September 18, 2021

மலேசிய விமானத்தை தேடும் பணியில் ஆளில்லா நீர்மூழ்கி கப்பல் + ரோபோக்கள்!

காணாமல் போன மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தை தேடும் பணியில் சர்வதேச நாடுகள் ஈடுபட்டுள்ளது. தற்போது எம்.எச்.370-யின் கருப்புப் பெட்டியைக் கண்டுபிடிக்க ஆளில்லா நீர்மூழ்கிக் கப்பல்களையும் ரோபோக்களையும் பயன்படுத்தி தேட திட்டமிடப்பட்டுள்ளதாக இந்த தேடுதலில் ஈடுபட்டுள்ள பன்னாட்டு குழு அறிவித்துள்ளது.
malaysia miss air
239 பயணிகளுடன் மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் கடந்த மார்ச் 8ஆம் தேதி கோலாலம்பூரில் இருந்து புறப்பட்டது. பெய்ஜிங்கை சென்றடைவதற்கு முன்னரே விமானம் மாயமானது.பெர்த் பகுதியில் இருந்து 1,670 கிலோமீட்டர் தொலைவில் விமானத்தின் பாகங்கள் இருக்கும் என நம்புவதாக தேடுதல் பணியில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.தேடுதல் கப்பல்களுக்கு கிடைக்கப்பெற்ற சிக்னல்களை கொண்டு, இந்த தகவலை உறுதி செய்துள்ளதாக தேடுதல் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்த விமானம் இந்தியப் பெருங்கடலின் தெற்கு பகுதியில் விழுந்து நொறுங்கி விழுந்திருக்கலாம் என கருதப்படுகிறது.அதனடிப்படையில் ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் இருந்து 2 ஆயிரத்து 200 கிலோமீட்டர் வடமேற்கு பகுதியில், 11 ராணுவ விமானங்கள் மற்றும் ஒரு சிவில் விமானம் இணைந்து விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளன. இதற்கிடையே விமானத்தின் கறுப்பு பெட்டியின் சமிக்ஞைகள் கடந்த 8ம் தேதிக்கு பிறகு கேட்காததால், அதன் பேட்டரி செயலிழந்திருக்கக்கூடும் என கருதப்படுகிறது. அதனால் தேடும் பகுதியின் சுற்றளவு நேற்று குறைக்கப்பட்டது.

இதற்கிடையே மலேசிய விமானத்தை தீவிரவாதிகள் கடத்தியதாகவும், விமானம் தற்போது ஆஃப்கானிஸ்தானில், பாகிஸ்தான் எல்லை அருகே உள்ளதாகவும் ரஷ்ய உளவுத்துறையை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகி உள்ளன. அமெரிக்கா அல்லது சீனாவை மிரட்டும் நோக்கில் தீவிரவாதிகள் இதை செய்திருக்கலாம் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. இந்த விமானம் ஆஃப்கானிஸ்தான்–பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் தாழ்வாக பறந்ததாகவும், அது கடத்தப் பட்டதாகவும் ஆஃப்கன் செய்தி நிறுவனம் நேற்று செய்தி வெளியிட்டுள்ளது.

விமானத்தில் பயணம் செய்த பயணிகள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் உயிருடன் உள்ளதாக ரஷ்ய செய்தித்தாளான ‘மாஸ்கோ ஸ்கை’ தெரிவித்துள்ளது. தற்போது உடைந்த இறக்கையுடன் ஆஃப்கானிஸ்தான் மலையோர பகுதியில் விமானம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அந்நிறுவனம், பயணிகள் அனைவரும் உணவு ஏதுமின்றி தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.

தற்போது விமானத்தைத் தேடும் முயற்சியில் ஆளில்லா நீர்மூழ்கி பயன்படுத்தப்பட இருக்கிறது என்று ஆஸ்திரேலிய கடற்படையின் தலைமை தளபதி ஆங்கஸ் ஹூஸ்டன் கூறியுள்ளார். கடந்த 6 நாட்களாக கடலுக்கு அடியிலிருந்து பதிவாகி வந்த சிக்னல்கள் நின்றுவிட்டது.தற்போது கடலுக்கு அடியில் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டிய நேரம் என்று நாங்கள் கருதுகிறோம். 38வது நாளான இன்று விமானத்தை தேடும் முயற்சியில் கடலுக்கு அடியில் கருப்புப் பெட்டியை தேடும் பணியில் ஆளில்லா நீர்மூழ்கிக் கப்பல் ஈடுபடுத்தப்பட உள்ளது.

கடலின் அடியில் தரைப்பரப்பில் தேடும் முயற்சியில், புளூபின்-21 என்ற ஆளில்லா நீர்மூழ்கி பயன்படுத்தப்படும். அதனுடன், சைட் ஸ்கேன் சோனார் கருவி இணைக்கப்படும். இந்த கருவி ஒலி வடிவில் வெளியாகும் சப்தங்களை கொண்டு அதன் படத்தினை உருவாக்கி வெளியிடும் தொழில்நுட்பம் கொண்டது. ஆளில்லா நீர்மூழ்கியுடன் கடலின் தரைப் பரப்பிற்கு இந்த கருவி சென்றடைய 16 மணி நேரம் ஆகும். அடுத்த 2 மணி நேரங்களில் இவை தனது பணிகளை மேற்கொள்ளும் என்று ஹூஸ்டன் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியப் பெருங்கடலில் விழுந்ததாக கருதப்படும் மலேசிய விமானத்தின் பாகங்களை ரோபோக்கள் மூலம் தேட திட்டமிடப்பட்டுள்ளது. தேடுதல் பரப்பளவு குறைக்கப்படும் பட்சத்தில் இந்த ரோபோ நீருக்கு அடியில் சென்று தேடுதலை நடத்தும் குழுவினர் தெரிவித்துள்ளனர்.