September 20, 2021

முதலமைச்சராகும் ஜெயலலிதா! புதிய அமைச்சரவை பட்டியல்!!

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா உள்பட 4 பேருக்கு பெங்களூர் தனி நீதிமன்றம் கடந்த செப்டம்பர் 27ம் தேதி 4 ஆண்டு சிறை தண்டனை வழங்கியது. இதையடுத்து, ஜெயலலிதா முதல்வர் பதவி மற்றும் எம்எல்ஏ பதவியை இழந்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா மேல்முறையீடு செய்தார். நீதிபதி குமாரசாமி விசாரணை நடத்தி, சொத்து குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா உள்பட 4 பேரும் விடுதலை செய்யப்படுவதாக கடந்த 11ம் தேதி அறிவித்தார்.
jaya cm may 23 a
இதைத்தொடர்ந்து, அதிமுக சட்டமன்ற கட்சி தலைவராக ஜெயலலிதாவை தேர்ந்தெடுக்கப் படுவதற்கான எம்எல்ஏக்கள் கூட்டம் சென்னை, ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று காலை 7 மணிக்கு அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் நடந்தது.கூட்டத்தில், அதிமுக சட்டமன்ற கட்சியின் தலைவராக, ஜெயலலிதா தேர்ந்தெடுக்கப்படுவதற்கான தீர்மானத்தை ஓ.பன்னீர்செல்வம் முன்மொழிந்தார். நத்தம் விஸ்வநாதன் வழிமொழிந்தார். இதையடுத்து ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் 144 பேரும், தேமுதிக அதிருப்தி எம்எல்ஏக்கள் 7 பேர் என மொத்தம் 151 எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர்.

அதிமுக சட்டமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான கடிதத்தை ஓ.பன்னீர்செல்வம் மற்றும் மூத்த அமைச்சர்கள் போயஸ் கார்டன் சென்று நேற்று காலை 7.15 மணிக்கு ஜெயலலிதாவிடம் வழங்கினர். இதையடுத்து, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் மூத்த அமைச்சர்கள் காலை 8 மணிக்கு கிண்டியில் உள்ள ராஜ்பவன் சென்று ஆளுநர் ரோசய்யாவை சந்தித்தனர். அப்போது, முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது தலைமையிலான அமைச்சரவையின் ராஜினாமா கடிதத்தையும், அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை சட்டமன்ற கட்சி தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுத்ததற்கான கடிதத்தையும் கொடுத்தார்.

இதை உடனடியாக ஏற்றுக்கொண்ட ஆளுநர் ரோசய்யா, மாற்று ஏற்பாடு செய்யும் வரை பதவியில் நீட்டிக்கும்படி ஓ.பன்னீர்செல்வத்துக்கு கோரிக்கை விடுத்தார். ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா செய்ததை தொடர்ந்து, தமிழகத்தில் ஜெயலலிதா தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்க நேற்று காலை ஆளுநர் ரோசய்யா அழைப்பு விடுத்தார். இதைத் தொடர்ந்து, ஜெயலலிதா நேற்று பிற்பகல் 1.30 மணிக்கு போயஸ் கார்டன் வீட்டில் இருந்து புறப்பட்டு 2 மணிக்கு ராஜ்பவன் சென்று ஆளுநர் ரோசய்யாவை சந்தித்தார்.

அப்போது அமைச்சரவை பட்டியலையும் வழங்கினார். தொடர்ந்து, ஆளுநர் ரோசய்யா முதலமைச்சராக ஜெயலலிதாவை நியமித்து அமைச்சரவையை அமைக்குமாறு அழைப்பு விடுத்தார். இதுகுறித்து, ஆளுநர் மாளிகை சார்பில் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “முதல்வர் ஜெயலலிதா அளித்துள்ள அமைச்சர்கள் மற்றும் இலாகா பட்டியலுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். இதைத்தொடர்ந்து, இன்று காலை 11 மணிக்கு ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையின் பதவியேற்பு விழா சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள நூற்றாண்டு மண்டபத்தில் நடைபெறும்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
jaya leader 23a
இதையடுத்து ராஜ்பவனில் இருந்து வெளியான அமைச்சரவை பட்டியல்”–

1) ஜெயலலிதா, முதல்–அமைச்சர் – பொது, இந்திய ஆட்சிப்பணி, இந்திய காவல் பணி, இந்திய வனப் பணி, பொது நிர்வாகம், மாவட்ட வருவாய் அலுவலர்கள், காவல் மற்றும் உள்துறை.

