September 29, 2021

பொழுதெல்லாம் எங்கள் செல்வம் கொள்ளை கொண்டு போகவோ? – நாங்கள் சாகவோ?’

வரும் மக்களவைத் தேர்தலில் மொத்தம் ரூ.30 ஆயிரம் கோடி செலவிடப்படும் என்று நிதி மேலாண்மை சேவைகள் நிறுவனமான சி.எம்.எஸ். மேற்கொண்ட ஆய்வின் முடிவு தெரிவித்துள்ளது. இதில் மூன்றில் ஒரு பங்கு கணக்கில் வராத கருப்புப் பணமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.1996ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் ரூ.2,500 கோடி செலவிடப்பட்டது. பின்னர் 2009 மக்களவைத் தேர்தலில் ரூ.12 ஆயிரம் கோடி செலவிடப்பட்டது. இப்போது அது ரூ.30 ஆயிரம் கோடியாக உயர்ந்திருக்கிறது. இது ஏறக்குறைய அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு இணையான செலவு என்று செய்திகள் தெரிவிக்கின்றன.”ஓட்டுக்கு நோட்டு’ என்ற முறையில் வாக்காளர்களை ஈர்ப்பதற்கு பெரும்பாலும் கருப்புப் பணத்தைத்தான் அரசியல்வாதிகள் செலவிடுவர். குறிப்பாகத் “தேர்தலுக்கு முந்தைய 3 அல்லது 4 நாள்களில் கருப்புப் பணத்தின் புழக்கம் மிக அதிகமாக இருக்கும்’ என்று சி.எம்.எஸ். நிறுவனத் தலைவர் என். பாஸ்கரராவ் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
edit - apr 7
தேர்தலில் பணமே ஆட்சி செய்கிறது என்பது அனைவரும் அறிந்த ரகசியம்தான். “பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியின் பிரசாரத்துக்கு பெரும் நிறுவனங்கள் பக்க பலமாக உள்ளன. அவர் பிரதமராக வந்தால் தங்கள் நிறுவனத்துக்கு பிரதிபலன் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பே இதற்குக் காரணம்’ என்று பா.ஜ.க. பற்றி மத்திய அமைச்சர் கபில் சிபல் கூறியுள்ளார்.

இதேபோன்ற குற்றச்சாட்டுகள் காங்கிரஸ் கட்சியின் மீதும் கூறப்படுகிறது. “காங்கிரஸ், பாஜக ஆகிய இரண்டு கட்சிகளையும் பெரும் முதலாளிகள் மறைமுகமாக ஆதரித்து நிற்பதற்குக் காரணம் நாட்டு நலன் அல்ல, சுயநலமே’ என்று இடதுசாரிக் கட்சிகள் கூறி வருகின்றன. “இந்த இரண்டு கட்சிகளும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள்’ என்று ஆம் ஆத்மி கட்சியும் கூறுகிறது.

இந்த மக்களவைத் தேர்தலையொட்டி வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 23 லட்சம் கோடி கருப்புப் பணம் நாடு திரும்பிவிட்டது என்று நிதி நிர்வாக வல்லுநர்கள் கூறுகின்றனர். இதற்கான அறிகுறிகள் தென்படுவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

பங்குச் சந்தையில் திடீரென புள்ளிகள் உயர்வது, ஹவாலா சந்தையில் ஏற்படும் சுறுசுறுப்பு, தங்கக் கடத்தல் அதிகரிப்பு, வாகனங்கள் மூலம் கடத்தல் பணம் பறிமுதல் இவைகளை இதற்கு ஆதாரமாகக் காட்டுகின்றனர்.

வெளிநாடுகளிலிருந்து கருப்புப் பணத்தை மீட்டுக் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கை தீவிரமானவுடன் விழிப்படைந்த கருப்புப் பண உரிமையாளர்கள் உடனே அந்தப் பணத்தை இந்தியாவுக்குள் கொண்டுவர ஆரம்பித்துவிட்டனர் என்பது அவர்கள் கணிப்பு.

