October 18, 2021

மகாராஷ்டிரா முதல்வரானார் தேவேந்திர பட்னாவிஸ்!

மகாராஷ்ட்ரா மாநிலத்தின் 27-வது முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை பதவியேற்றார். அவருக்கும் அவரது தலைமையிலான மற்ற அமைச்சர்களுக்கும் மாநில கவர்னர் வித்யாசாகர் ராவ் பதவிப் பிரமாணம் மற்றும் ரகசிய காப்புறுதி பிரமாணம் செய்து வைத்தார்.மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ.க. தலைவர் அமித் ஷா, மத்திய மந்திரிகள், பா.ஜ.க. மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே உள்ளிட்ட ஏராளமான அரசியல் பிரமுகர்கள் பங்கேற்றனர்.
maha cm
288 தொகுதிகளை கொண்ட மராட்டிய சட்டசபைக்கு கடந்த 15–ந் தேதி தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் பா.ஜனதா 122 தொகுதிகளை பெற்று தனிப்பெரும் கட்சியாக திகழ்கிறது. ஆனால் ஆட்சி அமைக்க 145 இடங்கள் தேவை என்பதால், கூட்டணி ஆட்சி அமைக்க தனது பழைய நட்பு கட்சியான சிவசேனாவுடன் நடந்து வரும் பேச்சுவார்த்தையில், இதுவரை உடன்பாடு ஏற்படவில்லை.

இதனால் பா.ஜனதா தனித்து சிறுபான்மை அரசை அமைக்க முன்வந்தது. அக்கட்சி சார்பில் முதல்–மந்திரியாக நாக்பூரை சேர்ந்த 44 வயது தேவேந்திர பட்னாவிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் கடந்த செவ்வாய்க்கிழமை கவர்னர் வித்யாசாகர் ராவை நேரில் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அப்போது பதவி ஏற்ற நாளில் இருந்து 15 நாட்களுக்குள் சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபிக்கும்படி அவருக்கு கவர்னர் உத்தரவிட்டார்.

இந்த நிலையில் முதல்–மந்திரி பதவி ஏற்பு விழா மும்பை வான்கடே மைதானத்தில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. மராட்டிய அரசியல் வரலாற்றில் 1995–ம் ஆண்டு சிவசேனா– பா.ஜனதா கட்சிகள், காங்கிரஸ் அல்லாத கூட்டணி அரசை அமைத்தன. அப்போது சிவசேனா தலைமையில் அந்த அரசு அமைந்தது. ஆனால் தற்போது முதல் தடவையாக பா.ஜனதா ஆட்சி அமைத்துள்ளது. இது மராட்டியத்தில் காங்கிரஸ் அல்லாத 2–வது அரசு ஆகும்.

 தேவேந்திர பட்னாவிஸ்!வாழ்க்கைச் சுருக்கம்

புதிய முதல்வராகியுள்ள மகாராஷ்டிரா மாநில பா.ஜ., தலைவரான இவர் 1970, ஜூலை 22ல் நாக்பூரில் சாதாரண நடுத்தர குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை கங்காதரராவ் பட்னாவிஸ், பா.ஜ., சார்பில் நாக்பூர் மேலவை உறுப்பினராக இருந்தார். 1987ல் புற்றுநோயால் இறந்தார். தேவேந்திர பட்னாவிஸ் இளம் வயதிலேயே தன்னை ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் இணைத்துக் கொண்டார். நாக்பூர் சட்டக்கல்லூரியில் ஐந்து ஆண்டு படித்து பட்டம் பெற்றார். வணிக மேலாண்மையில் பட்டமேற்படிப்பும் படித்துள்ளார். அம்ருதா ரானடே என்பவரை 2006ல் மணந்தார். இவர்களுக்கு திவிஜா எனும் பெண்குழந்தை உள்ளது.

1989ல் வார்டு உறுப்பினராக தனது அரசியல் பயணத்தை துவங்கினார். 21ம் வயதில் நாக்பூர் மாநகராட்சி உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1997ல் 27 வயதில் நாக்பூர் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தியாவிலேயே இரண்டாவது இளம் மேயர் எனும் பெருமை பெற்றார். 1999ம் ஆண்டிலிருந்து மகாராஷ்டிரா சட்டசபைக்கு நாக்பூர் தொகுதியிலிருந்து, தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறார்.
Maha cm. 2
பா.ஜ., யுவ மோர்ச்சா எனும் இளைஞர் அணியின் தேசிய துணைதலைவராக 2001ல் பொறுப்பேற்றார். மகாராஷ்டிரா பகுதியின் பா.ஜ., பொதுசெயலாராக 2010ல் நியமிக்கப்பட்டார். பா.ஜ., முதல் முதல்வர்; தற்போதைய மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் தென்மேற்கு நாக்பூர் தொகுதியில் போட்டியிட்டு, 58,942 ஓட்டுகள் வித்தியாசத்தில் வென்றார். மகாராஷ்டிர மாநிலத்தில் பா.ஜ., சார்பில் பொறுப்பேற்கும் முதல் முதல்வர் எனும் பெருமை பெற்றார்.