October 18, 2021

பொருளாதாரம், கலாசாரம், அரசியல் ஆகிய துறைகளையும் மாற்றியமைக்கும் ”கிருமிகள்”

பாரதிக்கு நவீன உயிரியலில் பரிச்சயம் இருந்திருந்தால் அவர் “எங்கெங்கு காணினும் கிருமியடா!’ என்று பாடியிருப்பார். கிருமிகள் இல்லாத இடமேயில்லை. எங்கும் எதிலும் அவை நீக்கமற நிறைந்துள்ளன. உண்மையில் கல் தோன்றி மண் தோன்றாக் காலத்திலேயே தோன்றிவிட்ட மூத்த குடி கிருமிதான்.கடலடி வென்னீர் ஊற்றுகளிலும், நிலக்கரிச் சுரங்கங்களில் கனன்று கொண்டிருக்கிற கரிக் குழிகளிலும் கூடக் கந்தக டையாக்சைடை உண்டு ஜீவிக்கிற கிருமிகள் உள்ளன. பாறை விரும்பிகள், வெப்ப விரும்பிகள் என்ற ஜாதிக் கிருமிகள் எரிமலையிலிருந்து வழியும் லாவாவில் கூட வாழ்கின்றன.
edit nov 13
விஞ்ஞானிகள் கந்தக சல்பைடு நச்சைக் கந்தக ஆக்சைடாக மாற்றிச் சுற்றுச்சூழலைச் சுத்தமாக்கக் கந்தகம் தின்னும் கிருமிகளைப் பயன்படுத்துகிறார்கள். கந்தகச் சேர்மங்களாகக் கிடைக்கும் தாதுக்களிலிருந்து தங்கம், வெள்ளி போன்ற உலோகங்களைப் பிரித்தெடுக்கும் உலோகப் பொறுக்கி ஆல்காக்கள் என்ற ஜாதிக் கிருமியைப் பயன்படுத்தித் தீர்ந்து போன சுரங்கங்களில் மிச்ச சொச்சமிருக்கும் உலோகங்களைச் சுரண்டியெடுக்கிறார்கள்.

அமெரிக்காவிலுள்ள நகை உற்பத்திச் சாலைகளில் கணிசமான அளவில் சேதாரத் தங்கமும் வெள்ளியும் கழிவுநீரில் கலந்து விடுகின்றன. அவற்றை மீட்டெடுக்கவும் உலோகப் பொறுக்கி ஆல்காக்கள் உதவுகின்றன. நியுமெக்சிகோவிலுள்ள ஆறுகளின் நீரில் லட்சம் கோடியில் பல பங்குகள் என்ற அளவில் கரைந்துள்ள தங்கத்தைப் பிரித்தெடுக்க குளாரல்லா வல்காரீஸ் என்ற ஆல்கா பயன்படுத்தப்படுகிறது.

தரையடிப் பாறைகளின் ஊடாகக் கசிந்து வெளிப்படும் ஊற்று நீரில் தங்கம், செம்பு, யுரேனியம், இரும்பு போன்றவற்றின் தாதுக்கள் கலந்திருக்கும். அந்த நீரில் வாழ்கிற சில கிருமிகள், நீரில் கரையாத சேர்மங்களை உண்டு, நீரில் கரைகிற சேர்மங்களாக மாற்றி விடுகின்றன.

தயோ பாசிலி என்ற வகை நுண்ணுயிரிகளின் ஜீன் அமைப்பை மாற்றியமைத்து அவற்றின் உலோகப் பொறுக்கித் தன்மையை அதிகரிக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.கொசுக்களை லார்வா நிலையிலேயே தாக்கியழிக்கிற லாம்போர்னல்லா என்ற நுண்ணுயிரியைப் பயன்படுத்திக் கொசு உற்பத்தியைத் தடுக்கும் உத்திகளை பெர்க்லி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஜேன் வாஷ்பர்ன் என்பவர் உருவாக்கியிருக்கிறார்.

பூஞ்சை ஓர் அலாதியான ஜாதி நுண்ணுயிரி. சில பூஞ்சைகள் தாவரங்களிலும் விலங்குகளிலும் மனிதர்களிலும் நோயை உண்டாக்கும். 1945-இல் வங்க தேசத்தில் நெற் பயிரை பூஞ்சை தாக்கியழித்ததால் உணவுப் பஞ்சமும், அரசியல் கொந்தளிப்பும் ஏற்பட்டன.

