August 19, 2022

மல்லாக்கப் படுத்துக் கொண்டு தன் மார்பில் தானே உமிழ்ந்து கொள்ளும் போக்கு!

இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்ட சுதந்திர தினத்தை, நாமும் சிறப்பாக கொண்டாடுவோமே என எங்கள் குடியிருப்போர் நலச் சங்கம் சார்பில் முடிவெடுத்து, விழாவுக்குத் தலைமை வகிக்க ஓர் ஓய்வுபெற்ற அரசு உயரதிகாரியை அழைத்திருந்தோம்.

அவரும் வந்தார், கொடியேற்றினார், சுதந்திர இந்தியாவின் அருமை பெருமைகளையும், இந்த சுதந்திரத்தை அடைய நாம் பட்ட பாடுகளையும், சுதந்திரப் போராட்டத் தியாகிகளையும் புகழ்ந்து சுமார் ஒரு மணி நேரம் சிறப்பாக உரையாற்றி அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தார்.

நிகழ்ச்சி முடிந்து, கிளம்ப எத்தனித்த அவரை அணுகி, “என்ன சார், எப்படி போகிறது வாழ்க்கை? நல்லாயிருக்கீங்களா?’ எனக் கேட்டபோது, “ரொம்ப மோசம் சார், என்ன ஊரு இது, நாடு வர வர மோசமாயிட்டே போகுது, ஆறு மாசமா அமெரிக்காவுல என் பையன் வீட்ல இருந்தேன். நாடுன்னா அப்படி இருக்கணும் சார். எவ்வளவு ஒழுங்காக சட்ட திட்டங்களை மதிக்கிறாங்க தெரியுமா? அதான், அங்கயே போய் செட்டிலாய்டிலாம்ன்னு பார்க்கிறேன்’ என மல்லாக்கப் படுத்துக் கொண்டு தன் மார்பில் தானே உமிழ்ந்து கொண்டார்.
sep 3 - proud to indian
பத்து நிமிடங்களுக்கு முன் நமது நாட்டை ஆகோ ஓகோ எனப் புகழ்ந்த அதே வாய்தான் இப்போது தலைகீழாகப் பேசுகிறது.

இப்போது இது ஒரு புது நாகரிகமாக வளர்ந்து வருகிறது.

இந்தியாவில் பிறந்து, இந்த காற்றைச் சுவாசித்து, இந்த மண்ணில் விளைவதை உண்டு, இங்கேயே அனைத்தையும் கற்றுக்கொண்டு, கற்றுக் கொண்ட அறிவையும், திறமையையும் அன்னிய நாடுகளில் முதலீடாக்கி பணம் சம்பாதித்து, பின் பிறந்த நாட்டையே மட்டமாக பேசுவதும், நான் பாரீன்ல போய் செட்டிலாகப் போறேன் என பந்தா பண்ணுவதும் வழக்கமாகி விட்டது.

நாட்டில் பெரும்பாலானோர் செய்வது இதுதான், உள்ளத்தில் ஒன்றை வைத்துக் கொண்டு, உதட்டளவில் பெருமை பேசுகிறவர்கள் பெருகி வருகிறார்கள். நாடு ஒழுங்கில்லாமல் போனதுக்கு நாடு காரணமல்ல, நாம்தான் காரணம். நாம் நம் வீட்டில் எச்சில் துப்புவோமா? ஆனால், ரோட்டில் துப்புவோம். ஏனெனில் வீடு நம்முடையது, ரோடு யாருடையதோ என்ற எண்ணம். ரோடும் நம் சொத்துதான் என்ற எண்ணம் வருவதில்லை.

மேலும், இங்கே நாம் பொது இடங்களில் என்ன தவறுகளை வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். யாரும் நம்மை தட்டிக் கேட்கப் போவதில்லை. ஆனால், இதையே வெளிநாடுகளில் நாம் செய்யத் துணிவதில்லை. காரணம், அங்கே உடனடி அபராதம் அல்லது சிறை தண்டனை விதிக்கப்படும். இப்போது புரிகிறதா நாட்டின் ஒழுங்கின்மைக்கு என்ன காரணம் என்று.

