September 25, 2021

போர்க்களத்தில் ஒரு பூ’ தடை…? எஸ்வி சேகர் நடத்திய புது நாடகமா..! * ஆல்பம்

விடுதலைபுலிகளால் நடத்தப்பட்ட ரேடியோவில் ஊடகபிரிவில் பணியாற்றிய இசைப்பிரியா இலங்கை ராணுவத்தால் கொடூரமாக கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட புகைப்படங்களும், வீடியோக்களும் கொஞ்ச காலங்களுக்கு முன்பு இணையத்தில் வெளியாகி உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தமிழர்களின் ரத்தவாடையை நுகர்ந்தபடி இனப்படுகொலைக்கு உத்தரவிட்ட சர்வதேச போர்க்குற்றவாளி ராஜபக்ஷேவின் இலங்கை ராணுவத்தின் அந்த கொடூர முகத்தின் இன்னொரு வலுவான ஆதாரம் இந்த இசைபிரியாவின் கோரமான படுகொலை நிகழ்வு.இந்த நிகழ்வை அடிப்படையாக வைத்து ‘போர்க்களத்தில் ஒரு பூ’ என்ற திரைப்படம் சமீபத்தில் படமாக்கப்பட்டது.


ராணுவத்தின் பிடியில் சிக்கிய ஒரு பெண் தனது முந்தைய சூழலை நினைத்துப்பார்க்கும் வகையில் உருவாக்கப்பட்ட அந்த ‘போர்க்களத்தில் ஒரு பூ’ படத்தில் இசைப்பிரியாவின் குடும்ப சூழலும், அவர் பணி செய்த சூழலும் அதன்பிறகு ராணுவத்தின் பிடியில் சிக்கிய சூழலும் காட்சிகளாக விவரிக்கப்பட்டுள்ளது.எந்த இடத்திலும் அல்லது எந்த காட்சியிலும் மிகைப்படுத்தப்படாமல் யதார்த்த சூழலில் மிக நேர்த்தியாக அந்த காட்சிகளை இயக்குனர் வடிவமைத்திருந்தார். ராணுவ முகாமில் சிக்கி கால்களில் சங்கிலியோடு உடைகள் களையப்பட்டு கொடூரமாக கொடுமைபடுத்தப்பட்ட சூழலிலும் இசைப்பிரியாவின் உறுதியும், உணர்வும் பார்ப்பவர்கள் நெஞ்சை நெகிழச் செய்யும்.

சர்வசே மன்றத்தில் போர்க்குற்றவாளியாக நிலை நிறுத்தப்படவேண்டிய ராஜபக்ஷே பற்றியோ, இந்திய ராணுவத்தை பற்றியோ, விடுதலைபுலிகளின் இறுதிகட்ட போர் குறித்தோ அல்லது எந்த விதத்திலும் ஒரு காட்சியிலும் மிகைப்படுத்தப்படாத சூழலில், வசனங்களிலும் யாரையும் குற்றப்படுத்தாமல் அதே நேரம் நடந்த சம்பவங்களை அப்படியே நேர்த்தியாக கொடுத்திருந்தார். இசைஞானியின் நெகிழும் இசைகோர்ப்புக்கு பிறகு இந்த படத்தை தயாரிப்பாளர், இயக்குனரோடு நானும் பார்த்தேன்.

இந்த படத்தை இந்தியாவில் எங்கும் திரையிடக்கூடாது என்று தடை விதிக்கும் அளவுக்கு இந்திய இறையாண்மை யையோ, இந்திய அரசையோ, தமிழக அரசையோ விமர்சிக்கும் அல்லது கொச்சைப்படுத்தும் எந்த காட்சிகளோ, வசனங்களோ இல்லாத ‘போர்க்களத்தில் ஒரு பூ’ படத்தை ஏன் இந்திய தணிக்கைத்துறை தடை செய்தது?

மில்லியன் டாலர் கேள்வி எல்லாம் உங்களுக்கு எழும்ப வேண்டாம்… ஒரே ஒரு கேள்விதான் விரைவில் தேர்தல் நடக்கவிருக்கிறது. ஏற்கனவே, கடந்த தேர்தலின்போது தமிழ் மக்களை வஞ்சித்த துரோக கூட்டங்கள் இடமும், தடமும் தெரியாமல் காணாமல் போயிருக்கிறார்கள். அதில் சிலர் இப்போதுதான் மெல்ல தலைகாட்டுகிறார்கள்.
இந்த சூழலில் மீண்டும் பழைய நினைவுகளை… மறையாத வடுக்களை கீறி பார்த்தால் மிச்சம் இருக்கும் மான மரியாதைகளையும் இழக்க வேண்டி வருமோ என்ற அச்சம்தான் காரணமாக இருக்கும். இதுபோன்ற ஒரு கருத்தத்தைத்தான் டில்லியில் உள்ள தணிக்கைத்துறை சேர்மன் அலுவலகம் கூறியதாக படத்தின் இயக்குனர் கணேசன் கூறியிருக்கிறார்.

