October 21, 2021

சல்மான்கானுக்கு ஐந்தாண்டு ஜெயில்! நடந்தது என்ன? ரியல் பிளாஷ் பேக் ரிப்போர்ட்!!

2002ம் ஆண்டு குடிபோதையில் கார் ஓட்டி, விபத்து ஏற்படுத்திய வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ள பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து மும்பை அமர்வு நீதிமன்ற நீதிபதி தேஷ்பாண்டே உத்தரவிட்டுள்ளார். மேலும் நஷ்டஈடு வழங்க தேவையில்லை எனவும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. இதனால் சல்மான் கான், உடனடியாக ஆர்தார் சாலை பகுதியில் உள்ள சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
salman 1
இந்த நிலையில், சல்மான் கான் குடித்து விட்டு காரை ஓட்டிய விபத்தில் சிக்கி காலை இழந்த அப்துல்லா ராப் ஷாயிக் (35) என்பவர், ”இந்த விபத்து நடைபெற்ற பிறகு 13 ஆண்டுகளில் என்னை யாருமே பார்க்கவில்லை. எனது குடும்பத்திற்காக நான் சிறுசிறு வேலைகளை செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளேன். நான் தினமும் பல பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகிறேன். இருந்தாலும், சல்மான் கான் மீது எனக்கு எந்த கோபமும் இல்லை. அவரது படங்களை நான் இன்னமும் பார்த்து வருகிறேன். அவருக்கு தண்டனை அளிப்பதை விட எங்களுக்கு இழப்பீடு வழங்குவதே மேலானது.

எனது உடல்நலமும் வேலையும் பாதிப்படைந்துள்ளது.சல்மான் கானுக்கு தண்டனை வழங்கப்பட்டாலும், அது எனக்கு எந்த வகையிலும் பயனளிக்க போவது இல்லை. இழந்த எனது கால்கள் மீண்டும் வரப்போவது இல்லை” என்றார். மேலும் தனக்கு யாரும் எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை என்றார். விபத்து நடைபெற்ற போது அவருக்கு 22 வயது என்பது நினைவில் கொள்ள வேண்டியது.

அதேபோல், சல்மான் கான் ஏற்படுத்திய விபத்தில், உயிரிழந்த நபரின் மனைவி நுருல்லா மெகபூப் ஷெரீப் என்பவர்,”10 லட்சம் இழப்பீடு தொகை வழங்கப்படும் என்று கூறுகிறார்கள். பணவீக்கமும் விலைவாசியும் உயர்ந்துள்ள இன்றைய காலகட்டத்தில் இந்த தொகையை வைத்து என்ன செய்ய முடியும். இந்த தொகையை வழங்குவதற்கு பதிலாக எனது மகனுக்கு வேலை வாய்ப்பு அளித்தால் பயனடையும் வகையில் இருக்கும்” என்று தெரிவித்தார்.

இந்த வழக்குப் பற்றி மினி ஒரிஜினினல் பிளாஷ் பேக் :

12 வருடம் முன்பு இரவொன்றில்..மும்பை பாந்த்ராவில்..சல்மான் கான் தன் வண்டியை…பேக்கரி வாசலில் படுத்திருந்த ஏழைகள் 5 பேர் மீது ஏற்றியதில், ஒருவர் இறக்க, மீதி நான்கு பேருக்கு மரண அடி. சல்மானின் போதாத வேளை, இதை கண்ணால் பார்த்தது ரவீந்திர பாடில் என்ற மும்பையின் கடை நிலை காவலர்.. இவருக்குமே இது போதாத வேளையாய் அமைந்தது..