பொதுவாக நம் மக்களுக்கு நாம் வேறு, நாடு வேறு என்ற எண்ணம் தான் இருக்கிறது. அதனால்தான் தன் தாய்நாட்டையே குறை கூறும் வழக்கம் உருவாகியுள்ளது. ஆனால், யார் என்ன என்றே தெரியாத ஏதோ ஒரு நாட்டை புகழ்ந்து தள்ளுகிறோம்.

இதற்கு காரணம் சில நூற்றாண்டுகளாக நாம் அன்னியரின் பிடியில் சிக்கிச் சீர்குலைந்ததே ஆகும். எந்தவொரு பிரச்னை என்றாலும், பொது சொத்துகளைச் சூறையாடி மக்கள் பழகி விட்டனர்.

நாட்டிலுள்ள பொது சொத்துகள் தன்னுடையது என்ற எண்ணம் ஏற்படாததே இதற்கு காரணம் ஆகும்.

இதுகுறித்து ஆய்வு செய்த ஓர் அறிவியலார் தெரிவித்த கருத்து என்னவென்றால், மக்கள் சில நூற்றாண்டுகளாக அன்னிய நாட்டவரின் பிடியில் சிக்கி, தங்களை விடுவிக்கப் போராடியபோது, அவர்கள் உருவாக்கிய பஸ், ரயில், காவல் நிலையம், தபால் நிலையம் போன்றவற்றை தீக்கிரையாக்கினர். ஏனெனில், அது நம்முடையது அல்ல, வேற்று நாட்டவர் உருவாக்கியது என்ற எண்ணம். நாட்டின் சொத்து தன் சொத்து அல்ல என்ற ஒரு வேற்றுமை மனப்பான்மை நமது ஜீன்களில் கலந்து விட்டதால், இன்றளவும் ஏதேனும் பிரச்னை என்றால் உடனே பொது சொத்துகளைத் தான் சேதப்படுத்துகின்றனர்.

இத்தகைய மனநிலையைப் போக்க போதுமான விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும். ஒவ்வொரு தனி மனிதனும் இணைந்த கூட்டமைப்புதான் நாடு என்பதையும், நாட்டிலுள்ள ஒவ்வொரு பொருளும் நாட்டு மக்களின் சொத்து என்பதை உணரும்படி விளக்க வேண்டும்.

தீபாவளி, பொங்கல் போல சுதந்திர தினம், குடியரசு தினம் போன்றவை ஒரு திருவிழா அல்ல. இவை நம்முள் தேசப் பற்றையும், நாம் இன்று இந் நிலையில் இருப்பதற்கு காரணமானவர்களையும் நினைத்துப் பார்த்து, அவர்களின் தியாகங்களைப் போற்றி, அவர்கள் உருவாக்க நினைத்த, அனைத்துத் துறையிலும் வளர்ச்சியடைந்த ஓர் இந்தியாவை உருவாக்கப் பாடுபட வேண்டும் என்ற எண்ணத்தை நமது உள்ளத்தில் ஆழமாக வேரூன்றச் செய்வதற்குத்தான் இந்த தேசியத் திருவிழாக்களைக் கொண்டாடுகிறோம் என்பதை உணர வேண்டும்.

தன்னுடைய தனிப்பட்ட வளர்ச்சியை மட்டும் பெரிதெனக் கொள்ளாமல், நாட்டின் வளர்ச்சிக்காக ஒவ்வொரு இந்தியனும் உளப்பூர்வமாக உறுதி எடுத்துக் கொண்டு நாட்டின் முன்னேற்றத்துக்காகப் பாடுபட வேண்டும்.மரம் வளரும்போது தான் கிளைகளும், இலைகளும் வளரும் என்பதைப் போல, நாடு உயர்ந்தால்தான், நாட்டின் குடிமக்களும் உயர இயலும் என்பதை நாம் உணர வேண்டும்.

இராம. பரணீதரன்