September 29, 2021

மகனுக்கு ஆண் துணை தேடும் தாய்! – எங்கே போகும் இந்த பாதை??!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த சந்தீப் என்பவருக்கு கடந்த 2012ம் ஆண்டு டேட்டிங் இணையதளம் ஒன்றின் மூலம் கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த கார்த்திக் என்ற பிராமணர் அறிமுகமாகியிருந்தார்.முதலில் நட்பாக துவங்கிய அவர்களின் பழக்கம் காலப் போக்கில் காதலாக மாறியுள்ளது.
gay marrages india
இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவுக்கு சென்ற அவர்கள், தங்களின் காதல் பற்றி பெற்றோர், உறவினர்களிடம் தெரிவித்துள்ளனர்.இதனை கேட்ட இருவீட்டார்களில் சிலர் அதிர்ச்சியடைந்தாலும், சிலர் அவர்களின் காதலை ஏற்றுக் கொண்டுள்ளனர்.

இறுதியில் இரு வீட்டாரும் அவர்களின் ஆசையை நிறைவேற்றி வைக்க முடிவு செய்த்தையடுத்து, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.
இதையடுத்து கடந்த ஏப்ரல் மாதம் கலிபோர்னியாவில், சந்தீப் மற்றும் கார்த்திக் பாரம்பரிய இந்து முறைப்படி தங்கள் குடும்பத்தார் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.- இது பழைய செய்தி!

மும்பையில் இருந்து வெளியாகும் ஒரு பத்திரிகையில் மணமக்கள் தேவை பகுதியில் பத்மா ஐயர் என்ற பெண் இதுவரை இல்லாத வகையில் ஒரு விளம்பரத்தை கொடுத்து இருந்தார். ‘36 வயதுள்ள, ஒரு தொண்டு நிறுவனத்தில் பணிபுரியும் எனது மகன் ஹரிஷ் அய்யருக்கு, 25 முதல் 40 வயது வரை உள்ள, நல்ல வேலையில் இருக்கும், விலங்குகள் மீது அன்பு கொண்ட, சைவ மணமகன் தேவை’ என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த விளம்பரம் பலரின் புருவத்தை உயர்த்தியது. இந்த விளம்பரத்தை படித்த பலர் சமூக வலைத்தளங்களில் இந்த விளம்பரத்தை வைத்து ஒரு விவாதமே நடத்தியுள்ளனர். இதில் பலரும் தங்களது கண்டனங்களை வெளியிட்டனர். ஓரினச்சேர்க்கையாளர்கள் மட்டுமே இந்த நடவடிக்கைக்கு ஆதரவு கொடுப்பார்கள். இந்தியாவில் ஓரினச்சேர்க்கை சட்டவிரோதம் என்ற நிலையில், இதுபோன்ற தன் பாலின திருமணங்களுக்கு மற்ற அனைவரும் கடும் கண்டனம் தான் தெரிவிப்பார்கள் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

இதுதொடர்பாக ஹரிஷ் அய்யரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, ‘‘இந்த விவாதங்கள் பற்றி எனக்கு கவலை இல்லை. அதேபோல இது நமது நாட்டில் சட்டபூர்வமானதா, சட்டவிரோதமானதா? என்பது பற்றியும் கவலை இல்லை. என்னுடைய துணையை தேர்வு செய்வது எனது உரிமை என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது’’ என்றார்.-இது இப்போதைய செய்தி

இது குறித்து நம்மிடம் பேசிக் கொண்டிருந்த டாக்டர் செந்தில் வசந்த்”முன்னடியெல்லாம் நான் மேரேஜே பண்ணிக்கப் போறதில்லை. கட்டைப் பிரம்மச்சாரியாவே இருந்துடப்போறேன்’ என்று சில ஆண் பிள்ளைகள் கேஷுவலா சொல்வதை கேட்டிருக்கிறோம். இனி இந்தியாவில் சீரியசாக இப்படி ஒரு சம்பவம் நடக்கப் போகிறது.அல்ல்து நீங்கள் குறிப்பிட்டது மாதிரி ஆணுக்கு.ஆணுக்கும்தாம் கல்யாணம் நடக்கும்.

ஆமாம்… இன்றைய நிலையில் இந்திய மக்கள் தொகை கணக்குப்படி பெண் குழந்தைகள் பிறப்பு சதவீதத்தில் ஏற்பட்ட சரிவு அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளன. பெண் சிசுக்கொலை, ஆண் குழந்தையே போதும் என்ற மனநிலையால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக கூறி, மத்திய, மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட் குட்டு வைத்துள்ளது.‘ஆசைக்கு ஒரு பெண்; ஆஸ்திக்கு ஒரு ஆண்’ என்று குழந்தைகள் பிறப்பு குறித்து தமிழகத்தில் அந்தக் கால பெரியவர்கள் கூறுவது வழக்கம். அந்த காலத்தில் ஒரு குடும்ப உறுப்பினர்களே ‘ஒரு மினி கிராமம்’ அளவுக்கு பெருகி கிடந்த காலம் உண்டு. வண்டி கட்டி வெளியூர்களுக்கு ஒரு குடும்பமே சென்று வரும். ஆண்டுதோறும் ‘குழந்தைகள் அறுவடை’ என்று இருந்த காலம் மெல்ல மாறியது. பெருகி வரும் பிள்ளைகளால் வேலைவாய்ப்பு இல்லாமை, குடும்ப வறுமை, சமூகத்தில் குற்றங்கள் போன்றவை அதிகரிக்கத் தொடங்கியது.
woman may 21
இதனை தொடர்ந்து கடந்த 1980ம் ஆண்டில் குடும்ப கட்டுப்பாடு திட்டம் தமிழக அரசு சார்பில் கொண்டு வரப்பட்டது. ‘நாம் இருவர்; நமக்கு இருவர்’ என்ற வாசகங்கள் பொது இடங்கள், வீட்டு சுவர்களில் இடம் பெற துவங்கின. இதற்கு பிறகு தமிழகம் உட்பட பெரும்பாலான மாநிலங்களில் ஒரு குடும்பத்துக்கு 2 குழந்தைகள் என்ற மனநிலைக்கு பெற்றோர் மாறத்தொடங்கி விட்டனர்.தமிழக அரசு குடும்ப கட்டுப்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் ஊக்கத்தொகை, அரிசி உள்ளிட்ட பொருட்களையும் வழங்கியது. இருபாலரும் கருத்தடை செய்யலாம் என்றாலும், ஆண்களை விட பெண்களே கருத்தடை ஆபரேஷன்களை அதிகம் செய்து கொள்கின்றனர்.