பணமாகக் கொண்டுவர முடியாது என்பதால் தங்கமாக மாற்றி இந்தியாவுக்கு கடத்தி வந்து விட்டார்கள் என்றும் கூறப்படுகிறது. இவ்வாறாக 7,000 முதல் 8,000 டன்கள் வரை தங்கம் நம் நாட்டிற்குள் வந்திருக்கிறது என்பது அவர்கள் கணக்கு.

இவ்வாறு இந்திய அரசியலையே ஆட்டிப் படைக்கும் கருப்புப் பணத்தை மீட்கும் முயற்சியில் இந்திய அரசாங்கம் ஈடுபடாதது ஏன் என்பது பற்றி உச்சநீதிமன்றம் பலமுறை வினா எழுப்பியுள்ளது; அரசின் மெத்தனப் போக்கையும் சாடியுள்ளது. எனினும் பிரதமரும், நிதியமைச்சரும் இதுவரை மெüனம் காத்து வருகின்றனர்.

வெளிநாட்டு வங்கிகளில் ரூ.70 லட்சம் கோடி கருப்புப் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறி, அந்தப் பணத்தை இந்தியாவுக்குக் கொண்டுவரக் கோரி மூத்த வழக்குரைஞர் ராம் ஜெத்மலானி உச்சநீதிமன்றத்தில் 2009ஆம் ஆண்டு ஒரு பொதுநல வழக்கு தொடுத்தார்.

அந்த வழக்கை விசாரித்த இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு, இதுதொடர்பாக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.பி. ஜீவன் ரெட்டியைத் தலைவராகவும், மற்றொரு முன்னாள் நீதிபதி எம்.பி. ஷாவைத் துணைத் தலைவராகவும் கொண்ட 13 கொண்ட உறுப்பினர் சிறப்புப் புலனாய்வுக் குழுவை 2011ஆம் ஆண்டு ஜூலை 4 அன்று அமைத்து ஆணையிட்டது.

இதனை எதிர்த்து மத்திய அரசின் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மார்ச் 26 அன்று விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள் மத்திய அரசுக்குக் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கப்பட்டுள்ள பணத்தைக் கொண்டு வருவதற்கு எந்தவொரு முயற்சியும் செய்யப்படவில்லை. அந்தக் கருப்புப் பணத்தையெல்லாம் இங்கே கொண்டு வந்திருந்தால் நாட்டின் பொருளாதாரம் உயர்ந்திருக்கும். தனிநபர் வருமானமும் உயர்ந்திருக்கும். நாம் செலுத்தி வருகிற 30 விழுக்காடு வருமான வரி குறைக்கப்பட்டிருக்கும்.

1947ஆம் ஆண்டிலிருந்து இந்த 65 ஆண்டுகளில் வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தை இங்கே கொண்டு வருவது பற்றி யாரும் சிந்திக்கவில்லை. அரசும் 65 ஆண்டுகளாக தனது பங்களிப்பை செய்யத் தவறிவிட்டது.

மத்திய அரசு அதைச் செய்திருந்தால் நாங்கள் அதில் தலையிட்டு சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கும் நடவடிக்கையை மேற்கொண்டிருக்க மாட்டோம்.

“நாட்டின் பொருளாதார நலனைக் கருத்தில் கொண்டு பல்வேறு நாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்புப் பணம் இங்கே கொண்டு வரப்பட வேண்டும். அதைச் செய்வதற்கு மத்திய அரசு தவறிவிட்டது என்று இந்த நீதிமன்றம் கருதுகிறது’ இவ்வாறு இரண்டு நீதிபதிகள் அமர்வு கூறி மத்திய அரசின் மனுவை தள்ளுபடி செய்து ஆணையிட்டுள்ளது.

