July 28, 2021

மும்பை “மேக் இன் இந்தியா” விழா அரங்கில் தீ விபத்து

சர்வதேச அளவிலான தொழில் முதலீட்டை ஈர்க்கும் வகையில் மராட்டிய அரசு சார்பில் மும்பையில் ‘மேக் இன் இந்தியா’ வார விழா 6 நாட்கள் நடைபெறுகிறது. பாந்திரா –குர்லா காம்ப்ளக்ஸ், ஒர்லி, கிர்காவ் கடற்கரை உள்ளிட்ட இடங்களில் நடைபெறும் விழாவை நேற்று முன்தினம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.தொடக்க விழாவில் பின்லாந்து பிரதமர் ஜூகு சிபிலியா, சுவீடன் பிரதமர் ஸ்டீபன் லோப்வன், லிதுவேனியா பிரதமர் அல்ஜிர் டாஸ் பட்கெவிசியஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் 49 நாடுகளில் இருந்து தொழில் நிறுவன பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
mumbai fire


மேலும் ‘மேக் இன் இந்தியா வார விழா’வையொட்டி கிர்காவ் கடற்கரையில் தொழில் கண்காட்சி, கூட்டரங்கம், கலைநிகழ்ச்சிகள் போன்றவற்றிக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. இதற்காக அங்கு பிரம்மாண்ட மேடை, பந்தல் அமைக்கப்பட்டு இருந்தன. 2–வது நாள் நிகழ்ச்சியாக நேற்று மாலை அங்கு மராத்திய கலாசார கலைநிகழ்ச்சிகள் நடந்தன. இந்த நிகழ்ச்சியை விழா மேடையில் மராட்டிய கவர்னர் வித்யாசாகர் ராவ், மராட்டிய முதல்– அமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, இந்தி நடிகர் அமிதாப்பச்சன், நடிகை ஹேமமாலினி ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்.

பின்னர் அவர்கள் நிகழ்ச்சிகளை பார்த்து ரசிப்பதற்காக மேடையின் கீழ் முதல் வரிசை இருக்கையில் அமர்ந்தனர். ஏறத்தாழ 25 ஆயிரம் பேர் இந்த நிகழ்ச்சிகளை காண்பதற்காக திரண்டு இருந்தார்கள். இதைத் தொடர்ந்து கலைநிகழ்ச்சிகள் தொடங்கி நடந்து கொண்டிருந்தன. இரவு 7.45 மணி அளவில் மராட்டிய கலாசார கலைநிகழ்ச்சியான ‘லாவனி‘ நடன நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த போது, மேடை யில் வண்ண ஒளிக்கீற்றை பாய்ச்சும் ஒரு விளக்கில் இருந்து புகை கிளம்பியது. அந்த விளக்கு மேடையின் கீழ் பகுதியில் இருந்தது. இதனால் அதை யாரும் கவனிக்கவில்லை.

மேடையில் நடனம் ஆடிய பெண்கள் உற்சாகத்துடன் ஆடியபடியே இருந்தனர். பார்வையாளர்கள் நடனத்தை ரசித்து கொண்டு இருந்தனர். அப்போது தீ பரவியதை கவனித்த போலீசார் மேடையில் நடனமாடியவர்களை கீழே இறங்கி செல்லும் படி எச்சரித்தனர். அதிர்ச்சி அடைந்த நடன கலைஞர்கள் அலறி அடித்து கொண்டு மேடையில் இருந்து கீழே இறங்கி ஓட்டம் பிடித்தனர். இதனால் அங்கு பரபரப்பு உண்டானது.

கடற்கரையோரம் என்பதால் காற்றின் வேகம் காரணமாக அடுத்த சில நொடிகளில் மேடை முழுவதும் தீ மளமளவென பரவி மேலே போடப்பட்டிருந்த பந்தலிலும் பற்றியது. நடன நிகழ்ச்சியை பார்த்து கொண்டு இருந்த கவர்னர் வித்யாசாகர் ராவ், முதல்–அமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, இந்தி நடிகர்கள் அமிதாப்பச்சன், அமீர்கான், நடிகை ஹேமமாலினி ஆகியோர் உடனடியாக பாது காப்பாக வெளியேற்றப்பட்டனர். அவர்கள் இந்த பயங்கர தீ விபத்தில் இருந்து உயிர் தப்பினார்கள். மேலும் அங்கிருந்த பார்வையாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

மேக் இன் இந்தியா வாரவிழாவையொட்டி ஏற்கனவே அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தப்பட்டு இருந்தன. தீயணைப்பு படையினர் விரைந்து வந்து மேடையை நோக்கி தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்க போராடினார்கள். ஆனால் அவர்களால் தீயை உடனடியாக கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. நாலாபுறமும் சுற்றி நின்றபடி தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். தீயணைக்கும் பணியில் 16 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபட்டிருந்தன.

சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த தீ விபத்தில் கிர்காவ் கடற்ரையில் மேக் இன் இந்தியா வார விழாவிற்காக போடப்பட்டிருந்த பிரமாண்ட பந்தலும் முற்றிலுமாக எரிந்து போனது. அங்கு அமைக்கப்பட்டிருந்த கூட்டரங்கம், தொழில் கண்காட்சியில் வைக்கப்பட்டு இருந்த பொருட்கள், எலக்ட்ரானிக் பொருட்கள் உள்ளிட்டவை எரிந்து நாசமாகின. அந்த பகுதியே புகை மண்டலமாக காட்சி அளித்தது.

இந்தநிலையில் தீ விபத்து பற்றி அறிந்ததும் கூடுதல் தலைமை செயலாளர் கே.பி.பக்ஷி, மும்பை போலீஸ் கமிஷனர் தத்தா பட்சல்கிகர் ஆகியோர் கிர்காவ் கடற்கரைக்கு விரைந்து வந்து பார்வை யிட்டனர். தொடர்ந்து இரவு 9 மணிக்கு மேலும் தீயை அணைக்கும் பணி நடந்தது. தீயை அணைக்கும் பணியை முதல்–அமைச்சர் தேவேந்திர பட்னாவிசும் நேரில் பார்வையிட்டார். தீ விபத்துக்கான காரணம் பற்றி விசாரணைக்கு உத்தரவிட்டு இருப்பதாக அவர் தெரிவித்தார்.