அப்படி குடும்ப கட்டுப்பாடு திட்டம் தீவிரமடைந்தபோது குழப்பமும் தலைதூக்கியது. 2 ஆண் குழந்தைகளோ அல்லது 2 பெண் குழந்தைகளோ பிறக்கும்போது, பெற்றோர் மனதில் நமக்கு பெண் / ஆண் குழந்தை இல்லையே என்ற ஏக்கம் ஏற்பட்டது. விளைவு… 2 குழந்தைகளை பெற்ற பிறகு மூன்றாவது முயற்சியில் இந்த ஏக்கம் கனியலாம் என்ற யோசனை தோன்றுகிறது.

குழந்தை பிறக்கும்போது ஏற்கனவே உள்ள குழந்தைகள் பிறந்தால், ஆண் குழந்தை என்றால் ஏற்றுக்கொள்கின்றனர். பெண் குழந்தை என்றால், ‘ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் இருக்கும்போது, இதையும் வளர்த்து ஆளாக்கி கட்டி கொடுக்கணுமே’ என்ற பயத்தில் பிறந்தவுடன் கொன்று விடுகின்றனர். அதுதான் சிசுக்கொலை. தமிழகத்தில் ஒரு காலத்தில் உசிலம்பட்டியில் பரபரப்பாக பேசப்பட்டதே அந்த சம்பவம்தான்.‘மூக்கில் நெல்மணியை போடுவது, கள்ளிப்பால் ஊற்றுவது’ உள்ளிட்டவைகளில் பெற்றோர் அல்லது உடனிருப்போர் இந்த கொடிய வேலைகளில் ஈடுபடுகின்றனர். தற்போது இம்முறை தமிழகத்தில் கட்டுக்குள் வந்தாலும், ஆங்காங்கே ஒரு சில இடங்களில் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.ஒரு சில பெற்றோர் ஸ்கேன் சென்டர்களில் தங்களுக்கு முதல் குழந்தை என்று பொய் சொல்லி, என்ன குழந்தை என்பதை அறிந்து கொண்டு கருக்கொலை செய்து விடுகின்றனர்.

பிகார் மாநிலத்தில் கடந்த 2013ம் ஆண்டில் பெண் சிசுக்கொலை தொடர்பாக 159 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பஞ்சாப், ஹரியானா, டில்லி, குஜராத், இமாச்சலப்பிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் சிசுக்கொலைகள் அதிகரித்து வருவது அதிர்ச்சி அளிக்கிறது. கருவிலேயே குழந்தைகளை கண்டறிந்து அழிக்கும் வேலைகள் இந்த மாநிலங்களில் அதிகரித்து வருவதாக இணையதள தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய மக்கள் தொகை 2001ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு, பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் 927 ஆக இருந்தது. 2011ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 914 ஆக குறைந்தது. அடுத்த 10 ஆண்டுகளில் ஆயிரம் ஆண்களுக்கு சுமார் 875 பெண்கள் என்ற விகிதத்தில் பெண் குழந்தைகள் சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலை நீடித்தால் நாம் செய்தி தொடக்கத்தில் கூறியதுதான் நடக்கும். பிரதமர் மோடியும் இந்த விஷயத்தில் தனது ஆழ்ந்த கவலையை தெரிவித்திருக்கிறார். தற்போதைய நிலவரப்படி இந்திய மக்கள் தொகை சுமார் 128 கோடி. இதில் ஆண்கள் சுமார் 66 கோடி, பெண்கள் 62 கோடி. ஒரு நிமிடத்திற்கு இந்தியாவில் 51 குழந்தைகள் பிறக்கின்றன.ஒரு பொதுநல வழக்கில் பெண் குழந்தைகள் சரிவு விஷயத்தில் மத்திய, மாநில அரசுகள் கூடுதல் அக்கறை காட்ட வேண்டுமென சுப்ரீம் கோர்ட் தனது கண்டிப்பை தெரிவித்துள்ளது. எதிர்காலத்திட்டம் நாட்டை வளப்படுத்தும் விஷயத்தில் இருப்பது நல்ல விஷயம்தான்… அதே நேரத்தில் இதுபோன்ற அச்சுறுத்தும் விஷயங்களுக்கும் அரசு அக்கறை காட்ட வேண்டுமென பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.இதையெல்லாம் நானா யோசிச்சி சொல்லலை.. ரீசண்டா சில டெய்லி பேப்பர்லே வந்த நியூஸ்தான். ஆனா யோசிக்க வேண்டிய,அலச வேண்டிய செய்திங்கறதை மறந்துட்டாங்க” என்றார்