March 26, 2023

மனுஷி சில்லர் உலக அழகி பட்டம் வென்றார் !

அரியானா மாநிலத்தை சேர்ந்த மனுஷி சில்லர் (வயது 20), இந்த ஆண்டு ‘மிஸ் இந்தியா’ அழகியாக தேர்வு செய்யப்பட்டார். இவரது பெற்றோர் இருவரும் டாக்டர்கள். டெல்லியில் உள்ள செயின்ட் தாமஸ் பள்ளியில் பயின்ற இவர், பின்னர் சோன்பேட் நகரில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரியில் படித்து டாக்டர் பட்டம் பெற்றார்.

இந்திய அழகி பட்டம் வென்றதை தொடர்ந்து, உலக அழகி போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்றார். இந்நிலையில், சீனாவின் சானியா நகரில் நடந்த, 2017ம் ஆண்டிற்கான உலக அழகிப்போட்டியில் மனுஷி சில்லர் உலக அழகி பட்டத்தை வென்றார். இதில் உலகம் முழுவதும் இருந்து 118 பேர் பங்கேற்றனர். மெக்ஸிகோ அழகி இரண்டாவது இடத்தையும், இங்கிலாந்து அழகி மூன்றாவது இடத்தையும் பிடித்னர்.

இதனிடையே  இந்தப் போட்டியின் ஐந்தாவது சுற்றான கேள்வி பதில் சுற்றில் மனுஷியிடம், “எந்த ஒன்றை மிக மதிப்புமிக்கதாக கருதுவீர்கள் ஏன்?” என்று கேள்வி கேட்டனர். அதற்குப் பதிலளித்த மனுஷி, “அம்மாவைத் தான் மதிப்புமிக்க ஒன்றாக கருதுகிறேன். அவர்தான் எந்தவித பாரபட்சமுமின்றி எல்லாருக்கும் அன்பை தருகிறார்கள். என் வாழ்வின் மிகப்பெரிய உத்வேகம் அம்மாதான். அதனால் அவரை மதிப்புமிக்க ஒன்றாகக் கருதுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

அவர் தெரிவித்த பதிலின் அடிப்படையில் மனுஷி உலக அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இரண்டாவது இடத்தை மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த ஒருவரும், மூன்றாவது இடத்தை இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஒருவரும் அழகிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். உலகி அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு முன்னாள் அழகி கிரீடம் அணிவிப்பார் . அந்த வகையில் 2016ஆம் ஆண்டு உலகி அழகி பட்டம் வென்ற ஸ்டெபானியே டெல் வல்லே மனுஷிக்குக் கிரீடம் அணிவித்தார்.

பின்னர் செய்தியாளர் சந்திப்பில், ‘சுஸ்மிதா சென், ஐஸ்வர்யா ராய், பிரியங்கா சோப்ரா போன்று நீங்களும் பாலிவுட் சினிமாவுலகில் வலம் வருவீர்களா?’ என்று கேட்கப்பட்டபோது, “நான் இந்தக் கருத்துக்கு உடன்படவில்லை. பாலிவுட் மட்டுமல்ல என் இலக்கு. நான் அடுத்த கட்டத்துக்குச் செல்ல விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.