இத்தனைக்கும் பிறகு இப்போது, “கருப்புப் பணம் பதுக்கி வைத்திருக்கும் இந்தியர்களின் விவரங்களைத் தர சுவிட்சர்லாந்து மறுக்கிறது. இந்த நடைமுறையை அந்நாடு தொடர்ந்து கடைப்பிடித்தால் ஜி20 போன்ற சர்வதேச கூட்டமைப்பில் இந்தப் பிரச்னை பற்றி இந்தியா முறையிட நேரும்’ என்று ப. சிதம்பரம் கூறியுள்ளார்.

2009 ஏப்ரல் ஜி20 மாநாட்டுத் தீர்மானம், “சுவிட்சர்லாந்து வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்களின் விவரங்களை இனிமேலும் ரகசியம் காக்கக் கூடாது’ என்று கூறுகிறது.

சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் வைத்திருக்கும் வங்கிக் கணக்குகளின் விவரங்களை பகிர்ந்து கொள்ளும் வகையில் இருநாடுகளும் மேற்கொண்ட இரட்டை வரி விதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தத்தையும் அந்நாடு செயல்படுத்த மறுத்து வருகிறது.

இது தொடர்பாக தொடர் நடவடிக்கை எடுக்க இந்திய அரசுதவறிவிட்டது. அதற்குக் காரணம், கருப்புப் பண முதலைகள் எல்லாம் அரசுக்கு நெருக்கமானவர்களாகவே இருப்பதுதான். அவர்கள் நலனுக்காகவே அவதாரம் எடுத்து வந்தவர்கள், அவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுவர் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்? “பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன்’ என்பது இதுதான்.

தேர்தலில் பணப்புழக்கம் தொடர்பான தகவல் தெரிவிக்க வசதியாக, “கட்டணமில்லா தொலைபேசி சேவை’ தொடங்கப்பட்டுள்ளது என வருவாய் வரித்துறை முதன்மை ஆணையர் எஸ். ரவி தெரிவித்துள்ளார்.

தேர்தலில் கருப்புப் பணப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் நோக்கில் தேர்தல் ஆணையத்துடன் வருமான வரித் துறை இணைந்து பல்வேறு கண்காணிப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

நாடெங்கும் ஊழல் “ஆக்டோபஸ்’ போல பற்றிப் படர்ந்து நிற்கிறது. அது பெற்ற தலைப்பிள்ளையான கருப்புப் பணம் இப்போது எங்கும் ஆல்போல் விரிந்து அருகுபோல் வோரோடி நிற்கிறது. அரசியல்வாதிகள்தாம் அதன் செல்லப்பிள்ளைகள்; பிறகு கேட்க வேண்டுமா?

தேர்தலில் பணம் பட்டுவாடா செய்வதைத் தடுப்பதற்காக தேர்தல் ஆணையம் வாகனச் சோதனையை அறிமுகப்படுத்தியது. ஓர் இடத்தில் அவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட ரூ.35 லட்சம் பணத்தில் ரூ.8.25 லட்சத்தை காவல் துறையினரே பதுக்கிக் கொண்டனர். அதற்காக சிறப்புக் காவல் உதவி ஆய்வாளர் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இப்படியிருந்தால் யாரைத்தான் நம்புவது?

இந்தியாவின் அறிவு வளமும், செல்வ வளமும் உலகம் அறிந்தது. அதனால்தான் கொள்ளையடிப்பதற்காகவே படையெடுப்புகள் நிகழ்ந்தன. இந்தப் படையெடுப்புகளின் இறுதியில் வந்ததே ஆங்கிலேயர் ஆதிக்கம். இந்தியா விடுதலை பெற்ற பிறகும் கொள்ளைகள் நிற்கவில்லை.”

பொழுதெல்லாம் எங்கள் செல்வம் கொள்ளை கொண்டு போகவோ? – நாங்கள் சாகவோ?’

என்று கேட்டார் மகாகவி பாரதி.தேர்தலிலும் தேசத்திலும் கொள்கையில் போட்டியிருந்தால் நல்லது; கொள்ளையில் போட்டியிருந்தால் அது நல்லதல்ல.

உதயை மு. வீரையன்