September 25, 2021

மீண்டு(ம்) காமெடி கிங் ஆவது உறுதி ! – வடிவேலுவின் தெனாலிராமன் சபதம்!

சுமார் பத்தாண்டு காலமாக காமெடி கிங்காக வலம் வந்த வைகைப் புயல் வடிவேலு கிட்டத்தட்ட இரண்டு வருட இடைவெளி பிறகு ”தெனாலிராமன்” என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் பாடல் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. விழா துவக்கத்திலேயே வடிவேலுவிடம் அரசியல் தொடர்பான கேள்விகள் கேட்க வேண்டாம். படம் தொடர்பாக மட்டும் கேள்விகள் இருந்தால் கேளுங்கள். அரசியல் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்க விரைவில் வேறொரு நிருபர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்படும், என நிகழ்ச்சி தொகுப்பாளர் தெரிவித்தார்.
thenali audio 1
பின்னர் நிருப்ர்களிடம் பேசிய வடிவேலு “நீங்களெல்லாம் என்னை ஒரு மாதிரியாக பார்ப்பதை பார்த்தா தேவையா உனக்கு இதெல்லாம்… -ங்கறதை மனசுக்குள்ளே கேட்கறது மாதிரி இருக்கிறது. நான் அரசியலுக்கு வந்தது காலத்தின் கட்டாயம்; அது நானாக எடுத்த முடிவு. ஆனா இனிமே சினிமா தான் என் வழி. இதுக்கிடையிலே என்னை வைத்து படம் எடுத்தா ஏதும் பிரச்னை ஏற்படுமோன்னுன நினைத்து படம் கொடுக்க தயாரிப்பாளர்கள் பலபேரு பயந்து போய்ட்டங்க… அது மட்டுமில்லாம என்னை தேடி வந்த தயாரிப்பாளர்களை யார், யாரோ பயமுறுத்தி பட வாய்ப்பு கிடைக்காமல் செய்ய முயன்றனர். ஆனா எது நடந்தாலும் நடக்கட்டும் என நான் அமைதியா இருந்தேன். அது மட்டுமில்லாம திரும்பவும் படத்தில் நடித்தால் அந்த படம் எனக்கு கிங்காக அமைய வேண்டும்னு திரும்பத் திரும்ப நினைத்திருந்தேன். அந்த நேரத்தில் தான் தெனாலிராமன் பட வாய்ப்பு தேடிவந்தது. இந்த தயாரிப்பாளரையும் சில பேர் சந்தித்து வடிவேலுக்கு படம் கொடுக்காதீர்கள்; சிக்கலில் மாட்டிக் கொள்வீர்கள் என எச்சரித்துள்ளனர். அது எனக்கு தெரிய வந்து நானே இந்த தயாரிப்பாளரிடம், பரவாயில்லை; பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்றேன். அவரோ, நீ நல்ல கலைஞன்; உன் தொழிலை மதித்து உனக்கு படம் கொடுக்கிறேன் எனக்கூறி வாய்ப்பு அளித்தார்.
எனக்கு, அட்வான்ஸ் கொடுத்த பிறகும் கூட, அவரிடம் சிலர், வடிவேலுக்கு வாய்ப்பு கொடுத்தால் சிக்கல் தான் என கூறியுள்ளனர். படம் முடிந்து, இம்மாதம் 18ல், உலகம் முழுவதும் திரையிடப்பட உள்ளது. படத்தில் நான், தெனாலிராமனாக நடிக்கிறேன். கிருஷ்ணதேவராயர் என்ற, கதாபாத்திரம் இடம் பெறவில்லை. மன்னர் கதாபாத்திரம் உள்ளது; பெயர் எதுவும் வைக்கவில்லை. மக்களுக்கு சிரிப்பு மிகப்பெரிய நல்மருந்து. வாய்விட்டு சிரித்தால், நோய்விட்ட போகும் என்பார்கள். மக்களை சிரிக்க வைப்பதே, இனி எனது முழுநேர வேலையாக இருக்கும். படங்களில் நாயகனாகவும், பெரிய நட்சத்திரங்களுடன் காமெடி நடிகராகவும் நடிப்பேன்.”என்று வடிவேலு கூறினார்.