September 17, 2021

மாவீரர் நாள் – இலங்கைப் போலீஸ் தடை!

இலங்கை தாயக மண்ணின் விடுதலைக்காக உயிர் நீத்த விடுதலைப் புலி மாவீரர்களை நினைவு கூறும் மாவீரர் நாள் ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 27ஆம் தேதி புதன்கிழமை அனுஷ்டிக்கப்படுகிறது. இதற்காகத் தமிழகத்திலும் உலகின் பல்வேறு நாடுகளிலும் பெரும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இவ்வாண்டு மாவீரர் நாள் தினத்தை யாரும் அனுசரிக்கக் கூடாது என்று இலங்கை போலீசாரினால் தடை விதிக்கப்பட்டுள்ளது.
nov 24 - maaveerar naal
இதற்கிடையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குள் வடக்கு மாகாணசபை வந்த பின்னர் முதன் முதலாக வருகின்ற இந்த மாவீரர் நாளை உணர்வெழுச்சியுடன் அனுஷ்டிக்கவேண்டும் என்பதில் இலங்கையின் வடக்குத் தமிழ் மக்களும் ஆவலாக உள்ளனர். ஆனால் திடீரென எதிர்வரும் 27 ஆம் தேதி மாவீரர்களை நினைவு கூர்ந்து ஆலயங்களில் மற்றும் பொது இடங்களில் விளக்கேற்றி அஞ்சலி செலுத்தப் இலங்கைப் போலீசாரினால் தடைவிதிக்கப்பட்டுள்ளது. அன்றையதினம் பேரணிகளையோ அல்லது பொதுக்கூட்டங்களையோ நடத்த கூடாது என்றும் நவம்பர் 27 தீவிரவாதிகளை நினைவு கூரும் நாள் என்றும், அந்த நாளில் அவர்களை எவரும் நினைவு கூர முடியாது என்று இலங்கை இராணுவப் பேச்சாளர் கூறியுள்ளார்

மேலும் கடந்த வருடம் மாவீரர் தினத்தன்று யாழ். பல்கலைக்கழக வளாகம் மற்றும் மாணவர் விடுதிகளில் மாணவர்கள் விளக்கேற்றி, மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய சம்பவம் தொடர்பில் இடம் பெற்ற அசம்பாவிதத்தையடுத்து யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் பயங்கரவாதத் தடுப்புப் போலீஸாரினால் கைது செய்யப்பட்டு ஜெயிலில் வைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த மாவீரர் நாளில் மாவீர்களை நினைவுகூர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்ட பல்வேறு துண்டுப் பிரசுரங்கள் படையினரின் கடும் பாதுகாப்பையும் மீறி யாழ். பல்கலைக்கழகச் வளாகத்தில் நேற்று முன் தினம் விநியோகிக்கப்பட்டிருந்தது. ஆனால் எதிர்பாராத விதமாக எதிர் வரும் 27 ஆம் தேதி மாவீரர்களை நினைவுகூர்ந்து ஆலயங்கள் மற்றும் பொது இடங்களில் விளக்கேற்றி அஞ்சலி செலுத்தப் போலீசாரினால் தடைவிதிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.