September 18, 2021

மதிப்பெண் வீக்கம், கல்வி வியாபாரம் போன்ற பிரச்சினைகளை அலசலாம்! வாங்க!!

மதிப்பெண் வீக்கத்தின் பின்னால் நடக்கும் அவலங்கள், வியாபார சூழ்ச்சிகள், போட்டி-பூசல்கள், குழந்தைகளுக்கு ஏற்படுத்தும் மனஉளைச்சல் பற்றியெல்லாம் எந்த விவாதமும் எங்கேயும் நடக்கவில்லை. பல பள்ளிகளில் காலை 6 மணிக்கு வகுப்புக்கள் துவங்கி இரவு 7 மணி வரை நடத்தப்படுகின்றன. பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புக்கள் மட்டும் நடத்துவதற்கென ‘அடைப்பு முகாம்கள்’ (concentration camp) என்றழைக்கப்படும் சிறப்புப் பள்ளிகள் பல தமிழகத்தில் இயங்குகின்றன. அங்கே நடப்பது கல்விக் கொடுமை!
edit 26
மருத்துவக் கல்லூரியில், புகழ்பெற்ற பொறியியற் கல்லூரிகளில் இடம்பிடிப்பதற்கு ஆகும் செலவைக் குறைப்பதற்காக மேற்கண்ட பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்த்து ஒரு சில லட்சங்களை செலவு செய்வதற்கு பெற்றோர் தயங்குவதில்லை.மதிப்பெண் தொழிற்சாலைகளான இப்பள்ளிகளில், பத்தாம் வகுப்புப் பாடங்களை ஒன்பதாம் வகுப்பிலேயே நடத்தத் துவங்கி, ஒன்பதாவது வகுப்புப் பாடங்களை அப்படியே விட்டுவிடுகிறார்கள்.
அதேபோல, பதினொன்றாம் வகுப்புப் பாடங்களும் பல பள்ளிகளில் நடத்தப்படுவதேயில்லை. ‘டியுஷன்’ எனும் தனிப்பயிற்சி தொழில் கொடிகட்டிப் பறக்கிறது. பெரும்பாலான குழந்தைகள் காலை இரண்டு டியுஷன் மாலை இரண்டு டியூஷன் என அலைந்து சொல்லொணா அழுத்தத்துக்கு ஆளாகிறார்கள். சரியாக சாப்பிடக்கூட நேரமிருப்பதில்லை. பல அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தனியார் பள்ளிகளில் அதிக வருமானத்தோடு வருகைதரு ஆசிரியராக பாடம் எடுக்கிறார்கள். தங்கள் பள்ளிக் குழந்தைகளை புறக்கணித்துவிட்டு, தனியாருக்கு சேவை செய்கிறார்கள்.

பெற்றோரின் நிறைவேறாத ஆசைகள், பள்ளி முதலாளிகளின் பணவெறி, தனிப்பயிற்சி ஆசிரியர்களின் தொழிற்போட்டி என பச்சைக் குழந்தைகள் பெரும் பாரங்களை சுமக்கிறார்கள். மதிப்பெண் கொடுமையோடு பல்வேறு பிற இம்சைகளையும் அவர்கள் சந்திக்கிறார்கள். ஆங்கிலப் பள்ளி நடத்துவதால், ‘தமிழில் பேசாதே’ என்று கொடுமைப்படுத்துவது; அப்படியேப் பேசினால் தண்டனை வழங்குவது போன்ற நிகழ்வுகளும் நடக்கின்றன. ‘பட்லர் ஆங்கிலம்’ சொல்லிக் கொடுத்து, தமிழ், ஆங்கிலம் எனும் இரண்டு மொழிகளின் மீதான திறமைகளையும் நாசமாக்கி, குழந்தைகளின் மொழி ஆளுமை, சிந்திக்கும் ஆற்றல், தன்னம்பிக்கை அனைத்தையும் அடித்து நொறுக்கி விடுகிறார்கள்.

உயர்கல்விக்கான ‘கட் ஆஃப்’ மதிப்பெண்கள் பற்றி மட்டுமே கவலைப்படும் மாணவர், பெற்றோர், கல்வி வியாபாரிகள் எல்லோருமாகச் சேர்ந்து மொழிகளை, மொழித் திறன்களை முற்றிலுமாகப் புறக்கணிக்கின்றனர். இதன் விளைவாக, முதுகலைப் பட்டம் வாங்கியவர்களுக்குக்கூட தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ ஒரு கடிதம் எழுதத் தெரியாது. நான்கு வார்த்தைகள் கோர்வையாகப் பேசத் தெரியாது. சிந்திப்பதைப் பற்றி கேட்க வேண்டியதே இல்லை.

இவ்வளவு மதிப்பெண்கள் வாங்கும் தமிழக மாணவ மாணவியர் ஏன் தேசியப் போட்டிகளில் அதிகமாக தேர்வாவதில்லை. எடுத்துக்காட்டாக, ஐ.ஐ.டி., ஜிப்மர் போன்ற நுழைவுத்தேர்வுகளில் அவர்கள் மிளிர்வதில்லையே, ஏன்? ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற அகில இந்தியத் தேர்வுகளிலும் இதே பின்னடைவுதானே காணப்படுகிறது? . பத்தாம் வகுப்புத் தேர்வில் அதிக மதிப்பெண் வாங்கும் மாணவர் பனிரெண்டாம் வகுப்பில் காணாமல் போய்விடுவதும், பனிரெண்டாம் வகுப்புத் தேர்வில் அதிக மதிப்பெண் வாங்கும் மாணவர் தேசிய நுழைவுத்தேர்வுகளில் காணாமற் போய்விடுவதும்தானே நடக்கிறது?
school-education
இவர்களில் மிகப் பெரும்பான்மையோர் ஆளுமைகளாக முகிழ்ப்பதில்லையே, ஏன்? கடந்த பத்தாண்டுகளில் பத்தாம் வகுப்பில் 475-க்கு அதிகமான மதிப்பெண்களும், பனிரெண்டாம் வகுப்பில் 115௦-க்கு அதிகமான மதிப்பெண்களும் வாங்கிய மாணவ மாணவியர் என்ன ஆனார்கள், என்ன சாதித்தார்கள் என்று அரசோ, கல்லூரி ஆசிரியர்களோ, ஆய்வாளர்களோ, யாராவது ஏதாவது ஆய்வு செய்திருக்கிறார்களா?

இந்த மதிப்பெண் வீக்கம், கல்வி வியாபாரம் போன்ற பிரச்சினைகள் குறித்து கூடிப்பேச, விவாதிக்க, மேற்கொண்டு செயலாற்ற கருத்தரங்கம் ஒன்று ஏற்பாடு செய்திருக்கிறோம். எதிர் வரும் மே மாதம் 29-ம் நாள், வெள்ளிக் கிழமை, சரியாக மாலை 4 மணிக்கு நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகேயுள்ள கஸ்தூரிபாய் மாதர் சங்க அரங்கில் இந்த கருத்தரங்கம் நடைபெறும். அனைவரும் வருக!

ஆர். எஸ். லால்மோகன் சுப. உதயகுமார்