October 16, 2021

போர் விமான பைலட்டான புற்றுநோய் சிறுவன்! வீடியோ

டெல்லியில் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் அகில இந்திய மெடிக்கல் கவுன்சில் மருத்துவ மாநாடு நடந்தது. இதில், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 11 வயது சிறுவன் சாந்தன் தன் பெற்றோருடன் கலந்து கொண்டான். அந்தச் சிறுவனை மீடியா நிருபர்கள் பேட்டிகண்டனர். அப்போது புற்றுநோய் சிகிச்சைக்காக தான் வந்துள்ளதாக அந்த சிறுவன் கூறினான். இதையடுத்து, தன்னார்வலர்கள் உதவியுடன் 12 லட்சம் ரூபாய் நிதி திரட்டின மீடியாக்கள். இந்த சிறுவனுக்கு இப்போது தீவிர சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது.
pilot boy
ஆனாலும், சிறுவன் சாந்தனுக்கு சிறு வயது முதல் போர் விமானத்தில் பறக்க வேண்டும் என்று தணியாத ஆசை உண்டு. இதுகுறித்து சாந்தன் தந்தை கிரீஸ் மீடியாக்களிடம் கூற, இதற்காக அரியானா மாநிலம் அம்பாலாவில் உள்ள இந்திய விமானப்படை அதிகாரிகளிடம் உதவி கேட்கப்பட்டது. இதையடுத்து, விமானப்படை பைலட்கள் அணியும் சீருடை சிறுவன் சாந்தனுக்காக தயாரிக்கப்பட்டது. இன்று காலை அம்பாலா விமானப்படை விமான தளத்துக்கு சிறுவன் அழைத்து வரப்பட்டான். அங்கு சிறுவனுக்கு மிடுக்கான விமானப்படை சீருடை அணிவிக்கப்பட்டது. ஸ்டைலான ரேபான் கண்ணாடி, விமானிகளுக்கான ஹெல்மெட் ஆகியவற்றை அணிந்து கொண்டு, போர் விமானத்தின் காக்பிட் அறைக்குள் சென்ற சிறுவனுக்கு விமானத்தை இயக்குவது தொடர்பாக அடிப்படை பயிற்சிகள் வழங்கப்பட்டது. குறுகிய தூரம் விமானமும் இயக்கிக் காண்பிக்கப்பட்டது.

பயிற்சியின் முடிவில் அந்த சிறுவனுக்கு போர் விமானங்கள் இயக்குவது தொடர்பான சான்றிதழ் வழங்கப்பட்டது. இதுகுறித்து சிறுவன் சாந்தனின் தந்தை கிரீஸ் கூறுகையில், “அவனது வாழ்நாளில் இது மிகச்சிறந்த நாள். சிறு வயது முதல் அவன் ஏங்கிக் கொண்டிருந்த விமான கனவு இன்று பலித்துவிட்டது. அவனது முகத்தில் ஏற்பட்ட புன்னகையை கட்டுப்படுத்த முடியவில்லை. புற்றுநோயுடன் போராடிக் கொண்டிருக்கும் அவனுக்கு முழு மனதுடன் உதவி செய்ததற்காக விமானப்படை அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

ஆனால், விமானப்படை அதிகாரிகளோ, “போர் விமானத்தில் பறப்பதைவிட, புற்றுநோய் அதிக ஆபத்தானது. புற்றுநோயுடன் போராடிக் கொண்டிருக்கும் சிறுவனின் விமான சாகசம் உண்மையிலேயே பாராட்ட வேண்டிய ஒன்றாகும்” என்று மகிழ்ச்சி தெரிவித்தனர்.

 

செய்தியை வீடியோ வடிவில் பார்க்க::https://www.youtube.com/watch?v=Yy7EGojP0v8

 

தகவல் உதவி :http://www.jannalmedia.com/dpages.php?id=2445