September 23, 2021

மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் அரசியல் பயணத்தைத் தொடங்கினார் கமல்

மதுரை ஒத்தகடையில் இன்று மாலை நடந்த பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் தனது கட்சியின் பெயர் ‛‛மக்கள் நீதி மய்யம்” என அறிவித்து கட்சியின் கொடியையைம் கமல் அறிமுகப்படுத்தினார். முன்னதாககாலை, 7:45 மணிக்கு, அரசியல் பயணத்தை, ராமேஸ்வரத் தில் உள்ள, மறைந்த முன்னாள் ஜனாதிபதி, அப்துல் கலாம் வீட்டில் இருந்து, கமல் துவக்கினார்.

கட்சி பெயர், கட்சி கொடியை அறிமுகப்படுத்தி நடிகர் கமல் பேசியது,

கட்சியின் கொடியில் உற்றுப்பார்த்தால் புதிய தென்னிந்தியாவின் வரைபடம் தெரியும். ஆறு கைகள் ஆறு மாநிலங்களைக் குறிக்கும். நடுவில் இருக்கும் நட்சத்திரம் மக்களாகிய நீங்கள்தான். மக்களையும் நீதியையும் மய்யமாகக் கொண்டு இணைக்கும் கட்சி என்பதால் மக்கள் நீதி மய்யம் என்று பெயர் வைத்திருக்கிறோம்.

தராசின் நடுமுள் நாம். எந்தப் பக்கமும் சாயமாட்டோம். நீங்கள் வலதா, இடதா என்று கேட்கிறார்கள். அதனால்தான் கட்சியின் பெயரிலேயே மய்யம் என்று வைத்திருக்கிறோம்’

சினிமா நட்சத்திரமாக இல்லாமல் ,உங்கள் வீட்டு விளக்காக இருப்பேன். 37 ஆண்டுகளாக அமைதியாக நற்பணியை செய்து கொண்டிருந்த கூட்டத்தின் ஒரு பகுதிதான் இது. கடந்தவை கடந்தவைகளாக இருக்கும்; ஆனால் மறந்தவையாக இருக்காது. இங்கு பணத்திற்கு பஞ்சமில்லை, நல்ல மனதிற்குதான் பஞ்சம். எங்கள் நற்பணிகளுக்கு இடைஞ்சலாக சில அரசுகள் இருந்தன .  அதனை மறக்க மாட்டோம். நல்ல கட்சிக்கு வாக்களித்தீர்கள் என்றால் ஆண்டுக்கு ரூ.6000 இல்லை ரூ.6 லட்சம் கிடைத்திருக்கும். நாங்கள் சமூக சேவகர்களாக வந்துள்ளோம். செய்ய வேண்டியதை செய்தாலே போதுமானது” என்றார்.

மேலும் தங்கள் கட்சி கொள்கை குறித்து விளக்கிய போது ,’நல்ல முதல்வர்களுக்கு இருக்கும் கொள்கை தான் எனக்கு உண்டு.நான் ஓட்டுக்கு பணம் கொடுக்க மாட்டேன்.எனக்குப் பிறகும், நாலைந்து தலைமுறைக்கு இந்த கட்சி இருக்க வேண்டும். கல்வியை தனியாரிடம் கொடுத்துவிட்டு மது வியாபாரத்தை அரசு நடத்துவது வாடிக்கையாகிவிட்டது. சாராயத்தை யார் வேண்டுமானாலும் விற்கலாம். கல்வியை அப்படி விடமுடியுமா? எல்லா தரப்பினருக்கும் தரமான கல்வி போய்ச் சேர வேண்டும்.

படித்த இளைஞர்கள் பலர் வேலைவாய்ப்பின்றி உள்ளார்கள். அதை மாற்ற முடியும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும். சாதி, மதம் அறவே நீக்கப்பட வேண்டும். ஊழலை குறைத்தால் மின்சாரம் வரும். நான் மட்டும் ஊழலை ஒழிக்க முடியாது; நீங்களும் வாருங்கள் சேர்ந்து ஊழலை ஒழிப்போம்.

எனக்கு வயது 63; நான் 40 வருட ஆட்சிக்காக வரவில்லை. மக்கள் நீதி மய்யத்தில் யாரும் நிரந்தர முதல்வராக இருக்க மாட்டார்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் குவாட்டரும், ஸ்கூட்டரும் நீடிக்காது. இலவசம் இருக்காது. ஆனால், மற்றவர்களுக்கு ஸ்கூட்டர் வாங்கித் தரும் பொருளாதாரத்தை ஏற்படுத்துவேன்” என்று கமல் பேசினார்.