September 29, 2021

மார்கண்டே கட்ஜூ தமிழக முதல்வருக்கு முக நூல் வழி எழுதிய கடிதத்தின் தமிழாக்கம்!

“தமிழை வழக்காடு மொழியாக்க தமிழக முதல்வர் முன்வர வேண்டும். இல்லை யெனில் முதல்வர் பதவியில் இருந்து விலக”வேண்டும் -என்று முன்னாள் நீதியரசர் கட்ஜூ முகநூல் வாயிலாகக் கேட்டுக் கொண்டுள்ளார்
katju cm
மார்கண்டே கட்ஜூ தமிழக முதல்வருக்கு முக நூல் வழி எழுதிய கடிதத்தின் தமிழாக்கம்.

அன்புடைய அம்மையீர்,

தமிழக முதல்வராய் இருக்கும் தங்களுக்கு தமிழக மக்களின் நன்மைக்காக பணி புரியும் கடமை உள்ளது. சென்னை உயர் நீதி மன்றத்தில் தமிழை பயன்படுத்தும் உரிமை கோரி தமிழக வழக்கறிஞர்கள் நீண்ட நாள் போராடி வருவது தாங்கள் அறிந்ததே. இந்த கோரிக்கை முற்றிலும் நியாயமானதே, ஏனெனில் அலஹாபாத் , பாட்னா, மத்திய பிரதேஷ் மற்றும் ராஜஸ்தானில் உள்ள உயர் நீதி மன்றங்களில் ஹிந்தி மொழி பயன்படுத்த அனுமதி உள்ளது. எனவே சென்னை உயர் நீதி மன்றதில் தமிழை அனுமதிக்க மறுப்பதில் எந்த நியாயமும் இல்லை. தமிழ் ஒரு உயர்ந்த மொழி, பழமையான மொழி, வளமான இலக்கிய பாரம்பரியமுள்ள மொழி. திருக் குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை, கம்ப ராமாயணம் , திருப்பாவை போன்ற வற்றை கேள்விப் படாதோர் உண்டோ?. நவீன எழுத்தாளர் சுப்பிரமணிய பாரதியை அறியாதோர் உண்டோ?.

எனவே தமிழர்கள் தம் மொழி குறித்து பெருமையுடையவர்களாகவே இருப்பர், தமிழை நீதி மன்ற மொழியாக்க வேண்டும் என்ற அவர்கள் கோரிக்கை நியாய மானதே. நான் அலஹாபாத் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றிய போது பலமுறை ஹிந்தியில் வாதாடியுள்ளேன், பின்னர் உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த போது பலர் ஹிந்தியில் வாதாடுவதை கேட்டிருக்கிறேன். P. S குப்தா போன்ற அலஹாபாத் உயர் நீதிமன்ற நீதிபதிகள் தமது தீர்ப்பை எப்போதும் ஹிந்தியிலேயே வழங்குவார்கள் மேலும் Pt. தயா சங்கர் மிஸ்ரா போன்ற அலஹாபாத் உயர் நீதி மன்ற வழக்கறிஞர்கள் எப்போதும் ஹிந்தியில் மட்டுமே வழக்காடுவர்கள். நான் டெல்லி உயர் நீதி மன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த போதும், பின்னர் உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்த போதும் பல முறை ஹிந்தியில் பேசியுள்ளேன்,

தமிழிலும் சில வாக்கியங்களை சொல்லியுள்ளேன். இந்திய அரசியல் சட்டம் பிரிவு 348(2) இன் படி உயர் நீதி மன்றத்தில் ஆளுநர் [ இங்கு பொருள் முதல்வர், ஏனெனில் ஆளுநர் முதல்வரின் அறிவுறுத்தலின் படி நடப்பவர் ] அனுமதிக்கும் பட்சத்தில் உள்ளூர் மொழி பயன்படுத்தப் படலாம். ஆளுநர் ஜனாதிபதியின் அறிவுரையின் கீழ் அதை அனுமதிக்க முடியும். 1963 ஆட்சி மொழி நடவடிக்கை பிரிவு 7 இன் படி ஆளுநர் அனுமதித்தால் நீதி மன்ற தீர்ப்பும் கூட உள்ளூர் மொழியில் இருக்க முடியும்.

ஆனால் இது வரையில் நீங்கள் தமிழை வழக்காடு மொழியாக்குவது குறித்து ஆளுநருக்கு எந்த கோரிக்கையும் வைக்கவில்லை என்பதும், ஜனாதிபதியிடம் அதற்கான அனுமதி கோரி பேசவில்லை என்பதும் ஆச்சர்யமாக உள்ளது.எனவே நீங்கள் இந்த முயற்சியை உடனே எடுக்க வேண்டும் என்றும் இல்லாவிடில் தமிழக முதல்வர் பதவியை உடனடியாக ராஜினாமா செய்யும்படியும் கேட்டுக் கொள்கிறேன்.

இந்திய பார் கவுன்சில் முட்டாள்தனமாய் 15 உயர் நீதி மன்ற வழக்கறிஞர்களை பணியிடை நீக்கம் செய்துள்ளது. அதில் மதுரை பார் அசோசியேசன் தலைமையும் அடக்கம். இது நிலைமையை மிகவும் சீரழித்துள்ளது. இந்திய பார் கவுன்சிலின் இந்த நடவடிக்கை படு முட்டாள்தனமானது ஏனெனில் இது தமிழகம் முழுதும் உள்ள வழக்கறிஞர்களின் போராட்டத்துக்கு இட்டுச் செல்லும் மேலும் அனைத்து நீதி மன்றங்களும் மூடப் பட வேண்டியும் வரும். சில வழக்கறிஞர்கள் போராட்டத்தின் போது தவறான செயல்கள் செய்தார்கள் என்பதில் உண்மை இருந்தாலும் போராட்டத்தின் பின்னால் உள்ள வலுவான உணர்வுகளையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

சிக்கலைத் தீர்க்க உள்ள ஒரே வழி நீங்கள் உடனடியாக உயர் நீதிமன்றம் உட்பட அனைத்து தமிழக நீதி மன்றங்களிலும் வழக்காடு மொழியாக தமிழை அனுமதிக் கும் படி ஆளுநரை அறிவுறுத்த வேண்டும். மற்றும் இந்திய ஜனாதிபதி யிடமும் இது குறித்து நீங்கள் பேச வேண்டும். மேலும் வழக்காட தமிழை பயன்படுத்துவதா இல்லையா என்பது வழக்கறிஞரின் விருப்பாக இருக்க வேண்டும் , நீதிபதிக்கு தமிழ் தெரியாவிடில் வழக்கறிஞர் ஆங்கிலத்தில் வழக்காட வேண்டும் .

இப்போது சிக்கலைத் தீர்க்க வேண்டிய முழு பொறுப்பும் உங்களிடமே உள்ளது. ஒன்று, இந்திய அரசியல் சட்டம் பிரிவு 348(2) இன் படியும் மற்றும் 1963 ஆட்சி மொழி நடவடிக்கை பிரிவு 7 இன் படியும் உயர் நீதி மன்றத்தில் தமிழை அனுமதிக்கும்படி ஆளுநருக்கு அறிவுறுத்துங்கள், ஜனாதிபதி யிடம் இது குறித்து பேசுங்கள் அல்லது முதல்வர் பதவியை ராஜினாமா செய்யுங்கள்.

அன்புடன்
நீதிபதி மார்கண்டே கட்ஜூ
முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி,
முன்னாள் தலைமை நீதிபதி, சென்னை உயர்நீதி மன்றம்.