ரவீந்திர பாடில் கோர்ட்டில் சல்மான் தான் வண்டியை ஓட்டினார் அவர் தான் இடித்தார் என்று ஆணித்தரமாய் சாட்சி சொல்லி எப் ஐ ரும் கைப்பட போட…. சல்மானால் இதில் இருந்து மீண்டு வரவே முடியவில்லை. இதற்கு நடுவில், பாடில் இப்படி சொன்னது, காவல் துறை மேல் அதிகாரிகளுக்கு பிடிக்கவே இல்லை. தினம் தினம் வீட்டுக்கு வந்து தொல்லை கொடுத்து, உன்னுடைய சாட்சியை வாபஸ் வாங்கு என்று கெஞ்சி, மிரட்டி இன்னும் குடும்பத்துக்கும் தொல்லை கொடுத்தனர். இதைவிட, சல்மான் தன் நிபுணத்துவ வக்கீல்களால் ஒரு சாதாரண காவலரை கோர்ட்டில் குடைய, வெறுத்துப்போன பாடில், ஒரு நாள் வீட்டை விட்டு கிளம்பி காணாமல் போனார். போன பாட்டில் மும்பைக்கு 28 கிலோ மீட்டர் அருகில் உள்ள, மஹாபலேஷவர் என்ற சிறிய மலை ஊரில் தங்கிக்கொண்டு, வீட்டில் உள்ளவர்களை தொடர்பு கொண்டு இருந்தார்.
salman 2
அப்போது, கோர்ட்டு நடவடிக்கைகள் ஸ்தம்பித்துப்போனது . சல்மானுக்கு எதிராய் சாட்சி சொன்ன பலரும் பல்டியடிக்க ,ஏன் கார் ஏறிய ஐந்து பேருமே கூட ஒரு ஸ்டேஜில் சல்மானா..? இவர் மாதிரி இல்லையே எங்கள் மேல் இடித்த காரின் டிரைவர் என்று பல்டியடிக்க.., பாடில் மட்டும் தன் சாட்சியில் பிடிவாதமாய் இருக்க.., அப்போதுதான் மும்பை போலிஸ் விழித்துக்கொண்டது.. பாடில் காணாமல் போனதோடு.. லீவ் கூட போடாமல் போனார் என்று.. அவரை, வேலையில் இருந்து தூக்கியதுமட்டும் அல்லாமல், கோர்டில் இந்த காணமல் போன சாட்சியை காவலில் வைக்க ஆவன செய்யப்பட்டது. விதி வலியது.. சாட்சி மற்றும் எப் ஐ ஆர் போட்ட நேர்மையான போலிஸ்காரர் … ஜட்ஜின் ஆணைப்படி சிறப்பு படையினரால் கைது செய்யப்பட்டு, ஆர்தர் ரோடு ஜெயிலில் கிரிமினல்களோடு அடைக்கப்பட்டார். கிரிமினல்களுக்கு, போலிஸ் ஆசாமி கைதாகி ஜெயிலுக்குள் வந்தால் அல்வா மாதிரி… இவர் தனி செல்லில்.. அடைக்கப்பட.. கொஞ்ச நாளிலேயே , டிபி வியாதியும் வந்தது. வேலை திருப்பிதரச்சொல்லி கேட்டு போட்ட மனு எல்லாம் குப்பைக்கூடையில்.. இவரை வெளியில் விட்ட ஒரு சில நாளில்..

இவரின் குடும்பம் இவரை மொத்தமாய் கைகழுவியது, ஜெயிலில் இருந்து வெளியில் வந்து தெருவில் பிச்சை எடுத்து அலைந்து கொண்டிருந்தார். 4ஆவது வார்டில், 189ஆம் பெட்டில், சீவ்டி முனிசிபல் ஆஸ்பத்திரியில் அக்டோபர் 4 2007இல் செத்தும்போனார். இவர் உடலை வாங்க இவர் குடும்பம் கூட வரவில்லை…

நம்ம சல்மான் கான்.. பீயிங் ஹியுமன் என்று ஒரு இமேஜ் மேக் ஓவர் செய்து வலம் வந்தார், பிக் பாசில் குப்பை ஆசாமிகளை வைத்து நடத்திய ஷோக்களில் கோடிகள் கிடைத்தது, சினிமா கைவிடவில்லை. நான் ரொம்ப நல்லவன், என் டிரைவர் தான் இடித்து கொன்றார் என்றெல்லாம் சொன்னதை கோர்ட் ஏற்கவே இல்லை. .. பணபலம், கை தேர்ந்த வழக்கறிஞர்கள், அரசியல்வாதிகள், போலிஸ் வேடமணிந்த ப்ரோக்கர்கள்.. கதறும் ரசிக குஞ்சுகள் என்று யாராலுமே தடுத்து நிறுத்த முடியவில்லை… பாடிலின் சாட்சியையும்,எப்ஐஆரையும்.

