்கும், நம் வருங்கால சந்ததியினர்களும் தெரிந்து கொள்ள வேண்டும்.

தனித் தமிழ் ஈழம் மலர வேண்டும். அதற்காக இந்த முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் எழுச்சி கொடுக்கும். இதனை யாரும் இடிக்கவோ, தகர்க்கவோ நினைத்தால் விடமாட்டோம். இங்கு உள்ள ஒவ்வொரு தமிழனும், தமிழ் உணர்வுகள் உள்ள இளைஞர்களும் பாதுகாப்பாக இருப்பார்கள்.

இது ஒரு வீர வணக்கம் செலுத்தும் நினைவு தூண் போன்றது. இதை என் உயிர் உள்ளவரை காப்பாற்றுவேன். எனக்கு பிறகு இந்த முற்றத்தை காப்பாற்றுவது தமிழக மக்கள் மற்றும் உலக தமிழ் மக்கள் கடமையாகும்.இந்த முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை உலக மக்களுக்கு அர்ப்பணிக்கிறேன். இந்த முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் தமிழர்களுக்கு கலங்கரை விளக்கமாக விளங்கும்.”என்று அவர் பேசினார்.