October 16, 2021

முதல்வராகிறார் ஓ.பன்னீர்செல்வம்!.

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு நேற்று 4 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதிக்கப் பட்டது. இதனால் முதல்-அமைச்சர் பதவியையும், எம்.எல்.ஏ. பதவியையும் அவர் தானாகவே இழந்து விட்டார். ஜெயலலிதா நேற்று சிறையில் அடைக்கப்பட்டதை தொடர்ந்து இன்று புதிய முதல் அமைச்சரை தேர்ந்தெடுப்பதற்காக அ.தி.மு.க. எம்.எல்.ஏ. க்களின் அவசரக்கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் தொடங்கி நடைபெற்றது. கூட்டம் ஓ. பன்னீர் செல்வம் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அ.தி.மு.க. சட்டமன்ற கட்சித்தலைவராக ஒருமனதாக ஓ. பன்னீர் செல்வம் தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து முக்கிய நிர்வாகிகளுடன் மாலை 6 மணிக்கு ஓ.பன்னீர்செல்வம் தமிழக ஆளுனர் ரோசய்யாவை சந்திக்க செல்கிறார். இதையடுத்து, அவர் நாளை ஆளுநர் மாளிகையில் நடக்க உள்ள விழாவில் முதல்வராக பதவியேற்க உள்ளார். அப்போது முக்கிய அமைச்சர்களும் பொறுப்புக்களை ஏற்றுக் கொள்ள உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ops sep 28
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு தண்டனை விதிக்கப்பட்டதால், முதல்– அமைச்சர் பதவியையும், எம்.எல்.ஏ. பதவியையும் இழந்தார். முதல்– அமைச்சரின் கூட்டுப் பொறுப்பில் அமைச்சரவை இடம் பெறுகிறது. எனவே, முதல்– அமைச்சர் பதவியை ஜெயலலிதா இழந்ததால் மந்திரிகளும் பதவியை இழக்கிறார்கள். எனவே, புதிய முதல்– அமைச்சர் மற்றும் புதிதாக அமைய உள்ள அமைச்சரவை பற்றி, அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூடி முடிவு செய்ய வேண்டும்.

இதற்கான எம்.எல்.ஏ.க்கள் அவசரக் கூட்டம் இன்று மாலை 3.15 மணியளவில் அ.தி.மு.க. தலைமை கழகத்தில் தொடங்கியது. இதில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கலந்து கொண்டனர். அவர்களுடன் மைத்ரேயன், முன்னாள் டி.ஜி.பி. நட்ராஜ் உள்பட முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டனர். இந்த கூட்டம் மாலை 4.30 மணியளவில் முடிவடைந்தது.கூட்டத்தில் ஓ. பன்னீர் செல்வம் புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

பன்னீர்செல்வம் தலைமையிலான புதிய அரசு நாளை பதவி ஏற்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஓ.பன்னீர்செல்வம் ஏற்கனவே 2001 செப்டம்பர் முதல் 2002 மார்ச் மாதம் வரை தமிழக முதல்வராக இருந்தது குறிப்பிடத்தக்கது.