September 27, 2021

மினி பஸ்களில் இருப்பது கட்சி சின்னம் அல்ல..!பசுமைக்கு அடையாளம்!! -அமைச்சர் விளக்கம்!

“மக்கள் புழக்கத்தில் பல்வேறு இலைகள் உள்ளன. சாப்பிட வாழை இலை, உணவுக்கு கருவேப்பிலை, கீரை, வெற்றிலை, செடிகளில் இலை, கொடிகளில் இலை இப்படி அனைத்தும் இலை மயம். தி.மு.க. ஆட்சி காலத்தில் அரசு சிமெண்டில் உதய சூரியன் சின்னம் பொறிக்கப்பட்டு இருந்தது. பல்வேறு திட்டங்களுக்கு கருணாநிதி பெயரை வைத்தார்கள்.ஆனால் தற்போது பசுமையை குறிப்பிடும் நல்ல நோக்கத்தில் 4 இலைகள். கலை நயத்துடன் வரையப்பட்டுள்ளது. இது பசுமைக்கு அடையாளம். கட்சி சின்னம் அல்ல.”என்று அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.
24 - Bus
அரசு மினி பஸ்களில் இரட்டை இலை சின்னம் இருப்பதாக தி.மு.க.வினர் குற்றம் சாட்டியது குறித்து இன்று செ.கு. தமிழரசன் எம்.எல்.ஏ. சட்டசபையில் அமைச்சரிடம் விளக்கம் கேட்டார். இதற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பதில் அளித்தார்.

அப்போது அவர்,”கடந்த 23–ந் தேதி அன்று முதல்–அமைச்சர் சென்னையில் 50 சிறிய பேருந்துகளையும், 610 புதிய பேருந்துகளையும் தொடங்கி வைத்தார். 4 நாட்களில் மட்டும் இந்த சிறிய பேருந்துகளில் 1லட்சத்து 13 ஆயிரம் பேர் பயணம் செய்துள்ளனர்.

மக்களிடம் இது அமோக வரவேற்பை பெற்றுள்ளதை பொறுத்து கொள்ள முடியாமல் கருணாநிதி தூண்டுதலால் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்தனர். அதில் கட்சி சின்னம் வரைந்து இருப்பதாகவும் குற்றச்சாட்டு கூறுகின்றார்கள்.

சட்டசபையில் கடந்த 25–ந் தேதி தி.மு.க.வினர் இந்த பிரச்சினையை கிளப்பினார்கள். அப்போது அவைக்கு வெளியே பேசிய மு.க.ஸ்டாலின் தவறான புள்ளி விவரங்களை தெரிவித்தார். அன்று 50 சிறிய பேருந்துகள்தான் விடப்பட்டன. ஆனால் விடப்பட்ட அனைத்து பஸ்களிலும் கட்சி சின்னம் பொறித்து இருப்பதாக தவறாக ஊடகங்களிடம் தகவல்களை தெரிவித்தார்.

கடந்த காலத்தில் சட்ட சபையில் நடந்த வரலாற்றை திருப்பி பார்க்காமல் இப்போது இது போன்ற குற்றச் சாட்டுகளை கூறுகிறார்கள். மக்களுக்கு மகிழ்சியான ஒரு மனநிலையை ஏற்படுத்தும் வகையிலும், பசுமையான சூழலை உருவாக்கும் வகையிலும் அதில் இலைகள் வரையப்பட்டள்ளன.

இதனை இரட்டை இலையுடன் இணைத்து பேசுவது தேவையற்றது. கடந்த காலத்தில் தி.மு.க. ஆட்சியின் போது தனது பெயரையும், குடும்ப பெயரையும் நெற்பயிருக்கு வைத்தவர். புரட்சித் தலைவி ஆட்சிக்கு வந்த பிறகு எல்லோரும் எல்லாம் பெற வேண்டும் என்ற லட்சியத்துடன் பணிபுரிந்து வருகிறார்.

தி.மு.க. ஆட்சி காலத்தில் போக்குவரத்துறை வங்கிகளிடம் அடகு வைக்கப்பட்டு இருந்தது. புரட்சித்தலைவி 3–வது முறையாக முதல்– அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு அந்த நிலை மாறி போக்குவரத்து துறை வளர்ச்சி அடைந்துள்ளது.

தி.மு.க. ஆட்சி காலத்தில் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து வருவாய் 17 ரூபாய். தற்போது அந்த வருவாய் ஒரு கிலோ மீட்டருக்கு 26 ரூபாய் 39 காசு என்று அறிவித்துள்ளது. தி.மு.க. ஆட்சி காலத்தில் இயக்கிய பேருந்துகள் 19,110. தற்போது இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கை 20,580. சமீபத்தில் முதல்– அமைச்சர் ஓய்வூதியமாக 442 கோடி வழங்கினார். ஓட்டுனர், நடத்துனர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கினார்.

மக்கள் புழக்கத்தில் பல்வேறு இலைகள் உள்ளன. சாப்பிட வாழை இலை, உணவுக்கு கருவேப்பிலை, கீரை, வெற்றிலை, செடிகளில் இலை, கொடிகளில் இலை இப்படி அனைத்தும் இலை மயம். தி.மு.க. ஆட்சி காலத்தில் அரசு சிமெண்டில் உதய சூரியன் சின்னம் பொறிக்கப்பட்டு இருந்தது. பல்வேறு திட்டங்களுக்கு கருணாநிதி பெயரை வைத்தார்கள்.

தற்போது பசுமையை குறிப்பிடும் நல்ல நோக்கத்தில் 4 இலைகள். கலை நயத்துடன் வரையப்பட்டுள்ளது. இது பசுமைக்கு அடையாளம். கட்சி சின்னம் அல்ல. 1972–ல் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அறிமுகப்படுத்திய இரட்டை இலை எல்லோர் மனதிலும் நிரம்பி இருக்கிறது. அதற்கு விளம்பரம் தேட வேண்டிய அவசியம் இல்லை. தி.மு.க. வின் இந்த குற்றச்சாட்டு உண்மைக்கு மாறானது.”என்று அவர் கூறினார்..

இதற்கிடையில் சிற்றுந்துகளில் இரட்டை இலைச் சின்னம் பயன்படுத்தப்பட்டிருப்பதற்கு கண்டனம் தெரிவித்து தி.மு.க நோட்டீஸ் அனுப்பியுள்ளது.தி.மு.க.வின் சட்டப்பிரிவு சார்பில் அனுப்பப்பட்டுள்ள இந்த நோட்டீஸ், முதலமைச்சர் ஜெயலலிதா, போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், போக்குவரத்து செயலாளர், தேர்தல் ஆணையர், உள்ளிட்டோருக்கு அனுப்பப்பட்டுள்ளது.