September 17, 2021

மறுபடியும் முளைக்கும் மரபணு மாற்றம்!

பன்னாட்டு விதை நிறுவனங்களான மான்செண்டோ, பேயர்ஸ், பாஸ்ஃப் ஆகியோரின் இந்திய ஏஜெண்டுகளான அத்வந்தா, மகைக்கோ, ஜே.கே.சீட்ஸ் ஆகியவை வனத்துறை மற்றும் சுற்றச்சூழல் அமைச்சர் வீரப்ப மொய்லியைச் சந்தித்து மரபணு மாற்ற விதை சோதனைகளைப் புதுப்பிக்கச் செய்யும் முயற்சியில் வெற்றி பெற்றுவிட்டதாகத் தகவல்கள் வந்துள்ளன.மரபணு மாற்ற விதைப் பரிசோதனை வயல்களை அமைக்கக் கூடாது என்று குரல் கொடுத்த பிகார் மாநில முதல்வர் நிதிஷ்குமாரைத் தொடர்ந்து கேரள விவசாய அமைச்சர் கே.பி. மோகனன், ம.பி. விவசாய அமைச்சர் குஷ்மாரியா, இமாசலப் பிரதேச அமைச்சர் தூமத் ஆகியோரின் எதிர்ப்புக்குத் தலை வணங்கி, மைய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மரபணு மாற்றப் பொறியியல் பரிசீலனைக் குழுவின் செயல்பாட்டை முன்னாள் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் தாற்காலிகமாக நிறுத்திவைத்தார்.
edit - food genetic
அதன் பின்னர் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சரான ஜெயந்தி நடராஜன் மரபணு மாற்றப் பொறியியல் பரிசீலனைக்குழு கூட்டத்திற்கே அனுமதி தரவில்லை. இவ்வாறு முடங்கியிருந்த அக்குழுவுக்கு இப்போது வீரப்பமொய்லி திடீரென்று புத்துயிர் ஊட்டியதன் மர்மம் என்னவோ? தேர்தலுக்காக ஏதேனும் அவசர பணத் தேவையா? இப்போது மரபணு மாற்றப் பரிசோதனை வயல்களுக்குப் புதிதாக ஆம் ஆத்மி கேஜரிவாலும், தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவும் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.

“மரபணு மாற்ற விதைகளுக்கு வழங்கப்பட்டிருந்த சுற்றுச்சூழல் தடையை மொய்லி நீக்கிய பின்னணிக்கு விசாரணைக் கமிஷன் நியமிக்க வேண்டும். மரபணு மாற்றப் பரிசோதனை வயல்களினால் தோன்றும் ஆபத்துகளை மொய்லி உணரவில்லையா? எந்த நோக்கத்தில் இந்த அனுமதி வழங்கப்பட்டது’ என்று ஆம் ஆத்மி கட்சித் தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜெயலலிதா, தமிழ்நாட்டுக்குள் மரபணு மாற்ற விதைச் சோதனை வயல்களை அனுமதிக்கமாட்டோம்’ என்று கூறியதுடன், மத்தியில் அரசாளும் கட்சியுடன் அங்கம் வகிக்கும் அளவில் எங்களுக்கு வாக்களித்தால் இந்தியாவுக்குள் மரபணு மாற்ற விதை சோதனைக் கூடங்களுக்கே அனுமதி அளிக்க மாட்டோம் என்றும் கூறியுள்ளார். சேது சமுத்திர திட்டத்திற்கு வெளிப்படையாகவே ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்ததின் மூலம் சுற்றுச்சூழல், வனத்துறை, மீன்வளம் போன்ற விஷயங்களில் அவருக்குள்ள பொறுப்புணர்வைப் புரிந்து கொள்ளலாம்.

2011இல் மரபணு மாற்ற சோதனை வயல்களுக்கு எதிராக பல மாநில அரசுகள் போர்க்கொடி உயர்த்திய காரணத்தினால் அப்போது சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சராயிருந்த ஜெய்ராம் ரமேஷ், “விவசாயம் மாநில அரசுக்குட்பட்ட விஷயம் என்பதால் மாநில அரசின் ஒப்புதல்’ என்ற புதிய விதிமுறையை ஏற்படுத்தி நிலைமையை சமாளித்தார்.