2) ஓ.பன்னீர்செல்வம் நிதித்துறை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் – நிதி, திட்டம், சட்டமன்றம், தேர்தல்கள் மற்றும் கடவு சீட்டுகள், பொதுப்பணிகள், சிறு பாசனம் உள்ளிட்ட பாசன திட்டம் மற்றும் செயற் திட்டப்பணிகள்.

3) நத்தம் ஆர்.விஸ்வநாதன் மின்சாரத் துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் – மின்சாரம், மரபு சாரா எரிசக்தி மேம்பாடு, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை மற்றும் கருப்பஞ்சாற்றுக் கசண்டு (மொலாசஸ்).

4) ஆர்.வைத்திலிங்கம் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை மற்றும் வேளாண்மைத் துறை அமைச்சர் – வீட்டுவசதி, ஊரக வீட்டுவசதி, வீட்டுவசதி மேம்பாடு, குடிசை மாற்று வாரியம் மற்றும் இட வசதி கட்டுப்பாடு, நகரமைப்புத் திட்டமிடல், நகர்ப்பகுதி வளர்ச்சி மற்றும் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம், வேளாண்மை, வேளாண்மை பொறியியல், வேளாண் பணிக் கூட்டுறவுச் சங்கங்கள், தோட்டக்கலை, கரும்புத் தீர்வை மற்றும் கரும்புப் பயிர் மேம்பாடு மற்றும் தரிசு நில மேம்பாடு.

5) எடப்பாடி கே.பழனிசுவாமி நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை மற்றும் வனத்துறை அமைச்சர் – நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள், வனங்கள்.

6) பி.மோகன் ஊரகத் தொழில் துறை மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் – ஊரகத் தொழில்கள், குடிசைத் தொழில்கள் உள்பட சிறு தொழில்கள், தொழிலாளர்கள் நலன், மக்கள் தொகை, வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி, பத்திரிகை அச்சு காகித கட்டுப்பாடு, மக்கள் தொகை கணக்கெடுப்பு, நகர மற்றும் ஊரக வேலை வாய்ப்பு.

7) பி.வளர்மதி சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை அமைச்சர் – மகளிர் மற்றும் குழந்தைகள் நலம் உள்ளிட்ட சமூக நலம், சத்துணவு அனாதை இல்லங்கள் மற்றும் குற்றவாளிகள் சீர்திருத்த நிர்வாகம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் மற்றும் இரவலர் காப்பு இல்லம், மாற்றுத்திறனாளிகள் நலன் சமூக சீர்திருத்தம் மற்றும் சத்துணவுத் திட்டம்.

8) பி.பழனியப்பன் உயர் கல்வித்துறை அமைச்சர் – தொழிற்கல்வி உள்ளிட்ட உயர் கல்வி, மின்னணுவியல், அறிவியல், தொழில் நுட்பவியல்.

9) செல்லூர் கே.ராஜு கூட்டுறவுத்துறை அமைச்சர் – கூட்டுறவு, புள்ளியியல் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் நலன்.

10) ஆர்.காமராஜ் உணவுத்துறை மற்றும் இந்து சமயம் மற்றும் அறநிலையத் அமைச்சர் – உணவு நுகர் பொருட்கள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் விலைவாசி கட்டுபாடு, இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள்.

11) பி.தங்கமணி தொழில் துறை அமைச்சர் – தொழில்கள், ஸ்டீல் கட்டுப்பாடு, சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள், சிறப்பு முயற்சிகள்.

12) வி.செந்தில் பாலாஜி போக்குவரத்துத் துறை அமைச்சர் – போக்குவரத்து, நாட்டுடமையாக்கப்பட்ட போக்குவரத்து, இயக்கூர்திச் சட்டம்.

