September 25, 2021

மீனவர்களுக்கு டெக்னலஜி மூலம் வழி காட்டலாமே!

இயற்கை ரீதியாக பூமியில் எந்த ஒரு இடத்தையும், தமிழன் பண்டைய காலத்திலேயே பூகோள அடிப்படையில் அமைத்து, 5 பிரிவுகளாக பிரித்தான். மலையும், மலை சார்ந்த பகுதியும் ‘குறிஞ்சி’ என்றான். காடும், காடு சார்ந்த பகுதியும் ‘முல்லை’ என்றான். வயலும், வயல் சார்ந்த பகுதியும் ‘மருதம்’ என்றான். கடலும், கடல் சார்ந்த பகுதியும் ‘நெய்தல்’ என்றான்.குறிஞ்சியும், முல்லையும் திரிந்த இடம் ‘பாலை’. அதாவது, மலை இருக்கும் மரங்கள் இருக்காது. காடு இருக்கும், ஆனால் எந்தவித பயனும் இல்லாத முற்புதராக இருக்கும். இந்த 5 பகுதி இயற்கையும் கொண்டது தமிழ்நாடு. அதிலும், கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்த 5 பகுதிகளும் இருக்கிறது என்ற பெருமை உண்டு. கடலும், கடல் சார்ந்த பூமியான நெய்தலை பொறுத்தமட்டில், தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் 1,076 கிலோ மீட்டர் நீண்ட கடல் பரப்பு இருக்கிறது. ஏறத்தாழ 10 லட்சம் மீனவ மக்கள் இந்த கடலையே தங்கள் வாழ்வாதாரமாக கொண்டிருக்கிறார்கள். 4,898 மோட்டார் பொருத்தப்பட்ட பாரம்பரிய படகுகளும், 5,262 மோட்டார் படகுகளும், 24,735 மோட்டார் பொறுத்தப்படாத நாட்டு படகுகளும் கடலை தங்கள் பிழைப்புக்குரிய பகுதிகளாக கருதி மீன்பிடித்து வருகிறார்கள்.
edit -fishemen
இந்த 10 லட்சம் மக்களுக்கும் மீன்பிடிப்பதை தவிர, வேறு எந்த தொழிலும் தெரியாது. படகிலேயே கடலுக்குள் செல்வார்கள். மீன்பிடிப்பார்கள் அவ்வளவுதான். அவர்களை மீன்பிடிக்க தடை செய்தால் நிச்சயமாக கடலைவிட்டு வேறு எங்கேயும் போய் அவர்களால் பிழைக்க முடியாது. மீன்பிடி தொழிலில் லாபம் இல்லாவிட்டாலும், மீன்பிடிக்க தடை இருந்தாலும், அவர்களில் பலர் கடத்தல் தொழிலுக்குதான் வேறு வழியில்லாமல் போவார்கள் என்பது நிதர்சனமான உண்மை.

பொதுவாக மீனவர்களிடம் ஒரு பேச்சு உண்டு. மீன் எந்த இடத்திற்கு போகிறதோ?, அதை பின்தொடர்ந்து மீனவன் போவான். எங்கே மீன் இருக்கிறதோ?, அங்கு அவன் நிச்சயமாக செல்வான். காலம் காலமாக பாரம்பரிய உரிமையாக கடலில் எல்லையில்லாமல் எங்கேயும் போய் மீன்பிடித்து வந்த தமிழக மீனவர்களுக்கு, 2009–ம் ஆண்டு விடுதலைப்புலிகள் இயக்கம், இலங்கை ராணுவத்தால் நசுக்கப்பட்டபிறகு, நீ எல்லை தாண்டி வந்தாய், எங்கள் எல்லைக்குள் வந்து எங்கள் மீன்வளத்தை சூறையாடுகிறாய் என்று இலங்கை கடற்படையால் கைது செய்யும் படலம் தொடர்ந்து வருகிறது. தெரிந்து போகும் மீனவர்களும் உண்டு. தெரியாமல் கடல் எல்லையை தாண்டும் மீனவர்களும் உண்டு.

எனவே, இப்போதுள்ள சூழ்நிலையில், இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை மீறல் ஆணையத்தில் அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தை ஆதரிக்காமல், நடுநிலை வகித்து செயல்பட்ட இந்தியா, இதை ராஜதந்திரமாக பயன்படுத்தி, தமிழக மீனவர்களின் நலன் குறித்தும், இலங்கை அரசிடம் பேசி நல்ல தீர்வு காணவேண்டும். மீனவர்களின் படகுகளுக்கு ‘ஜி.பி.எஸ்., எக்கோ சவுண்டர்’ என்ற மீன் இருக்கும் இடத்தை காட்டிக்கொடுக்கும் கருவி, திசைக்காட்டும் காம்போஸ் கருவி போன்றவற்றை முடிந்தால் இலவசமாக கொடுக்கலாம். இல்லையெனில், மானிய விலையில் கொடுத்து கண்டிப்பாக எல்லா படகுகளும், இந்த கருவிகளைக் கொண்டுதான் கடலுக்குள் செல்லவேண்டும் என்பதை வலியுறுத்த வேண்டும். மேலும், கடலோர காவல்படை, நமது கடல் எல்லையில் ரோந்து பணிகளை தீவிரப்படுத்தி, மீனவர்கள் கடல் எல்லையை தாண்டும்போது, அவர்களுக்கு அறிவுரை கூறி, திருப்பி அனுப்பும் பணியில் ஈடுபடலாம்.

இந்திய ராணுவம் தற்போது இந்திய தானியங்கி அடையாள முறை என்ற ஒன்றை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் ‘நெட் ஒர்க்’ இல்லாத கடல் பகுதியில்கூட மீனவர்களிடம் செல்போனில் பேசமுடியும். ‘இந்த இடத்தில் மீன் இருக்கிறது. இந்த இடம் சர்வதேச கடல் எல்லை. நீங்கள் அதன் அருகில் இருக்கிறீர்கள்’ போன்ற விவரங்களை தெரிவிக்கவும், கடல் வழியே தீவிரவாதம் ஊடுருவி விடாதபடி கண்காணிக்கவும் இந்தமுறை பயன்படும். தமிழக அரசும் உடனடியாக நமது ராணுவத்தையும், மத்திய அரசையும் வலியுறுத்தி, இந்த முறையை தமிழக கடலோர பகுதிகளில் அமலுக்கு கொண்டுவருவதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

தினத்தந்தி தலையங்கம்