2012இல் ஜெயந்தி நடராஜன் ஒருபடி மேலே சென்று மரபணு மாற்ற விதை ஆராய்ச்சிக்கே தடை விதித்துவிட்டார். ஒரு வழியாக முடிந்துவிட்ட கதை மீண்டும் தொடர்வது ஏன்?

பன்னாட்டு விதை நிறுவனங்களின் கைப்பாவையாகத் திகழும் பயோ தொழில்நுட்பம் மற்றும் இந்திய விவசாய விஞ்ஞானிகளின் கூட்டமைப்பின் தூண்டுதலால் இந்திய வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனத் தலைவரின் போதனையில் மதி மழுங்கிய வீரப்பமொய்லி ஜனவரி மாதமே சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சரகம் மரபணு மாற்ற ஆராய்ச்சிகளை ஆதரிக்கும் என்று ஊடகங்களுக்கு அறிவித்துவிட்டார். தவிரவும், பன்னாட்டு விதை நிறுவனங்கள், “ஆபத்து விளைவிக்கும் நுண்ணுயிரிகளின் உற்பத்தி வைப்பு தொடர்பான ஏற்றுமதி – இறக்குமதி விதிகளுக்கு’ மாநில அரசுகளின் தடைகள் கட்டுப்படாது எனவும் அச்சுறுத்துகின்றன.மரபணு மாற்ற விதை உயிர்மங்களும் இதில் அடங்கும். இரண்டாவதாக மகாராஷ்டிரா, குஜராத், பஞ்சாப், ஹரியாணா போன்ற மாநிலங்கள் மரபணு மாற்ற விதைகளின் சோதனை வயல்களுக்கு எவ்விதமான எதிர்ப்பையும் காட்டவில்லை.

மேற்படி மாநிலங்களில் இயங்கும் விதை நிறுவனங்கள் நெல், மக்காச் சோளம், பருத்தி, காலிஃப்ளவர், வெண்டைக்காய், கோதுமை போன்ற விதைகளில் உப்பைத்தாங்கும் சக்தி, உற்பத்தித் திறன், வறட்சியைத் தாங்கும் சக்தி ஆகிய ஆய்வுகள் தொடர்பாக மரபணு மாற்ற ஆய்வுகளுக்கு அனுமதி வழங்க நூற்றுக்கணக்கான விண்ணப்பங்கள் குவிந்துள்ளன.

மாநில அரசுகளின் தடைகள் காரணமாக பொதுத் துறையிலும் விதை ஆய்வுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. எனினும், மொய்லியின் ஆதரவு சுமார் 10,000 கோடி மதிப்புள்ள இந்திய விதை நிறுவன முதலீடுகளுக்கு ஆறுதல் வழங்கியுள்ளன. இது தொடர்பான விஷயத்தில் “மரபணு விதை ஆய்வால் ஆபத்து இல்லை என்று விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு செல்வதுடன் அரசியல் சமரசம் தேவை’ என்று டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் கூறியுள்ளார்.

டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதனின் கருத்தில் தெளிவு இருப்பதாகத் தெரியவில்லை. அதில் மரபணு விதை ஆய்வுகளின் வரம்பு பற்றிய விஷயங்கள் எடுத்துரைக்கப்படவில்லை.

மரபணு விதை ஆய்வில் அடிப்படையான விஷயம், விதையில் உள்ள பாரம்பரிய உயிர்மங்களை மாற்றியமைப்பதின் மூலம் புதிய விதை வடிவம் பெறுகிறது. பசுமைப் புரட்சியின் தந்தை என்று கூறப்படும் விஞ்ஞானி நார்மன் பார்லாக் கண்டுபிடித்த குன்னரக மெக்சிகன் கோதுமையில் நார்ச்சத்து மாவுச்சத்தாக மாறிய அதிசயம் உண்டு. அதாவது, வைக்கோல் குறைவாகவும் மணி அதிகமாகவும் பெறப்பட்டது. இதே ஆய்வு நெல், கம்பு ஆகியவற்றிலும் மேற்கொள்ளப்பட்டது. இதுவே மரபணு மாற்றத்தின் அடிப்படை.