தன் நடிப்பாலும், நாடகத்தாலும் எப்போதும் மக்களை சிரிக்க வைக்கும் எஸ்வி சேகர் தான் எப்போதுமே தமிழ் மக்களின் உணர்வுகளுக்கும், தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவுக்கும் எதிரானவன் என்பதை நிரூபித்துக் கொண்டே இருக்கிறார்.இந்த படத்தை தடை செய்த விஷயத்திலும் எஸ்வி சேகரின் பங்கு மிக முக்கியமானது என்ற குற்றச்சாட்டை முன் வைக்கிறார் படத்தின் இயக்குனர் கணேசன்.

இலங்கையில் அப்பாவி தமிழர்கள் மீது நடைபெற்ற இனப்படுகொலையை கண்டித்து தமிழக சட்டமன்றத்தில் அனைத்து கட்சியின் ஆதரவோடு கண்டன தீர்மானம் நிறைவேற்றி தமிழக முதல்வர் ஜெயலலிதா ஒரு வரலாற்று பக்கத்தை உருவாக்கினார்.அந்த தீர்மானம்தான் ‘போர்க்களத்தில் ஒரு பூ’ படத்தின் முதல் காட்சியாக வருகிறது. அப்படியிருக்க அந்த காட்சியை வெட்டி தூக்கி எறியச் சொன்னதோடு, விடாமல் படத்தையும் தடை செய்ய வேண்டும் என தணிக்கைத்துறை தலைவருக்கு ஆலோசனை வழங்கியது எஸ்வி சேகர் என்று இயக்குனர் கணேசன் குற்றம்சாட்டுகிறார்.முதல்வர் ஜெயலலிதாவின் முயற்சியில் தமிழக அரசின் சார்பில் போடப்பட்ட கண்டன தீர்மானத்தை எஸ்வி சேகர் அவமரியாதை செய்திருக்கிறார். இதன் மூலம் தமிழக மக்களையும், தமிழக முதல்வர் ஜெயலலிதாவையும் ஒருசேர எஸ்வி சேகர் அவமானப்படுத்தியிருக்கிறார். இது குறித்து முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து விளக்கம் சொல்ல அனுமதி கேட்டிருக்கிறேன். இந்த தடையை எதிர்த்து சட்டப்போராட்டம் நடத்த முடிவு செய்திருக்கிறேன் என்கிறார் இயக்குனர் கணேசன்.
007
ஏற்கனவே, ஆர்.கே.செல்வமணி இயக்கிய ‘குற்றப்பத்திரிகை’ படமும் இதேபோன்று தடை விதிக்கப்பட்டு சுமார் 14 ஆண்டுகள் கழித்து வெளியானது. மீண்டும் சென்சார் போர்டு இதுபோன்ற தடையை போர்க்களத்தில் ஒரு பூ படத்திற்கு விதித்திருக்கிறது.

உலக அரங்கில் பல நாடுகளில் அங்கு நடக்கும் கொடூரங்கள், விதிமீறல்கள், மனித உரிமை மீறல்கள் திரைப்படங்களில் சுட்டிக்காட்டப்படும்போது அதை அந்த நாடுகள் ஏற்றுக்கொள்கின்றன. அதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் பார்த்துக் கொள்கின்றன. இந்தியாவில் அதிலும் குறிப்பாக தமிழில் இதுபோன்ற யதார்த்தமான படங்கள் குறிஞ்சிப்பூ போல எப்போதோ ஒரு முறைதான் எடுக்கப்படுகிறது. அந்த படங்களையும் தணிக்கைத்துறை பாதுகாப்பு காரணங்களையோ அல்லது தேவையில்லாத காரணங்களையோ கூறி தடை செய்வது சரியான தீர்வாக அமையாது.

‘போர்க்களத்தில் ஒரு பூ’ படம் ஒரு சம்பவத்தின் பதிவுதான். இதை ஏற்க மறுத்து தடை செய்வதால் அந்த படத்தில் சொல்லப்பட்ட கருத்துக்களை உலக அரங்கில் உள்ள தமிழர்கள் உணர்ந்து கொள்ளக்கூடாது என்று மூடி மறைக்க முயற்சிக்கிறது. இதன் காரணமாக இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு உலக அரங்கில் அதிகரிக்கத்தான் செய்யும் என்பது மறுக்க முடியாத உண்மை.

இந்நிலையில் இப்படத்துக்கு சென்சார் மறுக்கப்பட்டதுக் குறித்து எஸ் வி சேகரிடம் விசாரித்த போது, “ படத்தைப் பார்த்து சான்றிதழ் கொடுக்க மூன்று முறை சென்சார் கமிட்டி மறுத்து விட்டது. இப்படி இருக்கும் போது என்னால் தான் தடை என்று பேசுவதெல்லாம் அபத்தம்” என்று சுருக்கமாக தெரிவித்துக் கொண்டார்

கோடங்கி