மதுரை மீனாட்சியம்மன் திருக்கல்யாண கோலாகலம் + வரலாறு!

மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் சித்திரைத் திருவிழா மே 1-ம தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி விழாவின் சிகரம் வைத்தது போல மீனாட்சி சுந்தரேசுவரர் திருக் கல்யாணம் இன்று காலை 10.30 மணி முதல் 10.54 மணிக்குள் கோயில் மேல, வடக்காடி வீதி சந்திப்பில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது. இதற்காக திருப்பரங்குன்றத்திலிருந்து அருள்மிகு சுப்பிரமணியர், தெய்வானையுடன் வெள்ளிக்கிழமை புறப்பாடாகி வந்தார்.திருக்கல்யாணம் முடிந்ததும் பழைய திருக்கல்யாண மண்டபத்தில் சுவாமி, அம்மன் எழுந்தருளினர்.இதையடுத்து இரவில் ஆனந்தராயர் பூப்பல்லக்கில் அம்மன், சுவாமி பிரியாவிடையுடனும், அருள்மிகு சுப்பிரமணியர், பெருமாள் ஆகியோர் எழுந்தருளி மாசி வீதிகளில் வலம் வந்து அருள்பாலிப்பதுடன்
ஞாயிற்றுக்கிழமை காலையில் 6 மணிக்கு திருத்தேரோட்டம் நடைபெறும்.
madurai meenashi marrage 1
உலக பிரசித்திப் பெற்ற இந்த மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தில் கலந்து கொள்வது பெரும் பாக்கியம். இவர்களது திருமணம் எப்படி நடந்தது தெரியுமா? மீனாட்சிக்கு திருமணம் என்றதும் மதுரை மாநகரமே விழாக் கோலம் பூண்டு விட்டது.

நாட்டின் அரசிக்கு திருமணம் என்றால் சும்மாவா? மக்கள் எல்லோரும் மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருந்தனர். திருமணத்திற்கு நாள் குறித்த அன்று மணமகள் மீனாட்சியின் முகத்தில் வெட்கம் நிறையவே அப்பிக் கிடந்தது. தனது மணாளனை முதன் முதலாக சந்தித்த அனுபவம் அப்போது அவளை சிலிர்ப்பு கொள்ளச் செய்தது. எட்டு திக்கும் வென்று, இமயத்தையும் வென்றுவர சென்றபோதுதான் சிவபெருமானை முதன் முதலாக சந்தித்தாள் மீனாட்சி. சிவபெருமானின் பார்வை பதிந்த மாத்திரத்தில் அவளது மூன்று தனங்களில் ஒன்று மறைந்து போயிற்று.

அப்போதுதான், தன்னுடைய மணாளன் இவரே என்று எண்ணி, நாணினாள். ஒரு நல்ல நாளில் பூலோகம் வந்து மணந்து கொள் வதாக சிவபெருமான் உறுதியளித்ததை இப்போதும் நினைத்து மகிழ்ந்தாள். அப்போது, அவள் ஆவலோடு எதிர்பார்த்த சிவபெருமான் வந்து கொண்டிருந்தார்.
மகா விஷ்ணு, பிரம்மா மற்றும் தேவர்கள், தேவகனங்களும் உடன் வந்தனர். புலித்தோலை ஆடையாகவும், பாம்புகளை அணிகலன்களாகவும் கொண்டு காட்சிதரும் சிவபெருமான் அந்த கோலத்தில் இருந்து மாறியிருந்தார். சுந்தரேசுவரராக-மதுரை மாப்பிள்ளையாக வந்தார்.

பங்குனி உத்திர நாளில் நல்ல நேரம் வந்ததும் மீனாட்சியின் கழுத்தில் மங்கலநாண் பூட்டி தனது மனைவியாக ஏற்றுக் கொண்டார். திருமணம் முடிந்ததும் தடபுடலாக விருந்து நடக்குமேப அது மீனாட்சி கல்யாணத்திலும் நடந்தது. மலைபோல் சாதம் சமைக்கப்பட்டது.

அதில் ஒரு பகுதி மட்டுமே காலியாகி இருந்தது. இதையறிந்த மீனாட்சி, அதுபற்றி தனது மணாளன் சிவபெருமானிடம் கூறினார். உடனே சிவபெருமான் குண்டோ தரர்கள் இருவரை அங்கு வரவழைத்தார். மீத முள்ள சாதம், பலகாரங்களை சாப்பிடுமாறு அவர்களை பணித்தார்.
madurai meenashi marrage 2
அவர்கள் இருவரும் அடுத்த சில நிமிடங்களிலேயே அத்தனை உணவு வகைகளையும், பலகாரங்களையும் வேகமாக தின்று தீர்த்து விட்டனர். தாகத்தை தணிக்க பெரிய அண்டாக்களில் இருந்த தண்ணீரை மடக் மடக் என்று குடித்தனர். பெரிய அண்டாக்கள் எல்லாம் அவர்களுக்கு சிறிய டம்ளர்கள் போல் இருந்தன.

அந்த தண்ணீர் அவர்களுக்கு போதவில்லை. தாகம்… தாகம்… என்று கத்தினார். அப்போது சிவபெருமான், தன் கையை வைத்து அங்கு ஒரு நதியை உருவாக்கினார். அந்த நதி நீரை குடித்து குண்டோதரர்கள் தாகம் தணிந்தனர். சிவபெருமான் தன் கையை வைத்து உருவாக்கியதால் அந்த நதி “வைகை” ஆயிற்று.

-இதுதான் மீனாட்சி திருக்கல்யாண வரலாறு.

பட உதவி: எங்க மதுரைFB