September 18, 2021

மதியம் கரையை கடக்கும் ‘ஹெலன்’ புயலால் தமிழகத்துக்கு பாதிப்பு இல்லை

வங்க கடலில் உருவான காற்றழுத்தம் ஹெலன் புயலாக மாறியது. இது இன்று மதியம் கரை கடக்கிறது. தற்போது அது ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினத்தில் இருந்து கிழக்கு மற்றும் தெற்கு பகுதியில் 240 கிலோமீட்டர் தூரத்தில் மையம் கொண்டுள்ளது. அது இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் அல்லது மாலை மசூலிப்பட்டினம் அருகே கரையை கடக்கும். அப்போது அந்த பகுதியில் மணிக்கு 110 கிலோமீட்டர் வேகத்தில் காற்று அடிக்கும். மீனவர்கள் ஆந்திரா அருகே உள்ள கடல் பகுதிக்கு மீன்பிடிக்கச்செல்லவேண்டாம் என்று எச்சரிக்கப்படுகிறார்கள். தமிழ்நாட்டைப் பொருத்தவரை இந்த புயலின் தாக்கம் எதுவும் இருக்காது. தமிழ்நாட்டில் சில இடங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
nov 22 Cyclone-Helen-.mini
வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரம் அடைந்துள்ளதை அடுத்து நேற்று முன்தினம் காலை மீண்டும் ஒரு குறைந்த காற்றழுத்தம் மத்திய மேற்கு வங்க கடலில் உருவானது. அதன் தொடர்ச்சியாக வங்க கடலில் வளி மண்டல மேல் அடுக்கில் காற்று சுழற்சி உருவாகியது. இது தென் கிழக்கு திசையில் நிலை கொண்டுள்ளதால் தென் தமிழகத்தில் பரவலாக மழை பெய்கிறது. மேலும், மத்திய வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று தீவிரம் அடைந்து புயலாக மாறியது. இந்த புயலுக்கு ஹெலன் என பெயரிடப்பட்டுள்ளது. இது ஆந்திராவை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்த புயல் மசூலிப்பட்டினத்தில் இருந்து 250 கிமீ தூரத்தில் நிலை கொண்டுள்ளது.

ஹெலன் புயல் இன்று மதியம் மசூலிப்பட்டினம் அருகே கரை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புயலால் தமிழகத்க்கு அதிக பாதிப்பு இருக்காது. இதனால் மீனவர்களுக்கு வழங்கப்பட்ட எச்சரிக்கை விலக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும், அடுத்த 24 மணி நேரத்துக்கு தென் மாவட்டங்களின் ஒரு சில பகுதி களிலும், வட மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. புயல் கரை கடக்கும்போது ஆந்திரா பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்யும். ஆந்திர மாநிலத்தில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால் அங்கு முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.