அதே காலகட்டத்தில் அயர்லாந்தில் பைட்டோப்தோரா என்ற பூஞ்சை, உருளைக்கிழங்கு விவசாயத்தை முற்றாக அழித்ததன் மூலம் அங்கு உள்நாட்டுப் போர் மூள வழி வகுத்தது.சில சாதிப் பூஞ்சைகளை வேறு சாதிப் பூஞ்சைகளின் மேல் பரப்பி இரண்டையுமே ஒழித்துக் கட்டும் உத்திகள் உருவாக்கப்பட்டுள்ளன. அதன்மூலம் சுற்றுச் சூழலுக்குப் பாதகம் ஏற்படாத வகையில் பயிர்களுக்கு வரும் பல நோய்களைக் கட்டுப்படுத்த முடிகிறது.

டேவிட் பிஷப் என்ற ஆங்கிலேய விஞ்ஞானி மரபு மாற்றம் செய்யப்பட்ட வைரஸ்களைப் பயன்படுத்தி பைன் மரத்தைத் தாக்கும் அந்துப் பூச்சிகளின் புழுக்களை அழிக்கும் உத்தியை உருவாக்கியிருக்கிறார். பாகுலோ வைரஸ் எனப்படும் நுண்ணுயிரி அந்தப் புழுக்களில் நோயை உண்டாக்கி அவற்றை அழித்துவிட்டுத் தானும் அழிந்து விடும். அவற்றைக் கிருமியுலகின் தற்கொலைப் படை எனலாம்.

மனிதனின் குடலுக்குள் பாக்டிரியங்கள், வைரஸ்கள் ஒற்றை செல் உயிரிகள் எனப் பல்வேறு ஜாதிகளைச் சேர்ந்த நூறு டிரில்லியன் கிருமிகள் வசித்து வருகின்றன. மனித உடலில் உள்ள செல்களின் மொத்த எண்ணிக்கையே அதில் பத்திலொரு பங்குதான்.தாயின் கருப்பையிலிருக்கிற வரை சிசுவின் உடலில் ஒரு கிருமி கூட இராது. சிசு பூமிக்கு வரும் போதுதான் அதன் உடலுக்குள் எல்லா வகையான கிருமிகளும் புகுந்து கொள்கின்றன. அவை சிசுவின் குடலில் போய்த் திரளும். அவற்றில் சில நன்மை செய்பவை. சில தீமை செய்பவை. இன்னும் சில கிருமிகள் எதுவும் செய்யாமல் சும்மா உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும். லாக்டோ பாசிலஸ் என்ற கிருமி சிசுவின் குடலில் பால் செரிக்க உதவுகிறது.

சிசு வளர வளரக் காற்றிலிருந்தும், உணவிலிருந்தும், நீரிலிருந்தும், மண்ணிலிருந்தும் மேலும் பல ஜாதிக் கிருமிகள் அதன் குடலில் குடியேறுகின்றன. அவை நாம் உண்பதையே உண்டு வளர்சிதை மாற்றப் பொருள்களையும் கழிவுப் பொருள்களையும் உண்டாக்கும்.

அப்பொருள்கள் மனித உடலின் ஜீரண மண்டலத்தின் வளர்சிதை மாற்றச் செயல்பாடுகளில் தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. அதன்மூலம் கிருமிகளின் விருப்பத்திற்கேற்ப மனிதனின் உடலும் மனதும் மாற்றியமைக்கப்படுகின்றன.குடல் வாழ் கிருமிகள் மனிதனின் உணவு விருப்பத்தையும், சுவைத் தேர்வையும் மாற்றி விடுவதாக கலிபோர்னியாப் பல்கலைக்கழகத்தின் கார்லோ மாலி என்ற ஆய்வரின் குழு கண்டுபிடித்திருக்கிறது.

வெளியுலகத்தில் நடப்பதைப் போலவே குடலுக்குள்ளும் பல்வேறு ஜாதி நுண்ணுயிரிகளுக்கிடையில் பரிணமிக்கவும், உயிர் வாழவும் அவசியமான ஊட்டச் சத்துகளைக் கைப்பற்றுவதற்கான போட்டி நிலவுகிறது. அதற்கு உதவும் பல சூழ்ச்சிகளை நுண்ணுயிரிகள் கையாளுகின்றன.உதாரணமாகக் கார்போ ஹைட்ரேட் எனப்படும் மாவுச் சத்தில் செழித்து வளரக்கூடிய பிரிவோடெல்லா ஜாதி நுண்ணுயிரிகள் குடலில் மாவுச் சத்தை உண்ட பின் சில வேதிகளை வெளியிடுகின்றன. அந்த வேதிகள் மனித உடலில் பரவும்போது அவருக்கு மாவுச் சத்து நிறைந்த உணவுகளை உண்ணும் ஆர்வம் மேலிடுகிறது.

