September 23, 2021

மதுரையில் ஆர்ப்பாட்டம்– பொதுக்கூட்டம் நடத்த தடை!

சுப்ரீம் கோர்ட் தடை உத்தரவு காரணமாக ஜல்லிக்கட்டு நடத்துவதில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. இதனால் மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கிராம மக்கள் கறுப்புக்கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.மாடுபிடி வீரர்கள் மொட்டை அடித்தும் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள். இதனிடையே எப்படியாவது ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பும் கிராம மக்கள் மத்தியில் இருந்து வருகிறது.
jallikattu
அதே சமயம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் பகுதியில் ஜல்லிக்கட்டு நடை பெறாமல் தடுக்கும் வகையில் பல்வேறு இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப் பட்டு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 1000–க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு இரவு–பகலாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் மதுரை மாவட்டத்தில் நேற்று முதல் வருகிற 30–ந்தேதி வரை பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம் நடத்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக மதுரை நகர போலீஸ் கமிஷனர் சஞ்சய் மாத்தூர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,”தமிழக போலீஸ் சட்டம் 1888 செக்ஷன் 41–ன்படி மதுரையில் பொதுமக்கள் கூடுதல், ஆர்ப்பாட்டம், போராட்டம், பொதுக்கூட்டம் ஆகியவை நடத்துவதற்கு 15–ந்தேதி முதல் வருகிற 30–ந்தேதி வரை தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நாட்களில் பொது மக்களை பாதிக்கும் வகையில் பொது இடங்களில் எந்தவிதமான பொதுமக்கள் கூடும் நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு அனுமதி இல்லை. அவ்வாறு நடத்துவதற்கு விரும்புபவர்கள் 5 நாட்களுக்கு முன்னதாக சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களில் விண்ணப்பிக்க வேண்டும்.
”என்று அவர் தெரிவித்துள்ளார்.இதுபோன்ற தடை உத்தரவை மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயேந்திர பிதாரியும் பிறப்பித்துள்ளார்.