June 16, 2021

மழை, வெள்ளம், மக்கள், அதிகாரிகள், அரசியல்வாதிகள், ஊடகங்கள்

தமிழகத்தின் பல பகுதிகளைப் புரட்டிப் போட்டிருக்கும் பருவமழை பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. ஆண்டு தோறும் பருவமழை பெய்யும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அது எப்போது பெய்யும் என்பதைக் கணித்துக் கூறும் வானிலை ஆய்வு மையம் தனது கடமையைச் சரியாகவே செய்து வருகிறது. செவ்வாய்க் கிரகத்திற்குச் செல்லும் அளவுக்கு வானியல் தொழில் நுட்பத்தில் வளர்ச்சி கண்டுள்ள நம்மிடம், பிற நாடுகளில் இருப்பதைப் போல, எந்த அளவுக்கு மழை பெய்யும் என்பதைத் துல்லியமாகக் கணக்கிடும் தொழில்நுட்பம் இல்லாதது ஆச்சரி யமளிக்கும் விஷயமாகவே இருக்கிறது. இதுபற்றி அரசோ, அறிவியல் அறிஞர்களோ கவலைகொள்ளாமல் இருப்பது மிகவும் வருந்தத்தக்கது.தொலை நோக்குப் பார்வை யாரிடமும் இல்லை என்பதை இந்த மழை நாமனைவருக்கும் தெளிவாக உணர்த்தி இருக்கிறது என்பதை யாராலும் மறுக்க இயலாது.
edit nov 25 a


ஆண்டுதோறும் பருவமழை பெய்வது அவசியம். அது அளவுக்கு அதிகமாகப் பெய்யும்போதுதான் பிரச்னைகள் ஆரம்பமாகின்றன. நீர்பிடிப்புப் பகுதிகளில் பெய்யும் மழையால் நீர்நிலைகள் நிரம்புகின்றன. உபரி நீர் ஆறுகள் வாயிலாகவும் கால்வாய்கள் வாயிலாகவும் வெளியேற்றப் படுகிறது. வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு அதி கரிக்கும்போது முதலில் பாதிக்கப்படுவது கரையோரங்களில் வசிக்கும் மக்கள். இதற்கு முக்கியக் காரணமாகச் சொல்லப்படுவது கரையோர ஆக்கிரமிப்புகள். நீர்வழிகளின் கரையோரங்கள் ஆக்கிரமிக்கப் படும்போது அவற்றின் அகலம் குறைவதால் வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவும் குறைகிறது. இதனால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, கரைகளைத் தாண்டித் தண்ணீர் ஊர்களுக்குள் புகும் நிலை ஏற்படுகிறது. நீர்நிலைகளின் கரையோர ஆக்கிரமிப்பாளர் களும், அவர்களுக்கு ஆதரவாக நின்ற அரசியல்வாதிகளும் இதற்குக் காரணம் என்பதை மறுப்பதற்கில்லை.

அதேசமயம் இத்தகைய ஆக்கிரமிப்புகளின் விளைவுகளை நன்கு உணர்ந்திருக்க வேண்டிய அதிகாரிகள் இவற்றை அனுமதித்ததையும், அவற்றுக்குப் பட்டா உள்ளிட்ட சட்டபூர்வ அங்கீகாரங்களை வழங்கியதையும், இயற்கையைச் சீண்டும் இத்தகைய விதிமீறல்களின் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதை மக்களுக்கு எடுத்துக் கூறவேண்டிய ஊடகங்களின் மெத்தனப் போக்கையும் எவ்வாறு நியாயப்படுத்த முடியும்?

சம்பாதிப்பது ஒன்றையே நோக்கமாகக் கொண்டிருக்கும் அரசியல்வாதிகளின் பொறுப்பற்ற செயல்களைச் சுட்டிக் காட்டிஅவற்றின் விளைவுகள் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த வேண்டிய ஊடகங்களின் செயல்பாடு தமிழகத்தைப் பொறுத்தவரை மிகவும் ஏமாற்றமளிப்பதாகவே உள்ளது.

பிரச்னைகள் ஏற்படும்போது அவற்றைச் சுற்றியுள்ள பல விஷயங்களைப் பல்வேறு கோணங்களில் ஆய்வு செய்ய வேண்டிய ஊடகங்கள் தங்களது கடமையைச் சரிவரச் செய்கின்றனவா என்று கேட்டால் எதிர்மறையான பதிலையே வருத்தத்துடன் தரவேண்டி இருக்கிறது. இயற்கைப் பேரிடர் காலங்களில் அவற்றின் பாதிப்புகளை எடுத்துக் கூறுவதோடு ஊடகங்கள் தமது கடமையை முடித்துக் கொள்கின்றன.

நுனிப்புல் மேயும் பாங்கிலான இத்தகைய ஆழமற்ற செய்திகளால் எவ்விதப் பயனும் ஏற்படப் போவதில்லை என்பதை ஊடகவியலாளர்கள் உணரவில்லை என்றே தோன்றுகிறது. பாதிப்புகள் ஏன் ஏற்படுகின்றன, அவற்றைத் தவிர்க்க என்ன செய்யவேண்டும், இந்தநிலை ஏற்பட யார் காரணம் என்பன போன்ற கேள்விகளுக்கு விடை காண ஊடகங்கள் முயற்சிக்க வேண்டும். ஆனால், தமிழகத்தில் ஊடகங்களின் நிலையும் செயல்பாடுகளும் வேதனைக்கு ரியவையாகவே இருக்கின்றன. எதையும் அரசியலாக்கும் வல்லமை படைத்த அரசியல்வாதிகளின் ஆதிக்கம் ஊடகங்களில் ஓங்கியிருக்கும் சூழலால் உண்மைகள் மறைக்கப்படுகின்றன அல்லது திரிக்கப்படுகின்றன.

ஊடகவியலாளர்கள் சாதி, மத, அரசியல் சார்புகளைக் கடந்து வரத் தயங்குவதன் தாக்கம் செய்திகளில் எதிரொலிக்கிறது. செய்திகளில் முழுமை, துல்லியம், நம்பகத்தன்மை போன்றவற்றின் அவசியம் உணரப்பட்டதாகத் தெரியவில்லை. செய்திகளைத் தேர்ந்தெடுப்பதில் தொடங்கி அவற்றை மக்களிடம் கொண்டு சேர்க்கும்வரை கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள் பற்றி ஊடகங்கள் அக்கறை கொள்வதாகவும் தெரியவில்லை.

ஊடகங்கள் தங்களது கடமையைச் சரிவர ஆற்றியிருந்தால் தமிழக மக்களின் பெரும்பாலான பிரச்னைகளுக்குத் தீர்வு கிட்டியிருக்கும். சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய நடவடிக்கை கள் மேற்கொள்ளப்படும்போது சாதி, மத, இன, கட்சி பேதங்களைக் கடந்து ஊடக வியலாளர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். விதிகள் மீறப்படும்போது அவை சுட்டிக்காட்டப்பட வேண்டும், அவற்றின் பின்னணியும் விளைவுகளும் மக்களுக்கு எடுத்துரைக்கப் பட வேண்டும். அரசியல்வாதிகளின் தொலைநோக்கற்ற பேச்சுகளும் செயல்பாடுகளும் துணிவுடனும் நடுநிலையுடனும் விமர்சிக்கப்பட வேண்டும். எது செய்தியாகிறது என்கிற ஆரம்பப் பாடத்திலிருந்து தமிழக ஊடகவியலாளர்கள் தங்களது பாடங்களை மீண்டும் ஒருமுறை படிக்க வேண்டும்.

ராம்