13) எம்.சி.சம்பத் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் – வணிகவரிகள் மற்றும் பத்திரப்பதிவு, முத்திரைத்தாள் சட்டம்.

14) எஸ்.பி.வேலுமணி நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை, சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள் துறை அமைச்சர் – நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள், வறுமை ஒழிப்புத் திட்டங்கள், ஊரக கடன்கள், நகர்பகுதி மற்றும் ஊரக குடிநீர் வழங்கல், சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள், பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தம் மற்றும் லஞ்ச ஒழிப்பு.

15) டி.கே.எம்.சின்னய்யா கால்நடைப் பராமரிப்புத் துறை அமைச்சர் – கால்நடை பராமரிப்பு.

16) எஸ்.கோகுல இந்திரா கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் – கைத்தறி மற்றும் துணிநூல்.

17) எஸ்.சுந்தரராஜ் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் – விளையாட்டு மேம்பாடு மற்றும் இளைஞர் நலன்.

18) எஸ்.பி.சண்முகநாதன் சுற்றுலாத்துறை அமைச்சர் – சுற்றுலா, சுற்றுலா வளர்ச்சிக் கழகம்.

19) என்.சுப்ரமணியன் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் – ஆதி திராவிடர் நலன், மலை வாழ் பழங்குடியினர் மற்றும் கொத்தடிமைத் தொழிலாளர்கள் நலன்.

20) கே.ஏ.ஜெயபால் மீன்வளத்துறை அமைச்சர் – மீன்வளம் மற்றும் மீன் வளர்ச்சிக் கழகம்

21) முக்கூர் என்.சுப்ரமணியன் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் – தகவல் தொழில் நுட்பம்.

22) ஆர்.பி.உதயகுமார் வருவாய்த் துறை அமைச்சர் – வருவாய், மாவட்ட வருவாய் நிர்வாகம், துணை ஆட்சியாளர்கள், எடைகள் மற்றும் அளவைகள், கடன் கொடுத்தல் குறித்த சட்டம், உள்ளிட்ட கடன் நிவாரணம் மற்றும் சீட்டுகள் மற்றும் கம்பெனிகள் பதிவு.

23) கே.டி.ராஜேந்திர பாலாஜி செய்தி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் – செய்தி மற்றும் விளம்பரம், திரைப்படத் தொழில்நுட்புவியல் மற்றும் திரைப்படச்சட்டம், எழுது பொருள் மற்றும் அச்சுத்துறை மற்றும் அரசு அச்சகம், சிறப்புப் பணிகள் செயலாக்கம், தேர்தல் அறிக்கை அமலாக்கம்.

24) பி.வி.ரமணா பால்வளத் துறை அமைச்சர் – பால்வளம் மற்றும் பால்பண்ணை வளர்ச்சி.

25) கே.சி.வீரமணி பள்ளி கல்வித்துறை அமைச்சர் – பள்ளிக்கல்வி, தொல்லியல், தமிழ் ஆட்சி மொழி, மற்றும் தமிழ்ப்பண்பாடு.

26) தோப்பு என்.டி.வெங்கடாசலம் சுற்றுச்சுழல் துறை அமைச்சர் – சுற்றுச்சூழல் மற்றும் மாசுக் கட்டுப்பாடு.

27) டி.பி.பூனாச்சி கதர் மற்றும் கிராம தொழில் வாரிய துறை அமைச்சர் – கதர் மற்றும் கிராம தொழில் வாரியம், பூதானம் மற்றும் கிராம தானம்.

28) எஸ்.அப்துல் ரஹீம் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் – பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் நலன், வெளிநாடு வாழ் இந்தியர்கள், அகதிகள், வெளியேற்றப்பட்டவர்கள் மற்றும் வக்பு உள்ளிட்ட சிறுபான்மையினர் நலன்

29) டாக்டர் சி.விஜய பாஸ்கர் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் – மக்கள் நல்வாழ்வு, மருத்துவ கல்வி மற்றும் குடும்ப நலன்.