September 25, 2021

மரபணு மாற்ற பயிர்களால் தீங்கு விளையுமா?ஆதாரம் இல்லையே! அரசு தகவல்

மரபணு மாற்றுப் பயிர் பொருட்கள் சிறுநீரகக் கோளாறு, தோல் வியாதிகள், ஒவ்வாமை, இதயநோய், புற்றுநோய் என்று 55 வகையான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன என்பதால் இத்தாலி, சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியா, பிரான்சு, ஜெர்மனி, அயர்லாந்து, ரொமேனியா, போலந்து, ஹங்கேரி போன்ற நாடுகளில் மரபணு மாற்றுப் பயிர்களுக்கு அவை தடை விதித்து விட்டதாக செய்திகள் வெளியான நிலையில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களால் மண், மனித ஆரோக்கியம் மற்றும் சுற்று சூழல் ஆகியவற்றுக்கு தீங்கு ஏற்படும் என்பதை நிரூபிப்பதற்கான அறிவியல்பூர்வ ஆதாரம் எதுவும் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது..
food dec 4
மரபணு மாற்றம் செய்ய பட்ட பயிர்கள் நல்லதா? கெட்டதா?? என்ற விவாதம் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. அமெரிக்கா போன்ற நாடுகளில் அனைத்து பயிர்களிலும் மரபணு மாற்றம் செய்ய பட்ட பயிர்கள் பயிரிட படுகின்றன. ஆனால் ஐரோப்பிய யூனியனில் உள்ள முக்கிய நாடுகளான பிரான்சு மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகள் மனிதன் உணவுக்கு பயன் படுத்தும் பயிர்களில் மரபணு மாற்றம் செய்ய பட்ட பயிர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதற்கு மனிதனின் உடல் நலத்துக்கு தீங்கு ஏறப்டுத்த வழிவகை உள்ளது என்று தனது எதிர்ப்பை தெரிவிக்கின்றனர்.இதனிடையே கடந்த ஆகஸ்டு மாதம் மரபணு மாற்றம் செய்யப்பட்ட அரிசி, கத்தரிக்காய், கடுகு, கொண்டைக்கடலை உள்ளிட்ட 15 உணவுப் பயிர்களை இந்தியாவில் பயிரிடுவதற்கு களசோதனைக்கு அனுமதி அளிக்கப் போவதாக மத்திய அரசு அறிவித்தது.

இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.மேலும் பாரதிய ஜனதாவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ்.-ன் சார்பு அமைப்புகள் கடுமையாக கூட எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.இதனிடையே இந்த விவகாரத்தில் மத்திய அரசு அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்காது என்று மத்திய அமைச்சர் தெரிவித்திருந்தார்.அதே சமயம் மரபணு மாற்ற பயிர்கள் சோதனை முறையில் பயிர் செய்யப்படுவதற்கு அரசாலோ அல்லது உச்ச நீதிமன்றத்தாலோ தடை விதிக்கப்படவில்லை என்றும் கடந்த வாரம் மக்களவையில் ஜாவடேகர் தெரிவித்திருந்தார்.

இந்த முரண்பாடான முடிவு குறித்து மாநிலங்களவையில் மத்திய சுற்று சூழல் துறை மந்திரி பிரகாஷ் ஜாவடேகர் இன்று பதிலளித்து பேசினார்.இது குறித்து அவர் கூறுகையில், மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்கள் குறிப்பாக சோளம், கனோலா, சோயாபீன் மற்றும் பருத்தி ஆகியவை உலகில் உள்ள பல நாடுகளில் பயிர் செய்யப்பட்டு மனிதர்கள் மற்றும் விலங்குகளால் உணவு மற்றும் பதப்படுத்தப்பட்ட பொருட்களாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்கள் மண்ணிற்கோ, மனித சுகாதாரத்திற்கோ மற்றும் சுற்று சூழலுக்கோ தீங்கு விளைவிக்கும் என்பதை நிரூபிக்க அறிவியல்பூர்வ ஆதாரம் எதுவும் இல்லை என்று அவர் அவையில் தெரிவித்துள்ளார்.

மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்கள் பூச்சிகளை எதிர்த்து வளரும் தன்மை மற்றும் களைகொல்லிகளை தாங்கி வளரும் தன்மை, பூஞ்சை எதிர்ப்பு, நோய் எதிர்ப்பு, அழுத்தத்தை தாங்கி வளரும் தன்மை, உப்பை தாங்கி வளரும் தன்மை, வறட்சியை தாங்குதல், அதிக விளைச்சல் மற்றும் ஊட்டச்சத்து ஆகிய தன்மைகளை கொண்டு இருப்பதால் உணவு பாதுகாப்பிற்கு உதவிடும் வகையில் இருக்கும் என்று ஜாவடேகர் கூறியுள்ளார்.

வர்த்தக அடிப்படையில் ஒப்புதல் அளிப்பதற்கு முன் எந்தவொரு மரபணு மாற்ற பயிரும் பாதுகாப்பு, ஆதாயம் தருதல் மற்றும் மரபணு மாற்ற விதைகளால் மண்ணின் வளம் அதிகரித்தல், அதிக சுய மதிப்பீடு மற்றும் ஒழுங்குமுறை ஆகியவற்றோடு தொடர்புடைய பல்வேறு விசயங்களுக்கு ஒப்புதல் வழங்கும் முறை கடைபிடிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.