October 21, 2021

மத்திய அமைச்சரவை இன்று விரிவாக்கம்!

மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் கடந்த மே மாதம் பா.ஜனதா அரசு பதவி ஏற்ற பின்பு முதல் முறையாக இன்று மந்திரி சபை விரிவாக்கம் செய்யப்பட்டது.மத்திய மந்திரி சபையில் ஏற்கனவே 45 பேர் மந்திரிகளாக உள்ளனர். இதில் 23 பேர் கேபினட் மந்திரிகள், 22 பேர் ராஜாங்க மந்திரிகள். இவர்களில் 10 பேர் தனிப் பொறுப்புடன் கூடிய ராஜாங்க மந்திரிகளாக உள்ளனர். இன்றைய விரிவாக்கத்தில் மேலும் 21 பேர் புதிய மந்திரிகளாக நியமிக்கப்பட்டனர். இவர்களில் 4 பேர் கேபினட் அந்தஸ்த்துடன் கூடிய மந்திரிகள், 3 பேர் பொறுப்புடன் கூடிய இணை மந்திரிகள் மற்றும் 13 பேர் இணை மந்திரிகள் ஆவார்கள்.
minister nov 9 1
மந்திரி சபை விரிவாக்கத்தில் சிவசேனாவுக்கு மேலும் மந்திரி பதவி அளிக்க மோடி முடிவு செய்தார். ஆனால் மராட்டிய மந்திரி சபையில் தங்களுக்கும் இடம் கேட்டு சிவசேனா நெருக்கடி கொடுத்தது. இதனால் சிவசேனா மந்திரி பதவி ஏற்பாரா என்ற கேள்வி எழுந்தது. கடைசி நேரத்தில் சிவசேனா இடம் பெற சம்மதித்தது. சிவசேனாவை சேர்ந்த சுரேஷ் பிரபு, அனில் தேசாய் ஆகியோர் மந்திரி பதவி ஏற்பார்கள் என்று உத்தவ் தாக்கரே அறிவித்தார்.பின்னர் இதில் கேபினட் அமைச்சராக சிவசேனா கட்சியை சேர்ந்த சுரேஷ் பிரபு பதவியேற்றார். இந்நிலையில் சிவசேனாவிலிருந்து விலகிய சுரேஷ் பிரபு முறைப்படி பாஜகவில் இணைந்ததுத் தனிக் கதை..

21 புதிய மந்திரிகளின் பதவி ஏற்பு விழா பகல் 1.30 மணிக்கு ஜனாதிபதி மாளிகையில் தர்பார் ஹாலில் நடந்தது. புதிய மந்திரிகளுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பதவிப் பிரமாணமும் ரகசிய காப்புறுதி பிரமாணமும் செய்து வைத்தார்.மனோகர் பாரிக்கர், சுரேஷ் பிரபு, ஜெ.பி.நத்தா, பிரேந்திர சிங் ஆகியோர் இன்று கேபினட் அந்தஸ்த்துடன் கூடிய புதிய மந்திரிகளாக பதவி ஏற்றுக் கொண்டனர்.

கோவா முதல்–மந்திரியாக இருந்த மனோகர் பாரிக்கர் மத்திய மந்திரியாக பதவி ஏற்பதற்காக நேற்று அந்தப் பதவியை ராஜினாமா செய்தார். உ.பி. மாநிலத்தில் இருந்து டெல்லி மேல்–சபை எம்.பி.யாக இவர் விரைவில் தேர்ந்து எடுக்கப்படவுள்ளார். இதற்காக நாளை வேட்பு மனு தாக்கல் செய்கிறார்.

பண்டாரு தத்தாத்ரேயா, ராஜிவ் பிரதாப் ருடி மற்றும் மகேஷ் சர்மா ஆகியோர் தனிப் பொறுப்புடன் கூடிய இணை மந்திரிகளாக பதவியேற்றுக் கொண்டனர். முக்தார் அப்பாஸ் நக்வி, ராம் கிரிபால் யாதவ், ஹரிபாய் பார்த்திபாய் சவுத்ரி, சன்வர்லால் ஜாட், மோகன்பாய் கல்யான்ஜிபாய் குண்டாரியா, கிரிராஜ் சிங், ஹன்ஸ்ராஜ் ஆஹிர், ராம் சங்கர் கத்தேரியா, ஒய்.எஸ்.சவுத்ரி, ஜெயந்த சின்ஹா, ராஜ்வர்த்தன் சின் ரத்தோர், பாபுல் சுப்ரியோ, சத்வி நிரஞ்சன் ஜோதி, விஜய் சம்ப்லா ஆகியோர் இணை மந்திரிகளாக பொறுப்பேற்றுக் கொண்டனர்.

புதிய மந்திரிகளில், ஆந்திரா, மராட்டியம், பீகார், மேற்கு வங்காளம், கோவா, ராஜஸ்தான், இமாச்சலப் பிரதேசம் அரியானா ஆகிய மாநிலங்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டுள்ளது. புதிய மந்திரியாக பதவி ஏற்ற ராம் கிரிபால் யாதவ், லல்லு கட்சியில் இருந்து விலகி பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா வேட்பாளராக போட்டியிட்டு லல்லு மகள் மிசா பாரதியை தோற்கடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மோடி மந்திரி சபையில் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த நஜ்மா ஹெப்துல்லா மட்டுமே மந்திரியாக இருந்தார். தற்போது முக்தர் அப்பாஸ் நக்வியுடன் சேர்த்து முஸ்லிம்களுக்கு 2 பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டுள்ளது.இதேபோல் மந்திரியாக நியமிக்கப்பட்ட பாபுல் சுப்ரியோ மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த பின்னணி பாடகர் ஆவார். பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா வேட்பாளராக அசன்சால் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

மத்திய மந்திரி சபையில் இதுவரை மேற்கு வங்காளத்துக்கு பிரதிநிதித்துவம் இல்லாமல் இருந்தது தற்போது பாபுல் சுப்ரியோ இடம் பெற்றுள்ளார்.பண்டாரு தத்தாத்ரேயா, ஒய்.எஸ்.சவுத்திரி ஆகியோர் தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்தவர்கள்.

மற்றொரு மந்திரியான ராஜ்யவர்த்தன் ரதோர் ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடும் போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெற்றவர். இவர் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து பாராளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.முன்னதாக, பிரதமர் நரேந்திரமோடியை இன்று காலை புதிய மந்திரிகள் சந்தித்தனர். அவர்களுக்கு மோடி தேநீர் விருந்து அளித்தார்.அதன்பிறகு மோடியுடன் புதிய மந்திரிகள் அனைவரும் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க ஜனாதிபதி மாளிகைக்கு புறப்பட்டுச் சென்றனர்.இந்த பதவியேற்பு விழாவில் , லோக்சபா சபாநாயகர் சுமித்ரா மகாஜன், பிரதமர் நரேந்திரமோடி, பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி, பா.ஜ.க தேசிய தலைவர் அமித்ஷா, வெங்கைய நாயுடு, சுஷ்மா சுவராஜ் உள்ளிட்டோர்கள் கலந்து கொண்டனர்.