அதேபோலக் கொழுப்புச் சத்தில் செழித்து வளர்கிற பாக்டராய்டட் ஜாதி நுண்ணுயிரிகள் கொழுப்பு நிறைந்த உணவின் பேரிலான ஆசை அதிகமாகும்படி செய்கின்றன.அந்த நுண்ணுயிரிகள் வெளியிடும் வேதிகள் ஜீரண மண்டலத்தில் மட்டுமன்றி நரம்பு மண்டலத்திலும் தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. அதன்மூலம் அவை மனநிலை, வலி, இன்பம், சுவை ஆகியவற்றை உணரும் ஏற்பிகளை மாற்றியமைக்கின்றன. அதன் காரணமாக மனித மன நிலையிலும் உணவு விருப்பத்திலும் மாற்றம் ஏற்படுகிறது.

குடியேறிக் கிருமிகள் ஓம்பி எந்த வகையான உணவுகளை அதிகமாக உண்ண வேண்டும் என ஆணை பிறப்பிப்பதைப் போலக் கூடத் தோன்றுகிறது. அவற்றுக்கு இணங்கி வயிற்றை நிரப்புகிறவர்களுக்குப் பருமனர்தல், நீரிழிவு, ஒவ்வாமை, மனநிலையில் ஏற்ற இறக்கங்கள், ஆட்டிசம் போன்ற கோளாறுகள் ஏற்படுகின்றன. நுண்ணுயிரிகள் மனிதன் மனதிலும் உடலிலும் தாக்கம் ஏற்படுத்துகின்றனவோ என்ற சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது.

சாதாரணமாக வீடுகளில் வளர்க்கப்படுகிற பூனையின் உடல் வாசம் எலிகளின் மனதில் கிலியை உண்டாக்கும். ஆனால், எலிகளின் குடல்களில் டாக்சோபிளாஸ்மா கோன்டை என்ற நுண்ணுயிரியைப் புகுத்திய பின் எலிகளின் இயல்பான அச்ச உணர்வு மறைந்தது.அவை துணிச்சலாகப் பூனையின் முன்னால் நடமாடத் தொடங்கியதால் பூனைக்கு எலி வேட்டை எளிதாகிப் போயிற்று. அந்த நுண்ணுயிரிகள் பூனையின் குடலிலும் செழித்து வளர்ந்தன.

வேறு சில நுண்ணுயிரிகள் மனிதர் எதை விரும்பிச் சாப்பிடுகிறாரோ, அதையே தாமும் உண்கிறவாறு தம்மைத் தகவமைத்துக் கொள்கின்றன என்பதும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. ஜப்பானியர்கள் கடல் பாசி கலந்த உணவுகளை விரும்பியுண்கிறார்கள்.அவர்களுடைய குடல்களில் கடல் பாசிகளை உண்ணும் தனித்திறமையுள்ள நுண்ணுயிரிகள் உருவாகியிருக்கின்றன. ஆப்பிரிக்காவிலுள்ள குழந்தைகள் செல்லுலோஸ் நிறைந்த காக்கைச் சோள உணவை உண்கிறார்கள்.

அவர்களுடைய குடல் செலுலோசை ஜீரணம் பண்ணாது. ஆனால் அதற்குள் செலுலோசை உண்டு செரிக்கிற தனித் திறமை கொண்ட நுண்ணுயிரிகள் பரிணமித்திருக்கின்றன.பாலைத் தயிராக்கவும், இட்லி மாவைப் புளிக்க வைக்கவும், ரொட்டி மாவை நொதிக்க வைக்கவும் மதுபானத் தயாரிப்பிலும் யீஸ்ட்கள் என்ற நுண்ணுயிரிகள் உதவுகின்றன. யீஸ்ட்டிலிருந்து புரதம் நிறைந்த உணவுகளைத் தயாரிக்கிறார்கள்.

ஒற்றை செல் ஆல்காக்களிலிருந்து பலவிதமான அமினோ அமிலங்கள் உருவாக்கப்படுகின்றன. அவை மருந்துகளின் உற்பத்தியில் கச்சாப்பொருள்களாக உதவுகின்றன.

பிளேக், டைபாய்டு, அம்மை போன்ற கொள்ளை நோய்கள் தோன்றி மக்களைக் காவு கொண்டபோது, மேலைநாடுகளின் மக்கள் வேறு நாடுகளில் தஞ்சம் புகுந்து அவற்றில் கலாசாரக் கலப்படங்களை ஏற்படுத்தினார்கள்.அமெரிக்காவின் பூர்வ குடிகளான செவ்விந்தியர்களை, டைபாய்டு கிருமிகளைப் பரப்பி இனக் கொலை செய்த பின்னர்தான், ஐரோப்பியர்களால் அங்கு காலனிகளை ஏற்படுத்த முடிந்தது.இவ்வாறு கிருமிகள் பொருளாதாரம், கலாசாரம், அரசியல் ஆகிய துறைகளையும் மாற்றியமைக்கின்றன.

கே.என். ராமசந்திரன்