October 24, 2021

மாதந்தோறும் ஓரிருமுறை ரேடியோ ஸ்பீச்! – மோடி பிராமிஸ்!

”நமது நாட்டை முதன்மையாக்க நீங்கள் ஒவ்வொருவரும் முன்வர வேண்டும். நமது நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல உங்களிடம் நல்ல திட்டங்கள், யோசனைகள் இருந்தால் தயங்காமல் அதை என்னிடம் நீங்கள் சொல்லலாம். இதற்காகவே www.mygov.in என்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இணையத்தளத்தை பயன்படுத்தி உங்கள் கருத்துக்கள், யோசனைகளை எனக்கு அனுப்பி வையுங்கள். உங்கள் கருத்துக்களை நான் வரவேற்கிறேன். உங்கள் எண்ணங்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். இனி மாதத்தில் ஒன்று அல்லது 2 தடவை ஞாயிற்றுக் கிழமைகளில் பகல் 11 மணிக்கு உங்களுடன் தொடர்ந்து பேசுவேன் ” என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
modi oct 3
 ஆல் இந்தியா ரேடியோ பன்பலையில் முதல் முறையாக பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்காக உரையாற்றினார். அப்போது அவர்,” ரேடியோ மூலம் உங்கள் அனைவரிடமும் குறிப்பாக கிராமப் பகுதிகளில் உள்ள ஏழை மக்களிடம் தொடர்பு கொண்டு பேச முடிந்ததற்கு முதலில் எனது மகிழ்ச்சியைத் தெரிவித்து கொள்கிறேன். இந்தியாவை மேம்படுத்துவதில் உங்கள் அனைவருக்கும் முக்கியப் பங்கும், பொறுப்பும் உள்ளது.நீங்கள் ஒவ்வொருவரும் முன்னேற்றத்தை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்தால், நமது நாடு 125 கோடி அடிகள் முன்னெடுத்து வைக்கும். இதை ஒவ்வொரு இந்தியரும் உணர்ந்தால், நமது நாட்டின் வளர்ச்சியை எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது.

நமது நாடு ஒவ்வொருவரையும் சார்ந்தே உள்ளது. ஒரு போதும் அரசை சார்ந்து இருக்காது. எனவே நாட்டின் மேம்பாட்டு பயணத்தில் ஒவ்வொரு குடிமகனும் தன்னை இணைத்துக் கொள்வது முக்கியமாகும்.இந்த சேவையில் நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும். ‘‘நாம் அனைவரும் திறமையானவர்கள். ஆனால் அந்த திறமையை நாம் உணர வேண்டும்’’ என்று சுவாமி விவேகானந்தர் கூறியுள்ளார். இந்த நேரத்தில் அவர் சொன்னது மிகவும் பொருத்தமாக உள்ளது.

நாம் நடக்கத் தொடங்காத வரை யாரும் நமக்கு வழி காட்ட மாட்டார்கள். எனவே இன்றே நாம் நம் நாட்டுக்காக ஒருங்கிணைந்து பாடுபட வேண்டும். உண்மையில் நாம் பலம் பொருந்தியவர்கள். நமது திறமைகள் ஒருங்கிணைக்கப்பட வேண்டும். அது நம்மை உயரத்துக்கு அழைத்து செல்லும்.நாம் சுயமரியாதையுடன் முன்னேற்றப்பாதையில் அடி எடுத்து வைத்தால், நாம் நிச்சயம் வெற்றி பெறலாம். நம் தேசத்தந்தை மகாத்மா காந்தி காதிப் பொருட்களை பயன்படுத்த கூறினார்.

குறைந்தபட்சம் நீங்கள் ஒரு காதிப் பொருளையாவது பயன்படுத்த வேண்டும். அது கைக்குட்டையாக இருக்கலாம் அல்லது படுக்கை விரிப்பாக கூட இருக்கலாம். நீங்கள் வாங்கும் காதி பொருட்கள் மூலம் ஏழை நெசவாளி குடும்பத்தில் ஒளி ஏற்ற முடியும் என்பதை மறந்து விடாதீர்கள்.ஏழை மக்கள் வாழ்வு முன்னேற அவசியம் காதி பொருட்களை வாங்குங்கள். அது தான் நாம் மகாத்மா காந்திக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்கும்.”என்று பேசினார்