September 20, 2021

மத்திய, மாநில அரசு அதிகாரிகளுக்கு மரண பயத்கைக் காட்டிய மெரினா இளைஞர்கள்!

சென்னை மெரினா கடற்கரையில் 5வது நாளாக கொட்டும் பனியையும் பொருட்படுத்தாமல் இளைஞர்கள், பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடக்கும் போராட்டத்தில் மாநிலம் முழுவதும் லட்சக்கணக்கான மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர். இதனால், சென்னை உட்பட முக்கிய நகரங்கள் அனைத்திலும் சுமார் 25 லட்சம் பேர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மெரினாவில் நேற்று ஒரே நாளில் 10 லட்சம் பேர் திரண்டதால் கடற்கரை முழுவதும் மனித தலைகளாக காட்சியளித்தது. 4வது நாளாக நேற்று மெரினாவில் அதிகாலையில் இருந்தே இளைஞர்கள், மாணவர்கள் தங்கள் குடும்பத்துடன் குவிய தொடங்கினர். இவர்கள் பெரும் திரளாக கூடி மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த போராட்டத்தில், அதிக அளவில் பெண்களும், குழந்தைகளும் கலந்து கொண்டனர்.

act jasn 21

இதேபோல் மதுரை தமுக்கம் மைதானத்தில் 5-வது நாளாக ஜல்லிக்கட்டு போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மாணவர்கள், தல்லாகுளம் துவங்கி கோரிப்பாளையம் வரை சாலையின் நடுவில் ஆங்காங்கே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கோவை வ.உ.சி மைதானத்தில் 5வது நாளாக மாணவர்கள், இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் ஈரோடு,சேலம், தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட இடங்களிலும் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ஜல்லிக்கட்டு அவசரச் சட்ட முன்வடிவைத் தயாரிக்கும் நடவடிக்கை, அதற்கு ஒரே நாளில் ஜனாதிபதியின் ஒப்புதலைப் பெறுவதற்காக அனுப்பி வைத்த பணி ஆகியவற்றுக்குப் பின்புலமாக தமிழகத்தைச் சேர்ந்த ஐந்து உயரதிகாரிகள் தில்லியில் செயல்பட்டனர் என்ற விறு  விறு தகவல் கிடைத்துஇள்ளது.

அதாவது விலங்குகள் கொடுமைப்படுத்துதல் தடுப்புச் சட்டத்தில் மாநில அரசுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி ஜல்லிக்கட்டில் காளை பங்கேற்க ஏதுவாக அவசரச் சட்டத்தைத் தயாரிக்க தமிழக அரசு வியாழக்கிழமை (ஜனவரி 19) நள்ளிரவு முடிவு செய்தது. இதையொட்டி, தில்லியில் தமிழகக் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் பா.பாலகிருஷ்ணா ரெட்டி, தமிழக சட்டத் துறைச் செயலர் (பொறுப்பு) எஸ்.எஸ்.பூவலிங்கம், சட்ட வல்லுநர்கள், தில்லியில் உள்ள தமிழக அரசு உயரதிகாரிகள் ஆகியோர் வியாழக்கிழமை (ஜனவரி 19) பிற்பகல் தொடங்கி வெள்ளிக்கிழமை அதிகாலை வரையிலும் ஜல்லிக்கட்டு சட்ட முன்வடிவைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர். தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் இந்த ஆலோசனையில் ஈடுபட்ட பிறகு வெள்ளிக்கிழமை காலையில் சென்னை புறப்பட்டார்.

இதைத் தொடர்ந்து, மத்திய உள்துறையின் பரிசீலனைக்கு, ஜல்லிக்கட்டு அவசரச் சட்ட முன்வடிவை தமிழக கால்நடைப் பராமரிப்புத் துறைச் செயலர் பொறுப்பைக் கூடுதலாக கவனிக்கும் ஐஏஎஸ் அதிகாரி ககன்தீப் சிங் பேடி, முதல்வரின் செயலர்களில் ஒருவரும் ஐஏஎஸ் அதிகாரியுமான விஜயகுமார், எஸ்.எஸ். பூவலிங்கம், தமிழகப் பிரிவு ஐஏஎஸ் உயரதிகாரி முருகானந்தம், தமிழ்நாடு அரசு இல்லத் துணை உள்ளுறை ஆணையர் சின்னதுரை ஆகியோர் கொண்டு சென்றனர்.

இதில் முருகானந்தம், மத்திய அரசுப் பணியில் 2009-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி விட்டு கடந்த ஆண்டு அக்டோபரில் மாநில அரசுப் பணிக்குத் திரும்பியவர். தில்லியில் உள்ள தமிழ்நாடு இல்ல முதன்மை உறைவிட உள்ளுறை ஆணையராக முருகானந்தத்தை தமிழக அரசு கடந்த வாரம் நியமித்தது. அந்தப் பொறுப்பை முறைப்படி இன்னும் ஏற்காத நிலையில், தாமாக முன்வந்து ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பான நிர்வாகப் பணியில் தன்னை முருகானந்தம் இணைத்துக் கொண்டார்.
“ஜல்லிக்கட்டு அவசரச் சட்ட விவகாரம்’ மத்திய உள்துறை, கால்நடைப் பராமரிப்பு, கலாசாரம், வனம், சட்டம் ஆகிய துறைகள் தொடர்புடையது. இந்தத் துறைகளின் ஒப்புதலைப் பெறும் நடவடிக்கையில் மேற்கண்ட ஐந்து தமிழக அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்பட்டனர்.

குறிப்பாக, மத்திய கலாசாரத் துறை அமைச்சர் மகேஷ் சர்மா, அவரது தனிச் செயலரும் ஐஏஎஸ் அதிகாரியுமான ரவிந்தர் ஆகியோர் அரசுமுறைப் பயணமாக வெளிநாட்டில் இருந்தனர். இதையடுத்து, மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனின் தனிச் செயலராகப் பணியாற்றி வரும் உத்தர பிரதேச மாநில பிரிவைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியும் தமிழருமான செந்தில் பாண்டியனை முருகானந்தம் தொடர்பு கொண்டு பேசினார். உடனடியாக தனது ஐஏஎஸ் மாநிலப் பிரிவைச் சேர்ந்த உயரதிகாரியான ரவிந்தரை செல்லிடப்பேசியில் தொடர்பு கொண்டு ஜல்லிக்கட்டு விவகாரம் குறித்து செந்தில்பாண்டியன் விளக்கினார்.

இதையடுத்து, தமிழகத்தின் ஜல்லிக்கட்டு தொடர்பான கோப்பை உடனே கவனிக்குமாறு மத்திய கலாசாரத் துறை இணைச் செயலர் பங்கஜ் நாக் என்ற அதிகாரிக்கு கலாசாரத் துறை அமைச்சர் அலுவலகத்தில் இருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்பேரில், தஞ்சையில் உள்ள தென் மண்டலக் கலாசார மைய இயக்குநர் பரிசீலனைக்கு சட்ட முன்வடிவில் இடம் பெற்றுள்ள கலாசாரம், பாரம்பரியம் தொடர்பான குறிப்புகள் பிற்பகலில் அனுப்பி வைக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது. இதற்கு மத்திய சட்டம், உள்துறை அமைச்சகங்கள் பின்னர் முறைப்படி ஒப்புதல் அளித்தன என்ற விபரம் கிடைத்துள்ளது