கோர்ட் தீர்ப்பு மட்டும் 5 வருடம் என்று இல்லாவிட்டால்.. மாம்பழ மனிதர்களும், வாழைப்பழ குடியரசும் என்று ராபர்ட் வாத்ரா சொன்னது நிரூபிக்கப்பட்டிருக்கும்.

இதனிடையே சல்மான்கானிடம் நீதிபதி தேஷ்பாண்டே விசாரித்தபோது, ‘‘சம்பவத்தின் போது நான் கார் ஓட்டவும் இல்லை, மது அருந்தவும் இல்லை. என்னுடைய டிரைவர் அசோக் சிங் தான் காரை ஓட்டினார்” என்று பரபரப்பு வாக்குமூலம் அளித்தார்.

டிரைவர் அசோக் சிங், நீதிமன்றத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். அப்போது, நடிகர் சல்மான்கான் அளித்த வாக்குமூலத்துக்கு அவர் வலுசேர்க்கும் வகையில், விபத்துக்குள்ளான காரை நான் தான் ஓட்டினேன் என்று குறிப்பிட்டார். இரு தரப்பு வாதமும் கடந்த மாதம் 21-ந் தேதியுடன் முடிவுக்கு வந்தது. இதை தொடர்ந்து நீதிபதி தீர்ப்பை மே 6 ந்தேதி வழங்குவதாக தீர்ப்பு கூறினார்.

அதன் படி இன்று தீர்ப்பு கூறபட்டது. முன்னதாக 11.05 மணிக்கு வக்கீலுடன் சல்மான்கான் கோர்ட்டுக்கு வந்தார். அவரது குடும்பத்தினரும் கோர்ட்டுக்கு வந்திருந்தினர்.சரியாக காலை 11.15 மணிக்கு நீதிபதி தேஷ் பாண்டே தீர்ப்பை வாசித் தார். சல்மான்கான் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் நிரூபிக்கப்பட்டி ருப்பதாகவும் அவர் குற்றவாளி என்றும் நீதிபதி தீர்ப்பு கூறினார்.
salman 3
நீதிபதி தனது தீர்ப்பில் ,”2002-ம் ஆண்டு மும்பையில் நடந்த கார் விபத்து வழக்கில் நடிகர் சல்மான்கான் தான் விபத்து ஏற்படுத்திய காரை ஓட்டிச் சென்றுள்ளார். அப்பொது அவர் குடிபோதையில் இருந்துள்ளார். அது நிரூபிக்கப்பட்டுள்ளது. அவர் லைசென்ஸ் இல்லாமலும் கார் ஓட்டி இருக்கிறார். சல்மான்கான் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளும் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே சல்மான்கானை குற்றவாளி என்று இந்த கோர்ட்டு அறிவிக்கிறது.

இவ்வாறு நீதிபதி கூறியபோது, சல்மான்கான் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடியது. நீதிபதி அவரைப் பார்த்து, ‘‘தீர்ப்பு பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள்’’ என்று கேட்டார். அதற்கு சல்மான் கான் ‘‘நான் நிரபராதி. நான் கார் ஓட்டவே இல்லை’’ என்று கண்ணீர் மல்க கூறினார். அதன் பிறகு நீதிபதி தண்டனை விவரம் பிறபகல் அறிவிப்பதாகக் கூறபட்டது.

அதன் படி நீதிபதி தேஷ் பாண்டே இன்று பிற்பகல் சல்மான்கானுக்கு 5 ஆண்டுகள் தண்டனை வழங்கி தீர்ப்பு கூறினார். தீர்ப்பு வழங்கியதை தொடர்ந்து சல்மான் கான் மும்பை ஆர்தர் சிறைசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவருக்கு வரும் வெள்ளிக்கிழமை வரை ஜாமின் வழங்கி மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டது.

தகவலில் உதவி :Prakash Ramaswami’