December 9, 2021

போலீஸாக இருந்த 5 கொலையாளிகள் கைது! – ஐகோர்ட் பாராட்டு

தமிழகத்தையே உலுக்கிய சாத்தான்குளம் வியாபாரிகளான தந்தை, மகன் மரண வழக்கை கொலை வழக்காக பதிவு செய்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்–-இன்ஸ் பெக்டர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், தலைமை காவலர் முருகன், முத்துராஜ் ஆகியோரை அதிரடியாக கைது செய்தனர். இந்த வழக்கில் தலைமை காவலர் ரேவதியை தொடர்ந்து சப்–இன்ஸ்பெக்டர் ஒருவரும், மற்றொரு காவலரும் அப்ரூவராகிறார்கள்.

சாத்தான்குளம் வியாபாரிகளான ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீசாரால் கைது செய்யப்பட்டு, கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இது தொடர்பாக கோவில்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தனது கணவர், மகன் ஆகிய 2 பேரும் போலீசாரால் தாக்கப்பட்டு உயிரிழந்ததாக, ஜெயராஜின் மனைவி செல்வராணி மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

மேலும், மதுரை ஐகோர்ட்டும் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது. கோவில்பட்டி மாஜிஸ்திரேட் பாரதிதாசன் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டது. அதன்பேரில், மாஜிஸ்திரேட் விசாரணை நடத்தினார். ஆனால், விசாரணைக்கு போலீசார் ஒத்துழைக்கவில்லை என்று மாஜிஸ்திரேட், ஐகோர்ட்டில் புகார் தெரிவித்தார். அதன்பேரில், இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்த கோர்ட் உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் சாத்தான்குளத்தில் முகாமிட்டனர்.

நெல்லை சி.பி.சி.ஐ.டி. துணை போலீஸ் சூப்பிரண்டுகள் அனில்குமார், முரளிதரன், இன்ஸ்பெக்டர்கள் பிறைச்சந்திரன், உலகராணி, சரவணக்குமார் ஆகியோர் தலைமையில் 12 குழுக்கள் அதிரடியாக விசாரணையில் இறங்கியது. மொத்தம் 3 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 11 இன்ஸ்பெக்டர்கள், 40 சப்–-இன்ஸ்பெக்டர்கள், போலீசார் உள்ளிட்ட குழுவினர் பல்வேறு இடங்களிலும் சென்று, ஒரே நேரத்தில் விசாரணை மேற்கொண்டனர்.

சாத்தான்குளம் மெயின் பஜார் காமராஜர் சிலை அருகில் உள்ள ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரது செல்போன் கடையின் அருகில் உள்ள மற்ற கடைக்காரர்களிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் வீட்டுக்கு சென்றும் குடும்பத்தினரிடமும் விசாரணை நடத்தினர்.

அதேபோன்று ஒரு குழுவினர், சாத்தான்குளம் போலீஸ் நிலையத்துக்கு சென்று, அங்கு ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய 2 பேரும் போலீசாரால் தாக்கப்பட்டதாக கூறப்படும் இடங்களில் ஏதேனும் தடயங்கள் உள்ளதா? என்பது குறித்தும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். இதற்கிடையே,சி.பி.சி.ஐ.டி. போலீசில் நேற்று பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்.) நகல், கோவில்பட்டி கோர்ட்டில் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக, சென்னையில் இருந்து சி.பி.சி.ஐ.டி. போலீஸ் ஐ.ஜி. சங்கர், போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் ஆகியோர் தூத்துக்குடிக்கு வந்தனர். அங்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாரை சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள்.

தொடர்ந்து அவர்கள் மாலையில் சாத்தான்குளம் போலீஸ் நிலையத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அவர்கள், ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரது வீட்டுக்கு சென்று, குடும்பத்தினரிடம் விசாரித்தனர். தொடர்ந்து சாத்தான்குளம் மெயின் பஜாரில் உள்ள ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரது செல்போன் கடையையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.

இதற்கிடையே, சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் தடயவியல் நிபுணர்கள் நேற்று 2–-வது நாளாக ஆய்வு நடத்தினர். அங்கு தந்தை–-மகன் தாக்கப்பட்டதாக கூறப்படும் இடத்தில் கிடைத்த தடயங்களை சேகரித்து பதிவு செய்தனர்.

கோவில்பட்டி கிளை சிறையிலும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மாலையில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

கொலை வழக்குப்பதிவு

சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் தீவிர விசாரணையில், ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய 2 பேர் மீதும் ஊரடங்கை மீறியதாகவும், செல்போன் கடையை மூடாமல் தகராறு செய்ததாகவும் சாத்தான்குளம் போலீசார் தவறாக வழக்குப்பதிவு செய்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த முதல் தகவல் அறிக்கையில் திருத்தம் செய்யப்பட்டு சட்டப்பிரிவு 302 கொலை முயற்சி வழக்காக மாற்றப்பட்டுள்ளது.

தொடர்ந்து ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய 2 பேர் மீதும் தவறான வழக்குப்பதிவு செய்த போலீஸ் சப்-–இன்ஸ்பெக்டர் ரகு கணேஷ் மற்றும் தந்தை–-மகனை போலீஸ் விசாரணைக்கு அழைத்து சென்ற போலீஸ் சப்–-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், போலீஸ்காரர்கள் முருகன், முத்துராஜ் உள்ளிட்ட 5 பேர் மீதும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் இந்திய தண்டனை சட்டம் 302–-வது பிரிவின்படி கொலை வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும், இந்த விவகாரத்தில் சாத்தான்குளம் சப்-–இன்ஸ்பெக்டராக பணியாற்றிய ரகு கணேஷை நேற்று இரவு சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவருக்கு 15 நாள் நீதிமன்ற காவல் அளித்து தூத்துக்குடி கோர்ட் உத்தரவிட்டது. வரும் 16–ம் தேதி அவர் மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

தலைமறைவாகி இருந்த நிலையில், சப்–-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், தலைமை காவலர் முருகன், முத்துராஜ் ஆகியோரும் சிபிசிஐடி போலீசாரால் இன்று காலை கைது செய்யப்பட்டனர். அவர்களை இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என தெரிகிறது.

மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய 5–-வது நபரான இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் கங்கைகொண்டான் செல்லும் வழியில் சிபிசிஐடி போலீசார் வழிமறித்து விசாரணைக்கு அழைத்து சென்றனர். தூத்துக்குடி சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து இன்ஸ்பெக்டர் ஸ்ரீதரிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணைக்குப் பிறகு அவர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டுள்ள அனைவரிடமும் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

இந்த வழக்கில் ஏற்கனவே தலைமை காவலர் ரேவதி அப்ரூவராக மாறிய நிலையில் சிபிசிஐடி விசாரணையில் திடீர் திருப்பங்கள் ஏற்பட்டு உள்ளது. சாத்தான்குளம் சிறப்பு சப்–-இன்ஸ்பெக்டர் பால்துரை மற்றும் காவலர் முத்துராஜ் ஆகியோரும் அப்ரூவராகிறார்கள்.

இன்று 2 மணி நேரம் மதுரை ஐகோர்ட் கிளை நீதிபதிகள் விசாரணை நடத்தினார்கள். இதன் பின்னர் உத்தரவு ஒத்தி வைக்கப்பட்டது.