May 13, 2021

போலீஸ் ஸ்டேசனுக்கு போனாலே பாத்ரூமில் வழுக்கு கை, கால் உடையுமா?

சாலையில் நடந்து போவோரிடம் செயின் பறிப்போர், அடிதடி, ரகளையில் ஈடுபடும் ரவுடிகள் சிலர் போலீஸில் பிடிபட்டு விரணைக்காக காவல்நிலையத்துக்கு அழைத்துச் செல்லும்போது, அங்குள்ள பாத்ரூமில் வழுக்கிவிழுந்து கையை உடைத்துக்கொள்வது வழக்கமாகி விட்ட சூழலில் சென்னையில், போலீசாரை மிரட்டியதாக கைது செய்யப்பட்ட சமூக ஆர்வலரின் கை உடைந்த சம்பவம், விஸ்வரூபம் எடுத்துள்ளது. சென்னை அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் தேவேந்திரன். சமூக ஆர்வலரான இவர், மது விற்பனை செய்து வந்ததாகக் போலீசார் குற்றம் சாட்டி இருந்தனர்..

இந் நிலையில் போலீசாரை தேவேந்திரன் மிரட்டுவது போன்ற ஆடியோ ஒன்று வெளியானது. அதில், அம்பத்தூர் மதுவிலக்கு பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் நாதமுனி, ஆய்வாளர் ஜார்ஜ் மில்லர் உள்ளிட்ட காவலர்களை ஒருமையிலும், கெட்ட வார்த்தைகளால் திட்டியும் பேசி உள்ளார். முதல்வரை சந்தித்து உங்களுக்கு ஆப்பு வைப்பேன் எனவும் மிரட்டியுள்ளார். இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

ஆடியோவை அடுத்து, மிரட்டப்பட்ட காவலர்கள் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், அம்பத்தூர் மது விலக்குப் போலீசார் தேவேந்திரனை கைது செய்தனர். அப்போது, மேம்பாலத்தில் இருந்து தவறி கீழே விழுந்ததில் அவரது ஒரு கை உடைந்து விட்டதாக போலீசார் கூறியுள்ளனர். கைதான தேவேந்திரனின் முகத்திலும் காயம் ஏற்பட்டுள்ளது. போலீசார், தங்கள் பாணியில் மிக மிக கனிவோடும், அன்போடும் விசாரித்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

போலீசாரை மிரட்டிய தேவேந்திரன், தற்போது கையில் கட்டுடன் நிற்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியானது. இந்நிலையில், இது தொடர்பாக விளக்கமளிக்க, மாநில மனித உரிமைகள் ஆணையம் சென்னை மாநகர காவல்துறை ஆணையருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.