இயற்கையாகவே மரபணு மாற்றம் நிகழ்வதை மரபியல் விஞ்ஞானத்தின் தந்தையான வாவிலோவ் எடுத்துக் காட்டி மண்டல் விதியைத் தகர்த்தெறிந்தார். “உயிர்மங்களில் பாரம்பரிய குணம் செயலாற்றுவதில் ஒழுங்கு முறை இல்லை’ என்ற உண்மையை வெளியிட்டதால் ஸ்டாலின் அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கினார். 1943இல் சைபீரியச் சிறையில் வாவிலோவ் மரணமுற்றார்.

ஆனால் அவர் கூறிய அடிப்படையான கருத்து இன்றைய பயோடெக்னாலஜியின் உயிர்த்துடிப்பாயுள்ளது. 100 ஆண்டுகளில் இயற்கையாகவே ஒரு பயிரில் ஏற்படக்கூடிய ஜீன் மாற்றத்தை பயோடெக்னாலஜி மூலம் 4, 5 ஆண்டுகளில் செய்துவிடலாம் என்று நார்மன் பார்லாக் நிரூபித்துள்ளார்.

மரபணு விதை ஆராய்ச்சியில் உள்ள வரம்பு – நாம் பயன்படுத்தும் உயிரிகளில் நச்சைப் பயன்படுத்தக்கூடாது என்பதுவே. நஞ்சை நஞ்சால் கொல்லும் பி.ட்டி. போன்ற நோய்க்குறி ஆய்வுகளை நல்ல பண்புள்ள விஞ்ஞானிகள் எதிர்க்கின்றனர்.

புதிய விதைக் கண்டுபிடிப்புகளில் நஞ்சைப் பயன்படுத்தும் மரபணு மாற்ற விதைச் சோதனை வயல்களில் போதிய பாதுகாப்பு இல்லாவிட்டால் பாரம்பரிய விதைகளைப் பயன்படுத்தும் அடுத்த தோட்டத்தில் அப்பாரம்பரிய விதை மலடாகும்.

காற்று மூலம் விஷவிதையின் மகரந்தத்தூள் பரவும் ஆபத்து நிகழ முடியாத பாதுகாப்புகளை பன்னாட்டு விதை நிறுவனங்கள் மேற்கொள்வதில்லை. இரண்டாவதாக, நஞ்சைப் பயன்படுத்தினால் ஒரு குறிப்பிட்ட நோயை மட்டுமே கட்டுப்படுத்தலாம். ஒரு பயிருக்கு பல பூச்சிகளாலும் பூசணங்களாலும் ஆபத்து உண்டு.

இந்தியாவில் இப்படிப்பட்ட நச்சு விதைகளை அறிமுகம் செய்யாமலேயே உணவு உற்பத்தியில் சாதனை உண்டு. மரபணு மாற்றம் இந்தியப் பாரம்பரிய விதைகளை மலடாக்காத அளவில், நஞ்சைப் பயன்படுத்தாமல் நிகழ்த்தக்கூடிய ஆய்வுகள் உற்ற பயன் தரலாம். பிரான்ஸ் நாட்டில் நஞ்சைப் பயன்படுத்தும் மரபணு ஆராய்ச்சி தடை செய்யப்பட்டுள்ளதாகவும், மரபணு மாற்ற விதை மூலம் தயாராகும் உணவுக்கும் தடை என்று செய்திகள் வரும்போது, இந்தியாவுக்கு இது தேவைதானா என்ற கேள்வி கேட்கும் நேரம் வந்துவிட்டது.எல்லை மீறிய மரபணு மாற்ற ஆய்வின் மறுதோற்றம் வழங்கும் நன்மைகளை விடத் தீமைகளே அதிகம் இருக்கும் என்று தோன்றுகிறது.

ஆர்.எஸ். நாராயணன்